என்ன செய்திருக்கிறார் த்ரிஷா?


மோகினி படத்தில் நடித்துள்ள த்ரிஷாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மிரளவைக்கும் என இயக்குநர் ஆர்.மாதேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்துவரும் த்ரிஷா ஹாரர் த்ரில்லர் பாணியிலான மோகினி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களை இயக்குநர் மாதேஷ் கூறியுள்ளார்.
“என்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிகப் பெரிய படைப்பாக உருவாகியுள்ள படம் மோகினி. இந்தப் படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக த்ரிஷாவின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மிரளவைக்கும். இந்தப் படம் வெகுஜனங்களிடம் எளிதாகச் சென்றடையும். மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இதில் உள்ளன. கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளன. இத குறித்து தெரிவித்த அவர், “காதலன் படத்தில் முக்காலா முக்காபுலா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷுவல் எபெஃக்ட்ஸ் மக்களை பிரமிக்க வைத்துள்ளது. அதேபோன்று இந்தப் படத்திலும் நிறைய விஷுவல் எபெஃக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இந்தப் படம் உன்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே உருவாகியுள்ளது. படத்தைப் பார்க்கும் அனைவரும் படத்தோடு தங்களோடு இணைத்துக்கொள்ள முடியும்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.