மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

கர்நாடகா: மோடி, ஷா வருகையின்போது பந்த்?

கர்நாடகா: மோடி, ஷா வருகையின்போது பந்த்?

மகதாயி நதிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஜனவரி 25ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 4ஆம் தேதிகளில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன சில கன்னட அமைப்புகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக பாஜக, இந்த போராட்டங்களை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நீர் வழங்கி வருகிறது மகதாயி நதி. இதன் நீரைப் பங்கிடுவதில், கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநிலங்களுக்குள் பிரச்சனை நிலவுகிறது. இதனைத் தீர்ப்பதற்காக நடுவண் மன்றம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன கர்நாடகாவிலுள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகள். வடக்கு கர்நாடகாவிலுள்ள சில மாவட்டங்களில் குடிநீரும் விவசாயப் பாசனமும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

சமீபத்தில் கோவா நீர்பாசனத்துறை அமைச்சர் வடக்கு கர்நாடகாவிற்கு மகதாயி நீரை வழங்க முடியாது என்று பகிரங்கமாக சொன்னதால், இந்தப்பிரச்சனை மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. கோவாவிலும் மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால், அக்கட்சிக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுமென்றும், பிப்ரவரி 4ஆம் தேதியன்று பெங்களூருவில் முழு அடைப்பு செயல்படுத்தப்படும் என்றும் சில கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று மைசூரில் நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார் அக்கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா. அதேபோல, பிப்ரவரி 4ஆம் தேதியன்று பெங்களூருவில் பாஜகவின் பரிவர்த்தனா யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த இரு நிகழ்வுகளுக்குப் பாதிப்பும் ஏற்படுத்தும் வகையில், இந்த முழு அடைப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது கர்நாடக பாஜக. இந்த கன்னட அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சியும் முதல்வர் சித்தராமையாவும் மறைமுக ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”முதல்வராக எட்டியூரப்பா இருந்தபோதும், இந்த அமைப்புகள் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன” என்று கூறியுள்ளார். ”எப்படி பாஜகவின் பேச்சை அந்த அமைப்பினர் கேட்க மாட்டார்களோ, அப்படியே காங்கிரஸின் பேச்சையும் கேட்க மாட்டார்கள். தற்போது மோடி மற்றும் பாஜகவின் மதிப்பு குறைந்து வருகிறது. எனவே, தங்களது கட்சி கூட்டம் தோல்வியடைந்து விடுமோ என்ற பயத்தில், முன்னதாகவே காங்கிரஸின் மீது குறைகூறி வருகிறது பாஜக” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018