மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

“தமிழக அரசு அறிவித்துள்ள 67 சதவீதம் முதல் 108 சதவீதம் வரையிலான, ரூபாய் 3600 கோடி ரூபாய் அளவிலான பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, இன்று (ஜனவரி 23) திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கட்டண உயர்வைத் தாங்க முடியாமல் போராட்டத்தில் இறங்கியுள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த முடிவை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார்.

கடந்த 19ஆம் தேதியன்று இரவு, தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தது தமிழக அரசு. ஜனவரி 20ஆம் தேதி காலை முதல் இது நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். பத்திரிகைகளிலும், காட்சி ஊடகங்களிலும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்த மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; தமிழக அரசு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து, அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதில், கடுமையான கட்டண உயர்வு இல்லாமலேயே போக்குவரத்து துறையில் ஏற்பட்டிருக்கும் நிதிச்சிக்கலைக் சரிசெய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

“அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்ற இந்த அரசு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என்ற அரசின் கொள்கை முடிவு தொடர்பாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 24.11. 2017 அன்று தெரிவித்த கருத்தின் அடிப்படையில் 3600 கோடி ரூபாய் அளவிற்கு கட்டண உயர்வை அறிவித்திருப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தையும் கபட நாடகத்தையும் காட்டுகிறது.

பொதுமக்கள் போக்குவரத்திற்கான இன்றியமையாத சேவையில் இருக்கும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு என்ற திசைதிருப்பும் காரணங்கள் எல்லாம் திடீர் பேருந்துக் கட்டண உயர்வுக்காக சிரமப்பட்டுத் தோண்டிக் கண்டெடுக்கப்பட்ட காரணங்களாகவே உள்ளன. புதிய பேருந்துகளின் விலை உயர்வும் ஒரு காரணம் என்று கூறியிருந்தாலும், இன்று தி இந்து ஆங்கில பத்திரிக்கையில் போக்குவரத்து செயலாளர் அளித்துள்ள பேட்டியில் "22,000 பேருந்துகளில் 15 ஆயிரம் பேருந்துகளுக்கு மேல் பேருந்துகளின் ஆயுளான ஆறரை வருடங்களைக் கடந்த பேருந்துகள்” என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கட்டணம் குறைவு என்று அரசுத் தரப்பில் வாதிட முயற்சித்தாலும், பத்திரிக்கையில் அதற்கு மாறான செய்திகள் வெளிவந்துள்ளதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீர் செய்வது, வருமானத்தைப் பெருக்குவது, வருவாய் கிடைக்கும் வழித்தடங்கள் அனைத்திலும் அரசுப் பேருந்துகளை இயக்குவது, புதிய பேருந்துகளை வாங்கி எரிபொருள் இயக்கத்திறனை அதிகரிப்பது, நவீன அணுகுமுறையில் விளம்பர உத்திகளை கையாள்வது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க வைக்கவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையாகச் சேரவேண்டிய சலுகைகளை பிடித்து வைத்துக்கொள்ளாமல் காலமுறைப்படி வழங்கவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை செய்யவும் பேருதவியாக இருக்கும்.

நடைமுறைக்குச் சாத்தியமான அப்படியொரு அணுகுமுறையைத் தவிர்த்துவிட்டு, எளிதான வழிமுறையான கட்டண உயர்வு மூலம் மட்டுமே போக்குவரத்துக் கழகங்களை நிர்வகித்திட முடியும் என்று நினைப்பது நியாயமான முறையல்ல. மக்களின் சேவைக்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த அடிப்படை நோக்கத்தை சிதறடிக்கும் விதத்திலும் நாட்டுடைமைத் தத்துவத்தைச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த பேருந்துக் கட்டண உயர்வு, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு, அனைத்து தரப்பு மக்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தி தண்டிப்பதைப் போன்றதாகும்.

இந்தக் கட்டண உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் தாங்க முடியாத இன்னொரு கட்டண சுமை, விலைவாசி உயர்வு ஆகிய இரட்டிப்பு சுமையைத் தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குரியது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 23 ஜன 2018