சிவாஜி - ஜெமினி: குழப்பத்தில் உருவாகும் செய்திகள்!

ஜெமினி கணேசனின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இதில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்கும் துல்கர் சல்மான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அவர் அழகாக இருக்கிறார். ஜெமினி கணேசனுக்கு இவரைவிட பொருத்தமான நடிகர் யாருமில்லை. இந்தப் படத்துக்கு ‘நடிகர் திலகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று செய்தியைப் படித்தால் நம்ப வேண்டாம்.
Nadigaiyar Thilagam என்று எழுதவேண்டியதை Nadigar Thilagam என்று படித்து ஒரு தவறான செய்தியை உருவாக்கியிருக்கிறார்கள். மலையாளப் பத்திரிகைகள் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட்டிருக்கின்றனர். தற்போது, அதைத் தமிழ்ப் பத்திரிகைகளும் ஓவர்டேக் செய்து வருகின்றன.
நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘நடிகையர் திலகம்’ சாவித்ரியின் வாழ்க்கைக் கதை படமாக உயிர்பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்க, சிறப்புத் தோற்றத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் சில காட்சிகளில் வருகிறார். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி முடிவடைந்தபோது, ஜெமினி வேடத்திலிருக்கும் துல்கரின் சில படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதை அடிப்படையாக வைத்து, அவற்றை ரிலீஸ் செய்த இயக்குநர், ஜெமினி கணேசன் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறார்.
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதைப் புதிய செய்தியாக சொன்னதைக்கூட விட்டுவிடலாம். ‘காதல் மன்னன்’ எனப்படும் ஜெமினி கணேசனை ‘நடிகர் திலகம்’ என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?