பாப் பாடகர் சிலோன் மனோகர் மறைவு!

பிரபல வில்லன் நடிகரும், பாப் இசைப் பாடகருமான சிலோன் மனோகர் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றிரவு (ஜனவரி 22) காலமானார். அவருக்கு வயது 73.
இலங்கையில் பிறந்த சிலோன் மனோகர் பைலா என்று அழைக்கப்பட்ட இலங்கையின் நாட்டுப்புறப் படல்களை பாப் இசையோடு கலந்து சுராங்கனி என்ற பாடலை எழுதிப் பாடினார். 1970இல் இளையராஜா இசையில் வெளிவந்த ‘அவர் எனக்கே சொந்தம்’ என்ற படத்தில், இலங்கையில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான சுராங்கனி பாடல் பயன்படுத்தப்பட்டது. தமிழில் மலேசியா வாசுதேவன் பாடிய இந்தப் பாடல் தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துப் பிரபலமானது. இதே பாடலை சிலோன் மனோகர் 7 மொழிகளில் பாடியுள்ளார்.
பின்பு சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்கிய இவர் காஷ்மீர் காதலி, தீ , அதே கண்கள், ராஜா நீ வாழ்க, காட்டுக்குள் திருவிழா, மனிதரில் இத்தனை நிறங்களா, மாங்குடி மைனர், ஜே ஜே உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.