போராட்ட மாணவர்கள் மீது தடியடி!


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்.
பேருந்துக் கட்டணத்தைக் கிட்டத்தட்ட 2 மடங்காகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்குத் தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
மதுரை மாவட்டம் பசுமலைப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மதிய உணவு இடைவெளி நேரத்தில், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கலைந்து போகுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காவல் துறையினரின் பேச்சை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் திடீரென மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் மாணவர்களின் போராட்டம் மற்ற கல்லூரிகளுக்கும் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரிகளுக்கு அருகே காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாணவர்களின் போராட்டம் இன்று 2ஆவது நாளாகத் தொடர்ந்த நிலையில் கல்லூரிகளுக்கு முன்பு காவல் துறையினர் குவிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மாணவர்கள் போராட்டம் நாளையும் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.