மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: உரிமைக் குரலா, ஒழுக்கக் கேடா?

சிறப்புக் கட்டுரை: உரிமைக் குரலா, ஒழுக்கக் கேடா?

அ. குமரேசன்

“இன்று உங்கள் போராட்டச் செய்தியை எழுதுகிறேன். நாளை உங்கள் போராட்டத்தின் வெற்றிச் செய்தியை எழுதுவேன்.”

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அவர்களுடைய கோரிக்கை முழக்கப் போராட்டத்தை வாழ்த்திப் பேசியபோது இவ்வாறு கூறினேன். அவர்கள் ஓர் பாலின ஈர்ப்பாளர்கள். அவர்களுடைய கோரிக்கை, அரசமைப்பு சாசனத்தின் 377ஆவது சட்டப்பிரிவு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பது. அவர்களின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. அது வெற்றி பெற்ற செய்தியை எழுதுகிற வாய்ப்பு இன்னமும் ஏற்படவில்லை.

ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இன்றும் நீடிப்பது சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியது. மாற்றம் குறித்த நம்பிக்கையோடு இருந்த ஓர் பாலின ஈர்ப்பாளர்களின் எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போடுவதாக, ஓர் பாலின உறவு தண்டனைக்குரிய குற்றம்தான் எனக் கூறும் சட்ட விதி தொடரும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. தற்போது, தனது முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தங்கள் போராட்டம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஓர் பாலின உறவாளர் உரிமைகளுக்காகக் களமிறங்கியிருப்போருக்குத் துளிர்த்திருக்கிறது. அந்த வெற்றிச் செய்தியை எழுதுகிற மகிழ்ச்சி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் முளைவிட்டிருக்கிறது.

அர்ஜன்டைனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், இங்கிலாந்து/வேல்ஸ், பின்லாந்து, பிரான்ஸ், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பர்க், மால்டா, உருகுவே, நெதர்லாந்து, நியூஜிலாந்து, நார்வே, போர்ச்சுக்கல், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 26 நாடுகளில் ஓர் பாலினத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் சில மாநிலங்களில் இதை அங்கீகரிக்கும் சட்டம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் இதர 193 நாடுகளிலும், உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நிலையில் உள்ள இரு நாடுகளிலும் இதை அங்கீகரிக்கும் சட்டம் கொண்டுவரப்படவில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான அமைப்புகள் சட்டபூர்வமாகப் பதிவு செய்துகொள்ளவும், அந்த மக்களுக்காகச் செயல்படவும், பரப்புரைகள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளையில், அவர்களுக்கு எதிரான சட்டங்கள் தொடரவே செய்கின்றன. மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய முற்போக்கான நாடுகளிலும் இதைக் குற்றமெனக் கூறும் பழைய சட்டங்கள் நீடிப்பது விசனப்பட வேண்டிய ஒன்றுதான்.

கழுத்துக்கு நேராக கத்தி

இங்குள்ள 377ஆவது சட்டப் பிரிவின் கீழ் தன்பாலின இணையர்கள் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் எதுவும் அண்மைக் காலத்தில் வெளியாகவில்லைதான். ஆயினும், இது அவர்களின் கழுத்துக்கு நேராக நீட்டிக்கொண்டிருக்கிற ஒரு கூரிய கத்தியாக இருக்கிறது. சேர்ந்து வாழும் மாறுபாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள் ஆகியோர் வேறு பிரச்னைகளில் சிக்குகிறபோதுகூட, இந்தச் சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்து வழக்குத் தொடுக்கப்படும் என்று காவல் துறையினரோ இதர அதிகார முகமைகளைச் சேர்ந்தவர்களோ அச்சுறுத்தவும் பணம் கறக்கவும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றவும் ஏதுவாக இருக்கிறது. அவ்வாறு வழக்குத் தொடுக்கப்பட்டால் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் சமூக வெளியில் கூனிக்குறுகி நிற்க வேண்டிய நிலை ஏற்படுமே என்ற கவலையாலும், அந்த இணையர்கள் அதிகார ஆயுதக்காரர்களோடு அனுசரித்துப்போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தக் கட்டாயத்தைச் சட்டம் ஏற்படுத்துகிறது.

இக்கட்டுரை விவாதிக்கப்போவது அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றியல்ல. அது எப்படி அரசமைப்பு சாசனத்துக்கே முரணானதாக, அது உறுதியளிக்கிற அடிப்படை உரிமைகளை மறுப்பதாக இருக்கிறது என்பது குறித்தல்ல. நீதிமன்ற அணுகுமுறை தொடர்பானதும் அல்ல. சட்டமும் நீதிமன்றமும் யாருக்காக இருக்கின்றன என்று நம்பப்படுகிறதோ, அந்தக் குடிமக்களின் மனநிலையும், சமூகப் பக்குவமும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டாக வேண்டும்.

உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை எடுத்துக்கொண்டு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என வந்துள்ள செய்தி, ஏற்கெனவே உலக அளவிலான திரைப்பட விழாக்களில் விருது பெற்றிருந்தாலும் இப்போது முறைப்படி வெளியிடப்பட்டுள்ள ‘லேடீஸ் அன் ஜென்டில் விமன்’ஆவணப்படம் இரண்டுமாகச் சேர்ந்து என்னை இந்த விவாதத்தில் ஈடுபடச் சொல்கின்றன. இது தொடர்பாகப் பேசி வருவதன் அடிப்படையில் இந்தப் படத்தில் தோன்றி எனது கருத்துகளைக் கூற வாய்ப்பளித்தார் இயக்குநரும், தன்னை ஓர் பாலின உறவாளர் என்று கம்பீரமாகச் சொல்கிறவருமான மாலினி ஜீவரத்தினம். ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருப்பவர் கலை வேலைகளோடு நில்லாமல் களப் பணிகளிலும் இறங்கியுள்ளவரான இயக்குநர் பா.ரஞ்சித்.

படத்துக்கான முன்னோட்டக் குறும்படைப்பில் (டீஸர்) இப்படியொரு உரையாடல் வருகிறது:

“மச்சான் கதை சொல்லட்டுமா?”

“என்னா கதை?”

“ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம். அவன் ஒரு ராணியைப் பார்த்தானாம்.”

“இது என்ன புள்ள வழக்கமான கதைதான...”

“அப்படின்னா வேற கதை சொல்றேன். ஒரு ஊருல ஒரு ராணி இருந்தாளாம்...”

“அவ ஒரு ராஜாவைப் பார்த்தாளாமா?”

“இல்ல, அந்த ராணி ஒரு ராணியைப் பார்த்தாளாம்...”

“ஏய்... என்னடி இது புதுக்கதையா இருக்கு... இதுவரை நான் கேட்டதே இல்லியே...”

“சொன்னாதானே கேட்டிருப்பீக... சொல்ல விட்டிருந்தாதானே கேட்டிருப்பீக.”

ஆம், இவர்களைப் பற்றிச் சொல்லப்படாதவை அல்லது சொல்ல விடப்படாதவை நிறைய இருக்கின்றன. சொல்லப்பட்டவற்றில் அல்லது சொல்ல அனுமதிக்கப்பட்டவற்றில் அவதூறுகளும் அநீதிகளும்தான் நிறைய நிறைய இருக்கின்றன.

படத்தின் திரையிடல் முடிந்து வெளியே வந்தபோது என்னை அணுகி, “உங்களோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா” என்று கேட்டார் ஓர் இளைஞர். படமெடுத்து முடிந்ததும் கைகுலுக்கியவாறு, “நான் ஒரு லெஸ்பியன் இல்லாட்டி கேய் அப்படின்னு சொல்லிக்கிட்டு யாராவது இன்ட்ரொடியூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னா, ஒரு ஹாய் சொல்லிட்டு ஒதுங்கிடுவேன். அது தப்புன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன். இனிமே அப்படி ஒதுங்க மாட்டேன், அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப்பா இருப்பேன். இந்தப் படமும் நீங்க சொல்ற விஷயங்களும் என்னை மாத்திருச்சு. தேங்க்ஸ்” எனக் கூறி விடைபெற்றார்.

பெற்றோர்களுக்கான படம்

இளைஞர்கள் பலரையும் இந்தப் படம் யோசிக்க வைக்கும். ஆனால் மாலினியோ, இது பெற்றோர்களுக்கான படம் என்கிறார். தங்கள் குடும்பத்தில் வாரிசுகளின் பாலின அடையாள மாற்றத்தை முதன்முதலில் அறிய நேரிடும் பெற்றோர்களில் பெரும்பாலோர் பதறிப் போகிறார்கள். ஒரு சிலர்தான் அது இயற்கையானது என்று புரிந்துகொண்டு அரவணைக்கிறார்கள். ஆகப்பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகள் திருநங்கையராகவோ, திருநம்பியராகவோ மாறுகிறபோது, அவர்களுக்கு உள்ள ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறுவதற்கான வாசல்தான். இரு பாலினத்தவரின் காதலையே இன்னமும் முழுமையாக ஏற்க மறுக்கிற பெற்றோர்கள், பாலின மாற்றத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிற பெற்றோர்கள், “நான் அவளைக் காதலிக்கிறேன், அவளையே எனக்குத் திருமணம் செய்துவையுங்கள்” என்று கோரும் மகளை, “நான் அவனைக் காதலிக்கிறேன், அவனையே எனக்குத் திருமணம் செய்துவையுங்கள்,” என்று கேட்கும் மகனை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வார்களா? ஆயினும், பெற்றோர் மனநிலையை வார்ப்பது சமூகம்தான். ஆகவே, இந்தப் படம் பெற்றோருக்கானது மட்டுமல்ல, சமூகத்துக்கானதும்தான்.

இன்னும் பெண்களுக்கே முழுச் சுதந்திரம் உறுதியாகவில்லை, இன்னமும் திருநங்கையர்/திருநம்பியருக்கே மரியாதை கிடைக்கவில்லை, அதற்குள் தன்பாலின உறவுக்கு அங்கீகாரமா என்று கேட்டு, இவர்களது வேண்டுகோளைக் காய்ந்து கருகட்டும் என்று வெயிலில் போடுவதற்கில்லை. மாற்றங்கள் தேவை என்று ஒப்புக்கொள்கிறவர்களிலும் சிலர், இப்போது இது உடனடி பிரச்னை அல்ல என்றும், பொருளாதார சமத்துவம், பகுத்தறிவு, வறுமை ஒழிப்பு சாதியழிப்பு, மதவெறி தடுப்பு, பெண் விடுதலை போன்ற லட்சியங்களை நிலைநாட்டிவிட்டு இவர்களின் பிரச்னைகளைக் கையில் எடுக்கலாம் என்பதாகப் பேசுகிறார்கள். அவற்றை நிலைநாட்டுகிறபோதுதான் இவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான ஏற்புச் சூழல் சமுதாயத்தில் உருவாகும் என்கிறார்கள். ஆக, இப்போதைக்கு இவர்களின் உரிமையை உறுதிப்படுத்தத் தாங்கள் தயாராக இல்லை என்பதையே அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

(கட்டுரையின் நிறைவுப் பகுதி நாளை...)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018