மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: நண்டு வளர்ப்பை நம்பி வாழும் மீனவர்கள்!

சிறப்புக் கட்டுரை: நண்டு வளர்ப்பை நம்பி வாழும் மீனவர்கள்!

ஹிரென் குமார் போஸ்

அரேபிய கடலின், மகாராஷ்டிர மாநிலக் கரையோரத்தில் கப்பல் பயணம் மேற்கொள்பவர்கள் இதைப் பார்த்திருப்பார்கள். சிந்துதுர்க் மாவட்டத்தின் விஜயதுர்க் முதல் ஷிரோடா வரையிலான பகுதியில் சதுப்பு நிலங்களில் மீனவர்கள் மூங்கில் குச்சிகளில் மீன் வலைகளைக் கட்டி நண்டு வளர்ப்பில் ஈடுபடும் காட்சிதான் அது. இந்தச் சதுப்பு நிலப் பகுதிகளில் இவ்வாறு வளர்க்கப்படும் நண்டுகள்தான் அப்பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன.

சமீபகாலமாகவே கடற்கரை மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளதால் சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அவை பொருளாதார ரீதியாகப் பயனற்றவையாகக் கருதப்பட்டு வேரறுக்கப்படுகின்றன. மேலும், மரக்கட்டைகள் எரிப்பதற்காக அதிகளவில் வெட்டப்படுகின்றன. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகரித்துவிட்டது. இந்நிலங்களில் நண்டு வளர்ப்பதன் மூலம் இவை பாதுகாக்கப்படுகின்றன. மேலும், இதனால் மக்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கிறது.

சதுப்பு நிலங்கள்

சதுப்பு நிலங்கள் என்பவை கடலோரப் பகுதிகளில் நீர் தேங்கிய பரப்பில் மரங்களையும் பல்வேறு தாவரங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த சதுப்பு நிலங்களானவை கடலுக்கும் நிலப்பரப்புக்கும் பாலமாய் இருக்கின்றன. இவை கடலோர சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் முக்கிய பங்காற்றுகின்றன. 2004ஆம் ஆண்டில் சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, சதுப்பு நிலங்களைக் கொண்ட கிராமங்கள் குறைந்த அளவிலேயே அழிவைச் சந்தித்தன. அந்தமான் நிக்கோபர் தீவுகள், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளைத் தழுவி வரும் கடலோர எல்லையானது கர்நாடகா, கேரளா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளையும் தழுவி நீண்டுள்ளது. இவையனைத்தும் அடங்கிய இந்தியாவின் மொத்த கடற்கரைப் பரப்பு 4,628 சதுர கிலோமீட்டராகும். இதில் கிழக்குக் கடற்கரை பெரும் பங்கைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சார்ந்த சதுப்பு நிலங்களின் அளவு 186 சதுர கிலோமீட்டர் மட்டுமே. இங்கு அழிந்து வரும் சதுப்பு நிலங்களால் அங்கு வறட்சியான சூழல் நிலவுவதோடு, பருவமழைக்கான சாத்தியக்கூறுகளும் குறைந்து வருகின்றன.

விழிப்புணர்வு

கடலோரச் சமூகத்தினருக்கு சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். “சதுப்பு நிலங்களில் நண்டு வளர்க்கும் பண்ணைகள் அமைப்பதால் கடல் உணவுகளுக்கான சங்கிலித் தொடர் புத்துயிர் பெறுவதோடு, கடலோர நீராதாரத்தின் சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன” என்கிறார் ஷ்வேதா ஹூலே. 50 வயதாகும் இவர் வெங்குர்லா கடலோர சதுப்பு நிலப் பயண மேலாண்மையில் ஈடுபட்டு வருகிறார். அச்சரா கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான நாராயண் விஷ்ணு குபால் என்ற மீனவரும் இதையே தான் கூறுகிறார். “சதுப்பு நிலங்கள் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன. கடல்வாழ் மற்றும் கடலோர உயிரினங்களுக்கு இவை உணவளிக்கின்றன” என்கிறார் விஷ்ணு குபால்.

இவ்வாறான விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளதால் 2011ஆம் ஆண்டில் சிந்துதுர்க் மாவட்டத்தின் 17 கிராமங்களில் 28.5 ஏக்கர் நிலப்பரப்பில் யு.என்.டி.பி. சர்வதேச சுற்றுச்சூழல் நிதியம் சதுப்பு நில நண்டு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது. மும்பையிலிருந்து 338 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிந்துதுர்க் மாவட்டமானது அழகிய கடற்கரைகளுக்கும், கோவில்களுக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளுக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்குள்ள கடற்கரைப் பகுதிகள் பல்லுயிர்த்தன்மையைக் கொண்டுள்ளன. சிந்துதுர்க்கின் மல்வான், தேவ்கட், வெங்குர்லா ஆகிய கிராமங்கள் சதுப்பு நிலங்களின் கூடாரமாகத் திகழ்கின்றன.

இங்குள்ள கிராம மக்களுக்கு நண்டு வளர்ப்புக்குத் தேவையான நிதி, நண்டுக் குஞ்சுகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இரட்டைப் பயன்கள்

சிந்துதுர்க் பகுதியில் மேற்கொள்ளப்படும் நண்டு வளர்ப்பில் அரசின் உதவி கிடைப்பதால் இது தனித்துவமுடையதாக உள்ளது என்கிறார் என்.வாசுதேவன். இவர் வனப் பகுதிகளின் கூடுதல் ஆலோசகராகவும் அரசின் சிந்துதுர்க் நண்டு வளர்ப்புத் திட்ட அதிகாரியாகவும் உள்ளார்.

நண்டு வளர்ப்பில் பச்சை நிற மற்றும் சேற்று நண்டுக்கு அதிக தேவை காணப்படுகிறது. இந்திய சதுப்பு நில சமூகத்தின் கடல் உயிரியல் நிபுணரான அரவிந்த் உண்டவலே, ”இப்போதெல்லாம் மீனவர்கள் பலர் இரும்புக் கொக்கிகளுடன் சதுப்பு நில சிறு குழிகளில் நண்டுகளை வேட்டையாடத் தேடித் திரிகின்றனர். நண்டுகளுக்கான தேவை அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்” என்றார்.

நண்டு வளர்ப்பதற்காகச் செயற்கையாக எதையும் உருவாக்காமல் சதுப்பு நிலங்களில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் துளையிட்டு அவற்றையே பயன்படுத்துகின்றனர். நண்டு வளர்ப்புக்காக சதுப்பு நிலங்களை இவர்கள் பயன்படுத்துவதால் அங்குள்ள மரங்களையோ பிற தாவரங்களையோ அவர்கள் வெட்டுவதில்லை. எனவே சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பெருகி வளரும் வருவாய்

தமிழகத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி வேளாண் மையத்திலிருந்து கொண்டுவரப்படும் சேற்று நண்டுக் குஞ்சுகள் மூங்கில் குச்சிகளில் இணைக்கப்பட்ட வலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சதுப்பு நில நீர்ப்பரப்பில் வளர்க்கப்படுகின்றன. இதுபோன்ற நண்டுக் கூடுகளை 11 பேர் அடங்கிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பராமரிக்கின்றன. அலைகள் அதிகமாக இருந்தாலும் நண்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அவற்றுக்குத் தீனி வழங்கும் வகையிலும் இந்த மூங்கில் வலைக் கூடுகள் வலுவானதாக இருக்கின்றன.

“நண்டுகளை இவ்வாறு ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை மூங்கில் வலைக் கூடுகளில் வளர்க்கும்போது அவை கொழுத்து வளருகின்றன. இதனால் எங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது” என்கிறார் லக்ஷ்மி வித்தல் தாரி. தரமம்பரி பகுதியைச் சேர்ந்த 47 வயதான இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

நண்டு வளர்ப்பைத் தொடங்கிய அடுத்த ஆண்டான 2016இல் தர்பநாராயண் என்ற பெண் நண்டு விற்பனை வாயிலாக ரூ.42,000 வருவாய் ஈட்டியுள்ளார். அதற்கு அடுத்த ஆண்டில் அவருக்கு ரூ.83,000 கிடைத்துள்ளது. 1,100 கிராம் எடை கொண்ட நண்டு ஒன்றுக்கு ரூ.1,115 வரையில் கிடைக்கிறது. குறைந்த எடை கொண்ட நண்டுகளுக்கு ரூ.900 வரையில் கிடைக்கிறதாம். இதே அளவிலான வருவாயை கோச்சர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ கணேஷ் சுயஉதவிக் குழுவும், அச்சரா கிராமத்தைச் சேர்ந்த ராமேஷ்வர் சுயஉதவிக் குழுவும் ஈட்டுகின்றன.

“நரி, விலாங்கு மீன், ஓட்டர் போன்ற உயிரினங்களால் நண்டுகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க நாங்கள் மூங்கில் வலைக் கூடுகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பது குறித்துக் கற்றுக்கொண்டு வருகிறோம். அவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொண்டால் எங்களால் இன்னும் அதிகமான வருவாய் ஈட்ட முடியும்” என்று ஸ்ரீகணேஷ் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 57 வயதான ராஜேந்திர கோபால் சவான் கூறுகிறார்.

எதிர்காலத் திட்டம்

சதுப்பு நிலம் மற்றும் கடல் உயிரி பல்லுயிர் பாதுகாப்புக் கழகத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைக் கொண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் நண்டுகளை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட நண்டுப் பண்ணை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாசுதேவனைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிர மாநில கடலோரப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது இதர கடலோர மாவட்டங்களுக்கும் விரிவடையும் என்று நம்புகிறார்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்

தமிழில்: செந்தில் குமரன்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 23 ஜன 2018