9 வயதுச் சிறுமியை மணக்கத் துடித்த 39 வயது நபர்!


9 வயதுச் சிறுமிக்கு, 39 வயதுடைய அவளது மாமாவுடன் நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்துள்ள மின்னத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கணவனை இழந்த கூலித் தொழிலாளி. இவரது 9 வயது மகள் அந்த ஊரின் அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்துவருகிறர். இந்தச் சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 39 வயது மணி என்பவருக்குத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடப்பதாகத் தொட்டியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. மணி இந்தச் சிறுமிக்கு மாமன் முறை உறவு என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் லதாவும் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தப் புறப்பட்டனர். இவர்கள் வரும் தகவலையறிந்து, மணியும் அவரது உறவினர்களும் தலைமறைவானார்கள். சிறுமியை மீட்ட காவல் துறையினர், மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பொய்ப் புகாரின் பேரிலேயே சிறுமியைக் காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாக அவளது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.