மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

இரட்டைப் பதவி விவகாரம்: ஹரியானா, சட்டீஸ்கரிலும் சிக்கல்!

இரட்டைப் பதவி விவகாரம்: ஹரியானா, சட்டீஸ்கரிலும் சிக்கல்!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு, நேற்று முன்தினம் (ஜனவரி 21) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதேபோல, ஆதாயம் பெறும்வகையில் இரட்டைப் பதவிகளை வகித்த குற்றச்சாட்டில் சிக்கிய ஹரியானா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள பாஜக எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனப் போர்க்கொடி உயர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் 2015 - 2016 காலகட்டத்தில் நாடாளுமன்றச் செயலாளர்களாகப் பணியாற்றியதாகப் புகார் கிளம்பியது. இதனால், ஆதாயம் பெறும் வகையில் இரட்டைப் பதவி வகித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்த நிலையில், இதேபோன்ற குற்றச்சாட்டு ஹரியானா மாநிலத்திலும் எழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா பாஜக அரசை சார்ந்த 4 எம்.எல்.ஏக்கள் நாடாளுமன்றச் செயலாளர்களாகப் பதவி வகிப்பதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது இவர்கள் பாஜக எம்.எல்.ஏக்களாக தொடர்ந்துவருகின்றனர். “ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களைப் போல, இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்லியும் ஹரியானாவும் ஒரே இந்தியாவில் இருக்கும்போது, சட்டம் வெவ்வேறாக எப்படி இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹரியானா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜஸ்பால் பாட்டி.

இதேபோல, சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள் நாடாளுமன்றச் செயலாளர் பதவியை வகித்து வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி, ஓராண்டுக்கு முன்பே அம்மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது அக்பர்.

“டெல்லியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் முடிவால், சட்டீஸ்கரில் உள்ள 11 பாஜக எம்.எல்.ஏக்கள் நியமனமும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாடாளுமன்றச் செயலாளராக இருந்து, ஆதாயம் பெறும் வகையில் இரட்டைப்பதவி வகித்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதி ஓராண்டு ஆகியும், இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லை” என்று அவர் குறை கூறியுள்ளார். ஆளுநரின் கடிதம் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 20 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்க விவகாரத்தில் ஆம் ஆத்மியும் பாஜகவும் ஒன்றாகக் கைகோத்து உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தது காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கும் வகையில், ஒரு மாத காலத்துக்குப் பிறகே தேர்தல் ஆணையம் இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு, இதுவரை பாஜக தரப்பிலிருந்து பதில் ஏதும் வெளியாகவில்லை.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018