மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: அரசுக்குப் பாடம் புகட்டும் ‘ஒயிட் போர்டு’ கால் டாக்சி!

சிறப்புக் கட்டுரை: அரசுக்குப் பாடம் புகட்டும் ‘ஒயிட் போர்டு’ கால் டாக்சி!

பொன்னி

பஸ் ஸ்டிரைக் ஆரம்பித்தபோதே எதிர்பார்த்ததுதான் இந்தக் கட்டண உயர்வு. இல்லாத சட்டியில் எப்படி வடை சுட முடியும்? மக்களை முட்டாளாக நினைக்கும்வரை அரசியல்வாதிங்க ரொம்ப ஈசியா மிளகா அரைக்கதான் நினைப்பாங்க. எல்லா தப்பையும் அவங்க பண்ணாலும் தண்டனை என்னவோ மக்களுக்குத்தான். இந்தக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிச்சு ஒண்ணும் ஆகப்போறதில்ல. அதையெல்லாம் யாரும் கண்டுக்கபோறதும் இல்ல. வேறெப்படி எதிர்வினை காட்டுறதுன்னு ஒரு கேள்வி எழுந்தப்ப, பஸ் ஸ்டிரைக் நடந்தப்ப மக்கள் தங்களைப் பழக்கிக்கிட்ட பயண முறை என்னன்னும், அப்போது அரசாங்கத்துக்கு சேராம போன பணம் எங்கே போனது என்ற தேடலுக்கும் கிடைத்த பதில்களைத்தான் இங்கே கொடுத்திருக்கேன்.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு உருவாகத் தொடங்கி இரண்டு வாரம் ஆகுது. பஸ் ஸ்டிரைக் அப்போ எல்லாரும் பயன்படுத்தியது ஆட்டோ, ட்ரெயின், வாடகைக் கார் அப்பறம் நடராசா சர்வீஸ் என்பதுதான் சாமான்யர்கள் மற்றும் அவர்களை சாமான்யர்களாகவே வைத்திருக்கும் அரசின் மனநிலை. இதைத் தாண்டி ‘பேக்-அப் பிளான்’ அல்லது அவசர நடவடிக்கைன்னு எதுவுமே இல்லை. நாளைக்கே மறுபடி ஸ்டிரைக் வந்து எல்லா வண்டியும் நிப்பாட்டுனா என்ன செய்யும் அரசாங்கம்? மற்ற கேள்விகள் மாதிரி விடை தெரியலைன்னு இதைக் கடந்துபோக முடியாதே. அரசாங்கமே இயக்காமல் நின்றுபோன சமயத்துலயும் தனியார் நிறுவனங்கள் எப்படி இயங்கின, அவர்களிடமிருந்து ஏன் எந்த அழுத்தமும் அரசாங்கத்துக்கு வரவில்லை என்பதையெல்லாம் யோசிக்கக்கூட நேரமில்லாமல் அடுத்து என்ன ஏழரையைக் கூட்டலாம் என யோசிக்கப் போய்விட்டார்கள். ஆனால், மக்களுக்கு இது தெரிந்தே ஆக வேண்டிய தகவல்.

நமக்கு நாமே: கார்ப்பரேட் மூளையில் உதித்த திட்டம்

எல்லா கார்ப்பரேட் ஆபீஸ்லயும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னாடி ஒரு Third party ஸ்டால் போட்டாங்க. சொந்தமா கார் / பைக்ல ஆபீஸ் வர்றவங்க வரும்போதும், போகும்போதும் கூட வர விருப்பம் உள்ளவங்களுக்கு ஒரு கட்டணம் நிர்ணயம் செய்து கூட்டிட்டுப் போக அறிவுறுத்தப்பட்டது. அதற்கென்றே இரண்டு மொபைல் அப்ளிகேஷன்கள் இருப்பதாக அங்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. அந்த அப்ளிகேஷன்கள் பெயர் ‘Quick ride’ & ‘S ride’. இது என்ன OLA, Uber share மாதிரி இருக்கேன்னு கேட்டா? ஆமாம், அதே மாதிரி. ஆனால், அதில் பாதிக் கட்டணம்தான். இந்த மாதிரியான கால் டாக்ஸி சங்கதியில் அதிகம் கவனம் எடுக்கப்படும் ‘பாதுகாப்பு’ காரணம் காட்டப்படக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்த காரியம் ஒருபடி மேலே.

கம்பெனியே எல்லோருக்கும் மெயில் அனுப்பி Official mail address மூலமாகவே அந்த அப்ளிகேஷனில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யச் சொன்னது. பலன் மிக விரைவாகவே கிடைத்தது. வேலை செய்பவர் மற்றும் கம்பெனி ஆகிய இரண்டு தரப்புக்குமே பலன் இருந்ததுதான் இதில் ஜாக்பாட்.

கம்பெனிக்கு என்ன லாபம் என முதலில் பாப்போம். எல்லா கம்பெனியிலும் ‘லேட் நைட் கேப்’ என ஒன்று இருக்கிறது. அதாவது 8 மணிக்கு மேல் வேலை செய்தால், கம்பெனி தரும் கார் வசதியின் மூலம் வீட்டுக்குப் போகலாம். ஆனால், அங்கு ஒரு செக் பாயின்ட் இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வண்டி கிடைக்கும். எனவே, ஒருவர் 8:15 மணிக்கு வேலையை முடித்தால் 9 மணி வண்டிக்குத்தான் போக முடியும். இந்த 45 நிமிடத்துக்கு ஒருவரை அலுவலகத்தில் காக்கவைப்பதிலும், 9 மணிக்கு வரும் வண்டிகளில் அவர்களை ஏற்றி அனுப்புவதிலும் ஏற்பட்ட சங்கடங்களைத் தீர்க்க முயற்சி செய்ததன் விளைவாகவே இந்த அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டன. காத்திருக்கும் 45 நிமிடங்களில் ஆபீஸிலிருந்தே வீடு இருக்கும் ஏரியா வரை ஒருவர் டிராப் செய்தால் வேண்டாம் என்பார்களா?

அந்த அப்ளிகேஷன்களில் ரிஜிஸ்டர் செய்து, சென்று சேர வேண்டிய இடத்தைப் பதிவு செய்தால், அந்தச் சமயத்துக்கு அல்லது அதேநேரத்துக்கு அவ்வழியாக பயணப்படக் கூடியவர்களின் பட்டியல் தெரியவரும். அவரவர் வசதிக்கேற்றாற்போல பைக், கார் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரிக்வெஸ்ட் கொடுத்தால் போதும். அவர்களே வண்டியில் ஏற்றிக்கொண்டு, போகும் வழியில எங்கே இறங்க வேண்டுமோ அங்கு இறக்கிவிடுவார்கள். இது கம்பெனிக்கு மிகப் பெரிய லாபம்.

இரவு நேரங்களில் 100 கேப்கள் ஓடும் இடத்தில் இந்த அப்ளிகேஷன்கள் மூலமாக இப்போது 60 முதல் 70 கேப்கள் வரைதான் ஓடுகின்றன. இது காலப்போக்கில் இன்னும் குறையும். சரி, நமக்கென்ன லாபம் எனப் பாத்தால், காசு / நேரம் குறைவு. உதாரணமாக கால் டாக்சியில் 15 கி.மீ போனால் குறைந்தது ரூ.200 ஆகும். அதே இந்த அப்ளிகேஷனில் 50 முதல் 70 ரூபாய்தான் வரும். அது போக உடன் பயணிக்கும் ஆட்கள் அனைவரும் நிறுவனத்தின் ஆட்கள். ஏதோவோர் அசம்பாவிதம் அல்லது பிரச்னைகள் ஏற்பட்டாலும் அலுவலகத்தின் மூலமாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் பயமில்லாமல் பயணம் செய்யலாம்.

பஸ் ஸ்டிரைக் நடைபெற்ற சமயத்தில் மாநிலமே புலம்பிக் கொண்டிருந்தபோது எல்லா MNC கம்பெனிகளும் பிரச்னையே இல்லாமல் இயங்கியதில் அந்த அப்ளிகேஷன்கள் முக்கியப் பங்கு வகித்தன. இந்த ஆப்ஸை எல்லாரும் பயன்படுத்தலாம். நீங்கள் வெளியூருக்குப் போக வேண்டுமென்றாலும் இதில் முயற்சித்துப் பார்த்தால், பேருந்துக்குக் கொடுக்கும் பணத்துக்குச் சமமாகவே இதில் விலை இருக்கும்.

உதாரணமாக சென்னையில இருந்து சேலத்துக்கு போக பேருந்தில் 300 ரூபாய் ஆகிறதென்றால், இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்க புக் பண்ணும்போது, அதைவிடக் குறைவாக அல்லது அதற்கு நிகராக விலை இருக்கும். மேலும் பயண நேரமும் குறைவு. இது பயணிப்பவருக்கும் லாபம்; கார் சொந்தக்காரருக்கும் லாபம். நான்கு பேர் சேர்ந்து சேலம் போக ஒரு கார் புக் செய்தால் தோராயமாக ரூ.1,500 வருகிறதென்றால், அதை பெட்ரோல், டோல்கேட்டுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள் சொந்தக்காரர்கள். இதே மாதிரிதான் லோக்கலில் ட்ராவல் பண்ணும்போதும் இருக்கும். துரைப்பாக்கத்தில் இருந்து போரூர் போக அதிகபட்சம் 70 ரூபாய் வரும். இது அரசு பேருந்து நிரணயித்திருக்கும் விலையை விடக் குறைவு. அதுபோக, இந்த அப்ளிகேஷனில் இருக்கும் வண்டிகள் எல்லாம் White board. எனவே வண்டி ஓட்டுபவர்கள் சம்பளத்துக்கு வேலை செய்யும் டிரைவர்கள் இல்லை. சொந்த வண்டி என்பதால் பார்த்து, பொறுமையாகத்தான் போவார்கள்.

கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்

மொத்தத்தில் தற்போதைய போக்குவரத்து சார்ந்த பிரச்னைகளையும், கால் டாக்சி தட்டுப்பாட்டையும் போக்கவந்த ஆபத்பாந்தவனாகவே Quick Ride and S ride அப்ளிகேஷன்களைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஒயிட் போர்டு வண்டி ஓட்டுபவர் உண்மையாகவே வண்டி ஓட்டத் தெரிந்தவரா, பணம் கொடுத்து லைசன்ஸ் வாங்கிவிட்டு இப்போதுதான் ட்ரைவிங் கற்றுக்கொள்பவரா என்றெல்லாம் பயணிப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. தனி ஒருவருக்காகச் செல்லும் கார்களினால் ஏற்படும் வாகன நெரிசல் காலப்போக்கில் குறையும். இதன் குறைகளும் நிவர்த்தி செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இனியும் அரசாங்கத்தை நம்பாமல் இந்த மாதிரி சர்வீஸ்களைப் பயன்படுத்தி, இயங்காமல் கிடக்கும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பைக் காட்டினால், ஒருநாள் எல்லாம் புரியவரும். அப்போதுதான் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவு செய்யும் ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்படும். தெருவில் போராடிவிட்டு, அரசாங்கம் திணிப்பதை ஏற்றுக்கொண்டு அடங்கிவிடுவார்கள் என்ற மனநிலையிலிருந்து அரசு வெளிவரும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 23 ஜன 2018