மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

தமிழ் ராக்கர்ஸ் படம் ஓட்டட்டும்: மிஸ்கின்

தமிழ் ராக்கர்ஸ் படம் ஓட்டட்டும்: மிஸ்கின்

சவரக்கத்தி படத்தின் 90% வெற்றியை பூர்ணாவுக்கும் 10% வெற்றியை இயக்குநர் ராமுவுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஜனவரி 22) மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் G.R.ஆதித்யா, இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, இயக்குநர் மிஷ்கின், கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் குமார் உட்படக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “நான் என்னுடைய தம்பியும், இயக்குநருமான ஆதித்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தின் போஸ்டர்களில் என்னுடைய பெயரை பெரிதாகப் போட்டுவிட்டு, அவருடைய பெயரை சின்னதாகப் போட்டிருக்கிறார்கள். இதற்குப் படத்தை வாங்கியவர்கள்தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால்தான் அப்படிப் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாகப் போடுவது பிடிக்காது. நான் இறந்து ஐம்பது வருடங்கள் கழித்தும் என்னைப் பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினாலே போதும். இந்தப் படத்தைப் பலருக்கும் போட்டுக் காட்டினோம். ஒரேயொரு விநியோகஸ்தர்தான் ரொம்ப ஜென்யூனான உடனேயே படத்தை வாங்கிக்கொள்ள முன்வந்தார். அவருக்கு எனது நன்றிகள்..! இந்தப் படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி இசை ஒன்றைக் கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. இயக்குநர் ராம் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய படமான ‘பேரன்பு’ சிறப்பாக வந்துள்ளது. அந்தப் படத்தை அடுத்த வாரம் உலகத் திரைப்பட விழா ஒன்றில் திரையிடவுள்ளனர். கண்டிப்பாக அவர் அந்தப் படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

நடிகை பூர்ணா பற்றி மிஷ்கின் பேசுகையில், “முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்தக் குரலில், சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணாதான். இந்தப் படத்தின் 90% வெற்றியை நான் பூர்ணாவுக்குச் சமர்ப்பிக்கிறேன். 10% வெற்றியை இயக்குநர் ராமுவுக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

“எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள்தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்துவருகிறார்கள். அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்குச் சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை அளித்துள்ளன. திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூகக் கடமை. திரையரங்கில் படம் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். இங்கேயிருப்பவர்கள் பலரும் தியேட்டரில்தான் படம் பார்ப்பீர்கள். ஆனால் ஒருசிலர் திருட்டு டிவிடியில் பார்ப்பீர்கள். பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. திருட்டுத்தனமாக வெப்சைட்டில் போடுவார்கள். அதுவும் ஓடும். அதையும் சிலர் பார்ப்பார்கள். அவங்களும் பொழைக்க வேண்டாமா? பார்க்கட்டும், ஓட்டட்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ராம், “இந்த உலகில் குடிக்க, அன்பைப் பற்றி பேச, படிக்க, கவலையை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம்தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதைப் படிப்பாரா என்று கேட்பார்கள். அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்தப் புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தைப் படிப்பார். என்னுடைய படத்திலும், மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச் சிறந்த கதை இந்தப் படத்தின் கதைதான். சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018