மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: தாமரை வடிவத்தில் ஜெ. நினைவிடம்!

டிஜிட்டல் திண்ணை: தாமரை வடிவத்தில் ஜெ. நினைவிடம்!

எதிர்ப்பைக் காட்டிய பன்னீர்

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த மெசேஜ்க்கு போஸ்ட் கொடுத்தது வாட்ஸ் அப். “ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வேலைகளை முடுக்கிவிட ஆரம்பித்திருக்கிறார்கள் பழனிசாமியும் பன்னீரும். இன்று இதுதொடர்பாக இருவரும் பேசியிருக்கிறார்கள். பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட டெண்டர் விடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். 43 கோடியே 63 லட்சம் என நினைவிடத்துக்காக நிர்ணயம் செய்திருக்கிறார்களாம். இந்தத் தொகையை விட யார் குறைவாகக் கேட்கிறார்களோ அவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படும். பிப்ரவரி 7ஆம் தேதி டெண்டர் தொடர்பான வேலைகளைத் தொடங்கி, ஜெயலலிதா பிறந்தநாளான 24ஆம் தேதி அடிக்கல் நாட்டுவது என்பது முதல்வரின் திட்டம்.

தாமரை மலரையும், இரட்டை இலையையும் நினைவுப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க வேண்டும் எனச் சொல்லி, அதற்கான சில மாதிரி வரைவுகளையும் காட்டியிருக்கிறார் முதல்வர். அதற்கு பன்னீரோ, ‘ஏற்கெனவே எல்லோரும் நம்மை பிஜேபியின் பினாமி அரசு என்று சொல்லிட்டு இருக்காங்க. இப்போ அம்மா நினைவிடத்தை தாமரை வடிவத்தில் உருவாக்கினால் அதை உறுதிப்படுத்துவதுபோல் ஆகிடும். பிஜேபியின் சாயம் என்பது நினைவிடத்தில் எங்கும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்னு எனக்குத் தோணுது’ என்று சொன்னாராம்.

அதற்கு எடப்பாடியோ, ‘நீங்க ஏன் தாமரையை பிஜேபி அடையாளமாகப் பார்க்குறீங்க? அதுதானே நம் தேசிய மலர். இந்த தேசத்தின் மங்கையை தேசிய மலருக்குள் வைத்து அழகு பார்ப்பதில் என்ன தவறு? தாமரை அவங்க சின்னம் என்பதால், அதை வேறு யாரும் எதுக்கும் பயன்படுத்தக் கூடாதா என்ன? யாரோ சொல்றாங்கன்னு நாம ஏன் திட்டங்களை மாற்றணும்? எனக்கு நிறைய மாடல்கள் காட்டினாங்க. தாமரை வடிவத்திலான நினைவிடம் என்பது சிறப்பாக இருக்கு...’ என்று சொன்னாராம்.

பன்னீரும் விடவில்லையாம். ‘தாமரை நீங்க பிஜேபியின் அடையாளம் இல்லை என எப்படி சொல்லிட முடியும்? அது அவங்க சின்னம். நாம் என்னதான் இது தேசிய மலர் என்று சொன்னாலும் அது எடுபடாது. தலைவரோட சமாதியில் இருப்பது குதிரையின் சிறகு என நாம் வெளியே சொல்லிக் கொண்டாலும், அது இரட்டை இலையைக் குறிப்பது என்பது நமக்குத் தெரியும்தானே! அப்படித்தான் இதுவும் தெரியும். அம்மாவின் மரணமே ஆயிரத்தெட்டு விமர்சனத்துக்குள்ளாகிடுச்சு. அதுக்குப் பிறகும் நிறைய சிக்கல். இப்போ அம்மாவுக்கு முதல் முறையாக நினைவிடம் அமைக்கப் போறோம். அதிலும் ஏன் சர்ச்சையோடு தொடங்க வேண்டும்?” எனக் கேட்டாராம்.

எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா? “நீங்க சொல்றது ஒருவிதத்துல சரிதான். இன்னும் டைம் இருக்கு. முக்கிய நிர்வாகிகள் எல்லோருகிட்டயும் கலந்து பேசுவோம். வந்திருக்கும் எல்லா மாடல்களையும் பார்ப்போம். மெஜாரிட்டியா எல்லோரும் எதை சொல்றாங்களோ அதை ஓகே பண்ணிடலாம். எனக்கு தாமரை வடிவம் பிடிச்சிருந்ததால அதைச் சொன்னேன். அதுக்காக அதுவேதான் வேண்டும்னு நான் சொல்லல. கலந்து பேசி முடிவு பண்ணிக்கலாம்” என்று சொன்னாராம். இப்படியாக இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். எடப்பாடி திட்டப்படி ஜெ. நினைவிடம் தாமரை வடிவத்தில் வரப் போகிறதா இல்லை, மாறப் போகிறதா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்” என்று முடிந்தது மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 22 ஜன 2018