குப்பைத் திருவிழா!


இந்தியாவின் முதல் குப்பைத் திருவிழா சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரில் ஜனவரி 19ஆம் தேதி குப்பைத் திருவிழா தொடங்கியது. இதில், குப்பைகளைக்கொண்டு செய்யப்பட்ட பல அழகிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. குப்பைகளை மறுசுழற்சி செய்வது பற்றி மாணவ மாணவியருக்குப் பல்வேறு செய்முறை விளக்க வகுப்புகளும் நடத்தப்பட்டன. இதுகுறித்து ராய்பூர் மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது இந்தியாவின் முதல் குப்பைத் திருவிழாவாகும். நகரில் உற்பத்தியாகும் குப்பைகளை ஆக்கபூர்வமாக மாற்றியமைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் காட்சி நடத்தப்பட்டது. இதில் பல யுக்திகளைப் பயன்படுத்தி குப்பைகளைக் காட்சிப் பொருள்களாக மாற்றினர். இதன் மூலம் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுடன் இந்த மூன்று நாள்கள் குப்பை திருவிழா ஜனவரி 21 அன்று நிறைவுபெற்றது.