கிராமப்புற ஊதியம் சரிவு!

கிராமப்புற வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத ஊழியர்களின் ஊதிய வளர்ச்சி நவம்பரில் சரிந்துள்ளதாகத் தொழிலாளர் பீரோ ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘2017ஆம் ஆண்டு நவம்பரில் கிராமப்புற வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத ஊழியர்களின் ஊதிய வளர்ச்சி சரிந்துள்ளது. கிராமப்புற நெருக்கடி மற்றும் நுகர்வு குறைவு போன்றவையே ஊதிய வளர்ச்சி சரிவுக்குக் காரணமாகவுள்ளது. வேளாண் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் ஆண்களுக்கு ஊதிய உயர்வு வளர்ச்சி 4.8 சதவிகிதமாக உள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பரில் இதன் வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்தது. ராபி பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்ததும் ஒரு காரணமாகும்.
2017ஆம் ஆண்டு நவம்பரைப் பொறுத்தவரையில் பெண்கள் ஒரு நாளைக்குத் தோராயமாக 225.22 ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளனர். இது இதற்கு முந்தைய ஆண்டை விட 2.97 சதவிகிதம் மட்டுமே அதிகமாகும். 2016ஆம் ஆண்டு நவம்பரைப் பொறுத்தவரையில் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.9 சதவிகித ஊதிய உயர்வைப் பெற்றிருந்தனர். தோட்டக்கலைப் பணிகளில்தான் ஊதிய உயர்வு பெருமளவு சரிந்துள்ளது.
அதேபோல ஒப்பந்த ஊழியர்களாகச் செயல்படுகின்ற மீனவர்களைப் பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு நாளைக்கு 332 ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளனர். நவம்பரில் அவர்களின் ஊதியம் 318.33 ரூபாயாகக் குறைந்துள்ளது.’