சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு!


சென்னையில் கடந்த 13 தினங்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நேற்றுடன் (ஜனவரி 22) நிறைவு பெற்றது.
சென்னையில் இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா, செயின் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திருவிழாவில் 708 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. நேற்றுடன் நிறைவுபெற்ற இந்தப் புத்தகக் காட்சியில் மொத்தம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகமாக விடியல் பதிப்பகத்தின் ‘அம்பேத்கா் இன்றும் என்றும்’ புத்தகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று தினங்களில் 3 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி இப்புத்தகம் முதலிடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு காட்சியில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகளுக்கான வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, நமது மின்னம்பலம் பதிப்பகம் சார்பில் வெளியான எழுத்தாளர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய ‘இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள்’ என்ற புத்தகம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் புத்தகம் ‘தி இந்து’ நாளிதழின் ‘கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடைசி நாளான நேற்று அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததால், அந்தப் புத்தகத்தை வாங்க வந்து வெறும் கையுடன் திரும்பிய வாசகர்களின் சிரமத்துக்கு மன்னிக்கவும். நேரில் வந்து புத்தகம் கிடைக்காமல் திரும்பிச் சென்ற வாசகர்கள், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
இதேபோல் கடந்த ஆண்டின் புத்தகக் காட்சியில் நமது பதிப்பகத்தில் வெளியான எழுத்தாளர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய ‘இந்திய பொருளாதார மாற்றங்கள்’, ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ ஆகிய இரு புத்தகங்களும் அதிக அளவு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.