விஷாலை முன்மொழிந்தோர் மிரட்டப்பட்டனரா?


ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலை முன்மொழிந்தோர் மிரட்டப்பட்டனரா என்று விசாரிக்க வேண்டுமெனக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் இருவர் தாங்கள் விஷாலை முன்மொழியவில்லை என்று கூறியதால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் காரணமும் கூறப்பட்டது. ஆனால் தன்னை முன்மொழிந்த சுமதி, தீபக் இருவரும் மிரட்டப்பட்டனர் என்ற விஷால், அவர்கள் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் டிசம்பர் 6ஆம் தேதி சென்னை மாநகர ஆணையரிடத்தில் இது குறித்து மனு அளித்தார். அதில், விஷால் வெளியிட்ட ஆடியோ உண்மையானதா அல்லது பரபரப்பை ஏற்படுத்த ஆடியோவை வெளியிட்டாரா என்றும், விஷாலை முன்மொழிந்தோரை மதுசூதனின் ஆதரவாளர்கள் மிரட்டியும், கடத்தியும் வைத்தனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.