ரஜினி, கமலால் பாதிப்பா? தினகரன் விளக்கம்!

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் அரசியலுக்கு வருவதால் தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதையொட்டி, அப்பகுதி மக்களுக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ நேற்று (ஜனவரி 22) நன்றி தெரிவித்தார். தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் போன்றோர் உடன் இருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேருந்து பயணக் கட்டண உயர்வு நடுத்தர, ஏழை மக்களைப் பாதித்துள்ளது. 50 சதவிகிதத்துக்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். பணமதிப்பழிப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. சாதாரண மக்களின் கையில் பணப்புழக்கம் இல்லாத நிலை நிலவுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
“நான் முதல்வரை தரம் தாழ்த்திப் பேசுகிறேன் என்று தங்கமணி கூறுகிறார். உண்மையில், முதல்வரும் அமைச்சர்களும்தான் என்னை ஒருமையில் பேசி வருகின்றனர். மாமியார் வீட்டுக்குச் செல்லும் நிலையில் நான் இருப்பதாக அவர்கள் கூறினார்கள். தற்போது அவர்கள்தான் அந்த நிலையில் உள்ளனர்” என்று கூறினார்.
“நாங்கள் மீண்டும் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவதற்கும், வேறு பெயரில் இந்த இயக்கத்தில் செயல்படுவதற்கும் பொதுச் செயலாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்” என்று தெரிவித்த தினகரன், “ரஜினி, கமல் போன்றோர் அரசியலுக்கு வருவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நம்பர் ஒன் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். வருங்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். யாராலும் மக்கள் எங்களுக்கு வழங்கும் ஆதரவைப் பறிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.