உலகப் பொருளாதார மாநாடு: இன்று தொடக்கம்!


சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று தொடங்கும் பொருளாதாரக் கருத்தரங்கில் பிரதமர் மோடி உட்படப் பல்வேறு தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.
48ஆவது உலகப் பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று தொடங்குகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ஆசிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் சுவிஸ் சென்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டுத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வதால், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக மட்டும் 9.37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. 5,000 வீரர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, டாவோஸ் நகரில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வாகனங்களைப் பயன்படுத்தி, பனிக்கட்டிகளை அகற்றிவந்தாலும், தொடர்ந்து பெய்யும் பனி மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.