மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல்!

உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனு தாக்கல்!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனால் அந்தத் தொகுதிகளில் 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், 21 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி மேலிடம்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்துவருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் 21 பேர் ஆதாயம் பெறும் வகையில் இரட்டைப் பதவி வகித்துவந்ததாக, ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், இவர்களை நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமித்தது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியது. இது தொடர்பாக, பிரசாந்த் பாட்டீல் என்பவரும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு எம்எல்ஏ, ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். எனவே, மீதமுள்ள 20 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு, குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதனை ஏற்று, நேற்று (ஜனவரி 21) ஆம் ஆத்மியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்களைப் பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்த நடவடிக்கையை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தி, அவர்களை நிலைகுலைய வைக்கும் வேலையை பாஜக செய்துவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். “எனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது, அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இப்போது 20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இது கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று ஆண்டுகளில் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்வார்கள் என்று தெரிந்தே, அவர் 67 சீட்களை ஆம் ஆத்மிக்குத் தந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் 20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு ஒப்புதல் தந்ததை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இன்று, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. “நீதித் துறையின் மீது ஆம் ஆத்மி முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. நீதிமன்றச் சட்டங்களின் துணையோடு, மோடி அரசின் சட்டத்திற்குப் புறம்பான, ஒருதலைப்பட்சமான, எந்த வித நியாயமுமற்ற இந்த நடவடிக்கையை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 22 ஜன 2018