மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

திமுகவில் அறுவை சிகிச்சை: ஸ்டாலின்

திமுகவில் அறுவை சிகிச்சை: ஸ்டாலின்

திமுகவின் வளர்ச்சிக்காக விரைவில் கட்சியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு இன்று (ஜனவரி 23) எழுதியுள்ள கடிதத்தில், “அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ, அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன் பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் அறிவிப்பு குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சுயமரியாதையையும், சமூக நீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறகடித்துக்கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், “ தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரை தேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பிவந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திமுக சிறகடித்துக்கொண்டே இருக்கிறது” என்றும் பெருமிதத்துடன் அவர் கூறியுள்ளார்.

ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவும், இன - மொழி பாதுகாப்புக்காகவும் திமுக பாடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “தமிழகத்தை இந்தியத் துணைக்கண்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டிய பேரறிஞர் அண்ணா - கலைஞர் வழியில், கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு தவறாமல், திமுகவை அதே வலிவோடும் பொலிவோடும் வீறுநடை போட்டு வெற்றி ப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பினை நாம் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டு, அதை நிறைவேற்றிட வேண்டும்” என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தரங்கெட்டதோர் ஆட்சி, மாநிலத்தின் நலன்களைச் சிதைத்து, சீரழித்துவருகிறது. அந்தக் கேடுகெட்ட ஆட்சியை ஏன் கீழே இறக்காமல் இருக்கிறீர்கள் என்று திமுகவைப் பார்த்துப் பொதுமக்கள் நாள்தோறும் கேள்விக்கணை தொடுத்தவண்ணம் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே என்பதைப் போல, எல்லாருடைய கண்ணும் கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன. நமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. ஜனநாயக நெறி அடர்ந்தது. அதில் கற்களும் முட்களும் தடை ஏற்படுத்தும்போது, அவற்றை அகற்றியெறிய வேண்டிய மராமத்துப் பணியை நாம் மேற்கொண்டாக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், திமுகவின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன; அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் எந்த மாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக்கொள்வதற்காகவே, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கள ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், “பிப்ரவரி 1ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள கள ஆய்வில், திமுகவின் ஆணிவேருக்கு முறையாக நீர்ப்பாய்ச்சி, உரமூட்டுவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ, பேச்சு மூலமாகவோ தெரியப்படுத்தலாம் என்று கூறியுள்ள ஸ்டாலின், “கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 23 ஜன 2018