தத்தெடுத்த கிராமத்துக்குப் புத்தகம் நன்கொடை!

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தான் தத்தெடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்குத் தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கிராமங்களைத் தத்தெடுத்து முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட, எம்.பி.க்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எம்.பி.க்கள் கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர்.
அதன்படி, கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவெங்கடேசுவரபுரம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் ஆகிய கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார். இந்த இரு கிராமங்களிலும், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியியிருந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. ஸ்ரீவெங்கடேசுவரபுரம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஒரு குளத்தைத் தூர்வாருவதற்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து இல்லாமல், தன் சொந்தப் பணத்திலிருந்தும், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டியும் பணி மேற்கொள்ளப்பட ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில், ஆசீர்வாதபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை தற்போது அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.