புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஆயிரம் ஆசிரியர்கள்!


திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆயிரம் பேர் இன்று சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.
இணையப் புழக்கம் அதிகரித்த பிறகு சமீபகாலமாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாசிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது.பொது நிகழ்வுகளுக்கு பணம் கொடுத்தும், உணவு கொடுத்தும் மாணவர்களை அழைத்தால் கூட வர மறுக்கின்றனர். மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் கூட வாட்சப், பேஸ்புக் என்றுதான் பேசிவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆலோசனைப்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் எடுத்த முயற்சியின் அடிப்படையில், சென்னை அமைந்தகரையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு செல்ல, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் பலரும் விருப்பம் தெரிவித்து தங்களுடைய பெயரைக் கொடுத்தனர். அந்த வகையில் ஆயிரம் பேர் வரை புத்தக கண்காட்சிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மிகவும் ஆர்வமாக ஆயிரம் ஆசிரியர்களும் பயணிக்கும் வகையில் இலவசமாகப் பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். விடுமுறை நாளான இன்று ( ஜனவரி 21) கல்வி அதிகாரி ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில் ஆசிரியர்கள் அனைவரும் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.