ராஜீவ் கொலை வழக்கில் கெடு!

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்தில் 1991ஆம் ஆண்டு மே மாதம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு (எம்டிஎம்ஏ) அமைக்கப்பட்டது. இவ்வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், இவர்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.7 பேரை விடுவிக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது.
ஆனால், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், 7 பேரின் விடுதலைக்குத் தடை விதிக்கப்பட்டது.
அதன்படி, 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி ஆகியோர் தொடர்ந்து விடுதலைத் தொடர்பாக மனு அளிப்பதும், அதனை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் மறுதலிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.