மீண்டும் சினிமாவைத் தொடர்ந்த நிவேதா

படிப்புக்காகப் பட வாய்ப்புகளைத் தள்ளிவைத்த நடிகை நிவேதா தாமஸ் மீண்டும் சினிமாவில் கவனம்செலுத்தி நடிப்பைத் தொடர்ந்துள்ளார்.
போராளி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் கமல்ஹாசன் மகளாக நடித்த பாபநாசம் திரைப்படம் அவருக்கு மற்ற மொழிப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தந்தன. தெலுங்கில் நானியுடன் நடித்த ‘ஜென்டில் மேன்’ நல்ல தொடக்கத்தைத் தந்ததால் அவருடனே ‘நின்னுக்கோரி’ படத்தில் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், பட்டப்படிப்புக்காகப் படப்பிடிப்புகளை ரத்து செய்து படிப்பில் கவனம்செலுத்திய நிவேதா தேர்வுகளை முடித்துவிட்டு அடுத்ததாக நாக சௌரியாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் சாய் ஸ்ரீராம் இயக்குகிறார். மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.