மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

பரவும் மாணவர்கள் போராட்டம்:ஒரு கண்ணோட்டம்!

பரவும் மாணவர்கள் போராட்டம்:ஒரு கண்ணோட்டம்!

அரசுப் பேருந்துகளில் இரு மடங்கு கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து 2ஆவது நாளாக இன்று (ஜனவரி 23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், தஞ்சை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 23) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும் எனக் கூறி, திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. நகர்ப் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் – நத்தம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தரையில் அமர்ந்த அவர்கள் பேருந்து கட்டண விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பேருந்து கட்டண உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தக் கட்டண உயர்வைத் திரும்ப பெறக் கோரியும் கோஷம் எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லப் புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

"தினமும் பேருந்து மூலம் கல்லூரிக்கு வந்து செல்லும் எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.50 இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது புதிய கட்டண உயர்வால் தினமும் ரூ.100 முதல் ரூ.140 வரை பேருந்து கட்டணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினமும் ரூ.100க்கு மேல் செலவு செய்யமுடியாத நிலையில் உள்ளனர். எனவே அரசு பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்" என வேலூரில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடும் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய மாணவ சங்கத்தினர் பேருந்தைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ராஜபாளையம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் அந்த வழியாக வந்த பேருந்தை சிறைபிடித்தார்கள். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள்.

அரசுப் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவிகள் 2ஆவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குந்தவை நாச்சியார் கல்லூரி முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கல்லூரி முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஏழை எளிய மக்கள் அனைவரும் இந்த பேருந்துக் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலில் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பெரம்பலூர் - துறையூர் சாலையில், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ-மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர், வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாகச் சென்ற அவர்கள் சத்தியமங்கலம் – அத்தாணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்டண உயர்வைத் திரும்பக் கோரி கல்லூரி முன்பு திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கோட்டூரில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் தேனி – மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கலில் கல்லூரி மாணவர்கள் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்தக் கட்டண உயர்வால் மாணவர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குப் புதுக்கோட்டை காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களையும் மாணவர்களையும் நேரடியாகப் பாதிக்கும் இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழக அரசு இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் மாணவர் போராட்டம் வெடிக்கும் எனவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018