மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மலையேறுங்கள்!

மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மலையேறுங்கள்!

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு படியேறுங்கள் என்று சபரிமலை தேவஸ்தானம் போர்டு சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு கரடுமுரடான பாதைகளில் மலையேறுகிறார்கள். கடந்த காலங்களில் பம்பை நதியில் குளிக்கமுடியாத அளவுக்கு அசுத்தமாகவே இருக்கிறது. பம்பைலிருந்து மலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குப் போகும் வரையில் குடிநீர் வசதியோ, மருத்துவ வசதியோ எதுவும் போதுமானதாக இருந்ததில்லை, அன்னதானத்திலும் குறைபாடுகள்தான் இருந்தது உண்டு.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கம்யூனிஸ்ட் கொள்கைவாதியாக இருந்தாலும் பொதுமக்கள் நலனில் அக்கறைக் கொண்டு பம்பையிலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு மலையேறிச் சென்றுள்ளார். 18 படியும் ஏறிய அவர், பிரசாதங்களையும் பெற்று அன்னதானத்தையும் வாங்கிச் சாப்பிட்டுபடி இறங்கி வந்துள்ளார். அவர் வந்துசென்ற பிறகு அதிகமான மாற்றங்கள் செய்திருப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

அவை என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நாம் மாலைப் போட்டுக்கொண்டு இருமுடிகட்டி படியேற ஜனவரி 12ஆம் தேதி பம்பைக்குச் சென்றோம்.

பம்பை போலீஸார் ஒலிபெருக்கி மூலமாக, “ஐயப்பன் பக்தர்கள் கவனத்துக்கு, மலையேறும் பக்தர்கள் அவரவர் பைகளையும் பர்ஸ்களையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். ஐயப்பன் பக்தர்கள் வேடத்தில் திருடர்கள் நடமாடுகிறார்கள். கவனமாக இருக்கவும்” என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

பம்பைப் பகுதியில் அனுமதியில்லாமல் கேன் டீ விற்பனை செய்த ஒருவரை, கேரள போலீஸ், ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டது. அங்குப் பணியிலிருந்த காவலரிடம் என்ன குற்றத்துக்காக அந்த டீ விற்பனை செய்த பையனை போலீஸ் அழைத்துச் சென்றது என்று கேட்டோம். அதற்கு, “புதிய ஆட்கள் அனுமதியில்லாமல் எதையும் விற்பனை செய்யக் கூடாது. மேலும் அரசுக்கும் கோயிலுக்கும் கெட்டப்பெயர் உருவாக்க சதிவேலைகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இவ்வளவு முன்னெச்சரிக்கை வேலைகள்” என்று கூறினார்.

தொடர்ந்து பம்பை நதியில் குளிக்கச் சென்றோம். தண்ணீர் அசுத்தமில்லாமல் தெளிவான நீரோட்டத்தில் இருந்தது. மூடநம்பிக்கையில் பக்தர்கள் அணிந்துள்ள ஆடைகளைக் கழற்றிவிடுவதை கோயில் நிர்வாக ஊழியர்கள் உடனடியாக அகற்றி சுத்தம் செய்துவருகிறார்கள்.

மலை ஏறும்போதே சபரிமலை தேவஸ்தானம் போர்டு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர். “ஐயப்ப பக்தர்கள் கவனத்துக்கு... வயதானவர்கள், சிறுவர்கள் மனது வைத்து மலை ஏறாதீர்கள். மருத்துவ கேம்ப்கள் உள்ளன. அங்கு சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு மலை ஏறுங்கள். இதயநோயாளிகள் அவசியம் மருத்துவர் ஆலோசனைகள் கேட்டு மலை ஏறுவது நல்லது. தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு ஏறுங்கள். மனசு வைத்து படி ஏறாமல் மருத்துவர் ஆலோசனைகள்படி அடிமேல் அடிவைத்து மலையேறுவோம்” என்று தொடர்ந்து அறிவிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.

7 கிலோ மீட்டர் தூரம் வரை மலை ஏறினோம். கூப்பிடும் தூரத்தில் மெடிக்கல் கேம்ப் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நெஞ்சுவலி ஏற்பட்டால் அவசர சிகிச்சைக்கு மருத்துவரைத் தொடர்புகொள்ள லேண்ட் லைன் எண்களை விளம்பர போர்டுகளில் வழிநெடுக வைத்திருந்தார்கள்.

குடி நீர்வசதிகளுக்கு 7 கிலோ மீட்டர் தூரமும் இருபுறத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் தடையில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த காலங்களை விட தற்போது கழிப்பிடம் வசதிகள் அதிகப்படுத்தி இருந்ததைக் காணமுடிந்தது.

வழியில் இருந்த ஒரு கடையில் வாட்டர் பாட்டில் கேட்டோம். மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் நிரம்பிவிடக் கூடாது என்ற நல்ல உள்ளத்தால் பம்பையிலிருந்து ஐயப்பன் கோயில் வரையில் வாட்டர் பாட்டில் விற்பனை செய்வதற்குத் தடைவிதித்துள்ளது கோயில் நிர்வாகம். இதனால் வாட்டர் பாட்டிலும் விற்பனை செய்யப்படவில்லை.

மாதக்கணக்கில் அடைக்கப்பட்ட குடிநீரைவிட இயற்கையான குடிநீரை சுத்தம் செய்யப்பட்டு தட்டுப்பாடுகள் இல்லாமல் வழங்குகிறது திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு என்றார் பாலகிருஷ்ணன் நாயர் என்பவர். பம்பையிலும் சபரிமலையிலும் பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் வழங்கிவருகிறார்கள்.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியைவிட தற்போது நடக்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார் மலையில் பங்க் கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர். உண்டியலை நிரப்பி ஆட்சி செய்வதைவிட, கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு திருப்தியான சேவை செய்வதுதான் மக்களுக்கான ஆட்சி என்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018