மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

கூத்து வாத்தியார்கள் 10

கூத்து வாத்தியார்கள் 10

தெருக்கூத்துக் கலையின் பயிற்சிபெற்ற பார்வையாளர்: நா.கிருஷ்ணமூர்த்தி - பகுதி 2

இரா.சீனிவாசன், மு. ஏழுமலை

ஊர்ப்பெருந்தனம், தெருக்கூத்துப் பார்க்கும் ஈடுபாடு வந்தது எப்படி என்று கேட்டதும் மிக ஆர்வமாக உரையாடத் தொடங்கினார்.

ஊர்ப்பெருந்தனம் பார்ப்பது என்பது என்னுடைய காலத்தில் வந்தது இல்லை. எங்க முன்னோர்கள் காலத்திலேயே எங்க குடும்பத்திற்குரியதாக இருந்தது. இப்ப எங்க சம்பந்தியாக இருக்கிறவர்களுடைய முன்னோர்கள் இந்தக் கிராமத்தின் மணியம் பார்த்திருந்தார்கள். அதனால் அவர்களைக் கிராமணி என்றும் ரெட்டிமார்கள் என்றும் அழைப்பார்கள். நாங்கள் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்கள்தான் ஆனால் மணியம் பார்த்ததினால் ரெட்டி பட்டமும் எங்க முன்னோர்களுக்கு உண்டு. அப்படித்தான் தர்மாரெட்டி, அருச்சுனரெட்டி, பாலமுத்துரெட்டி, சின்னரெட்டி என்று எங்க முன்னோர்களைச் சொல்லுவாங்க. இப்ப அதெல்லாம் இல்ல. இப்படியான நிலையில்தான் ஊர்பெருந்தனம் பார்க்கும் நிலை வந்தது.

தெருக்கூத்துப் பார்க்கும் பழக்கம் வந்ததற்குக் காரணம் எங்க ஊர்ல இருக்கிற பழமையான திரௌபதியம்மன் கோயில்தான். அந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பதினெட்டுநாள் திருவிழா நடக்கும். அப்பொழுது, பதினெட்டு நாள் பாரதப் பிரசங்கமும் எட்டு நாள் அல்லது பத்து நாள் கூத்தும் நடக்கும். அதைப் பார்த்துப் பார்த்துதான் தெருக்கூத்துமேல ஒரு ஈடுபாடு வந்தது. எனக்கு இரண்டு சோக்குதான் (ஈடுபாடு). ஒன்னுமாட்டு சோக்கு. அதாவது, வண்டிமாடு, உழவுமாடு வாங்கி விற்பது.

இன்னொன்னு தெருக்கூத்து சோக்கு. அதாவது, எங்க தெருக்கூத்து நடந்தாலும் சென்று பார்ப்பது. எந்த ஊர்ல தெருக்கூத்து நடந்தாலும் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுமாடுகளுக்கு தண்ணி வைத்துவிட்டு, தீவனம் போட்டுட்டு, உடம்புமேல தண்ணிய ஊற்றிக்கொண்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிடுவேன். நேரம் இருந்தா பத்துமைல் தூரம் என்றாலும் நடந்தே போயிடுவேன். பஸ் ஏறியும் போவேன். என்னுடைய சின்ன வயசிலேயே எங்க ஊர்ல இருக்கிற கிழவன், கிழவிகளுக்கெல்லாம் நான்தான் கூட்டாளி. பக்கத்து ஊர்ல எங்காவது தெருக்கூத்து நடந்தால்போதும் கிழவன், கிழவிகள் என்னை தேடிக்கொண்டு வந்துவிடுவார்கள். கிருஷ்ணமூர்த்தி மத்தேரில இன்னைக்கு தெருக்கூத்தாண்டா வாடா போகலாம் என்பார்கள். நான்தான் எல்லோரையும் வழிபார்த்துப் கொண்டுபோய்ச் சேர்க்கணும்.

இப்படித்தான் தெருக்கூத்தோடும் பல தெருக்கூத்துக் குழுக்களோடும் நெருக்கமான ஈடுபாடும் தொடர்பும் ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல், இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், எங்க ஊர்ல ஒவ்வொரு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையும் பெருமாள் கோயிலுக்கு விழா நடக்கும். அந்த விழாவின்போது ‘இரணிய விலாசம்’ தெருக்கூத்து நடக்கும். இந்தத் தெருக்கூத்து மட்டும் 120 வருஷத்திற்கும் மேலேயே நடைபெற்று வருவதாகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். வேறு எந்தக் கூத்தும் இந்தப் பெருமாள் விழாவில் கிடையாது. இந்தக் கூத்து நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்பதற்காக தருமலிங்க முதலியார் என்பவர் தங்கள் வாரிசுதாரர்களுக்கு ஒரு உயிலே எழுதி வைத்துள்ளார். அதன்படி, அவருக்குப் பிறகு கடிகாசலம், ரகு எனத் தலைமுறை கடந்து நிகழ்ந்துவருகிறது. இப்பொழுது ரகு டி.வி.எஸ். கம்பெனியில் வேலை செய்கிறார். அவருடைய இரண்டுமாதச் சம்பளத்தை எடுத்துவைத்தாவது இந்தக் கூத்திற்கான தொகையைக் கொடுத்து வருகிறார். அதன் மூலமாக இரணிய விலாசக் கூத்தை நிகழ்த்துகிற பல குழுக்கள் எங்க ஊர்ல வந்து நிகழ்த்தியிருக்கிறாங்க. நான் ஊர்ப் பெருந்தனத்திற்கு வந்த பிறகு தேர்ந்த குழுக்களை அழைத்து நிகழ்த்தியிருக்கிறேன். இந்த இரண்டும் தான் தெருக்கூத்துக் கலை என்றால் எனக்கு உசுராக ஆனதற்குக் காரணம்.

இந்தக் காலத்தில் தெருக்கூத்துக் கலையை வாழ வைப்பதில் திரௌபதியம்மன் கோயில்களுக்கு ஒரு முதன்மையான பங்குண்டு. அந்த வகையில் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான திரௌபதியம்மன் கோயிலைப் பற்றி கூற முடியுமா?

பில்லாஞ்சிக் கோயில் பல தலைமுறையைக் கடந்தது. எப்ப உருவானது என்று தெரியவில்லை. எங்க ஊருக்கு வடக்குத் திசையில் சிறிய அளவில் இந்த திரௌபதியம்மன் கோயில் இருந்திருக்கிறது. அப்ப இந்த ஊர்ல மணியம் பார்த்துக்கொண்டிருந்த அருச்சுனரெட்டி (முதலியார்) கோயிலுக்குப் பக்கத்துல இருந்த பொறம்போக்கு நிலத்தை வளைத்துப் பெரிய கோயிலா உருவாக்கியிருக்கிறாரு. மீதமுள்ள இடத்தில் முள்தான் முளைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விழா நடைபெறும் பொழுது அந்த முள்வேலியை வெட்டித் தீமிதி விழாவிற்கு எடுத்துக்கொள்வோம். மீதமுள்ள விறகை விற்றுப் பணத்தைக் கோயில் விழாவிற்குப் பயன்படுத்துவோம்.

இப்பொழுது அருச்சுனன் வாரிசுமுறையான கோதண்டம் தான் முதன்மையான நிருவாகியாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுக் கோயிலுக்கு முன்புறம் சிமெண்ட் தகட்டுக் கூரை அமைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடைபெறுகிறது. தெருக்கூத்தும் நடைபெறுகிறது. இந்த ஊரில் நடைபெறும் தெருக்கூத்திற்குத் தனி மதிப்பு உண்டு. ஏனென்றால், விழாவுக்கான தெருக்கூத்துக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர்களுடைய கூத்து நடைபெறும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு அதைப்பற்றி விவரம் சொல்லாமல் பார்த்துவிட்டு, எங்களுக்கு மனதிற்கு வந்தால் மட்டும் தான் அவர்களுக்குத் தாம்பூலம் கொடுப்போம். நல்ல குழுவாக இருந்தால் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தாம்பூலமும் முன்பணமும் கொடுத்திடும் வழக்கமும் எங்களுக்கு உண்டு. அதனால், பில்லாஞ்சில நடக்கிற தெருக்கூத்துப் பேரெடுக்கும்.

பில்லாஞ்சி, அம்மனேரி, கொண்டாபுரம், இராமகிருஷ்ணராஜிப்பேட்டை, கல்பட்டு, பண்ணூர், மத்தேரி, சோளிங்கர், எசனூர், மோட்டூர் முதலான பத்து ஊரு மக்களும் வருவார்கள். இதுமட்டும் அல்லாமல், தூரத்து ஊர்க்காரர்களும் கூத்திற்கு வருவார்கள். ஒருமுறை மயிலாடும் பாறையிலிருந்தும் ஒருவர் வந்திருந்தார். அத்தகைய சிறப்புடையது எங்களுடைய ஊர்க்கோயிலில் நடைபெறும் விழாவும் தெருக்கூத்தும்.

தெருக்கூத்துக் கலையைக் காணும் ஒரு பார்வையாளனாக மட்டுமல்லாமல் தெருக்கூத்துக் குழுவை தம் ஊரில் நிகழ்த்துதலுக்குத் தேர்வுச் செய்யும் தேர்வாளராகவும் நீங்கள் இருக்கும் நிலையில், உங்களுடைய தெருக்கூத்துக் கலையுடனான புரிந்துணர்வு என்பது சராசரிப் பார்வையாளன் என்ற நிலையிலிருந்து வேறுபட்டதாகவும், தெருக்கூத்துக் கலை குறித்த விமர்சன பூர்வமானதாகவும் இருக்கும். அத்தகைய நுணுக்களை நீங்கள் அறிந்த தெருக்கூத்து வாத்தியார்கள், கலைஞர்கள், இசையாளர்கள், அக்காலப் பார்வையாளர்கள் என்ற பன்முக நிலையில் விரிவாகப் பகிர்ந்து கொண்டால் ஒரு 70 ஆண்டுகாலத் தெருக்கூத்து வரலாற்றைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். அதனால், அந்த அனுபவத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டபொழுது உற்சாகமாக உரையாடத் தொடங்கினார்.

தெருக்கூத்துக் கலைதான் நாங்க அறிந்த பொழுதுபோக்கும் வாழ்க்கைப் பாடமும். அந்தக் காலத்துல தெருக்கூத்துக்கு நல்ல மரியாதை இருந்தது. பிறகு, சினிமாவும் டிவியும் வந்ததற்குப் பிறகு கொஞ்சம் மக்கள் கூட்டம் குறைந்தது. ஆனால், இப்ப தெருக்கூத்துக் கலைக்கு மதிப்பு அதிகம்.

திரௌபதியம்மன் கோயிலுக்குத் தெருக்கூத்து வைத்தால், கூத்தர்கள் கோயிலில் தான் தங்குவார்கள். அரிசி, பருப்பு, புளி, உப்பு எல்லாம் கொடுத்திடுவோம். அதைக்கொண்டு சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் கோயிலிலேயே வேடம் கட்டிக்கொண்டு சபைக்கு வருவார்கள். பிறகுதான் கோயிலுக்கு எதிரில் தனியாக கொட்டகைபோட்டு அதிலேயே வேடம் கட்டிக்கொண்டு திரையிட்டு ஆடுகின்ற வழக்கம் வந்தது.

அந்தக் காலத்துல கூத்து நிகழ்த்த வேண்டுமென்றால் ஒரு வண்ணார் ஊரில் இருப்பார். மற்றொரு வண்ணாரைக் கூலிக்கு வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு வண்ணார்கள் இரும்புக் கம்பியின் முனையில் துணியைச் சுற்றி, மண்ணென்ணெய் அல்லது வேறு எண்ணெயை ஊற்றி எரிய வைத்த இரண்டு தீவட்டி ஏந்தி இரண்டு பக்கங்களில் நிற்க வேண்டும். அதன் பிறகு தான் பெட்ரோமாக்ஸ், டூம்லைட், வாழைத்தண்டு அதாவது, குழல்விளக்கு எல்லாம் வந்தது.

இதோடு ஒருவர் மிருதங்கத்தை வயிற்றில் கட்டிக்கொண்டு அடிக்க வேண்டும். ஊர் நாவிதர் ஊமசுதி அதாவது, புஸ்தகப்பெட்டி என்னும் கையில் அசைக்கும் ஆர்மோனியப் பெட்டி வாசிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் காலில் இசைக்கும் ஆர்மோனியம் வந்தது. அதேபோன்று முகவீணைக்கு முன்பு கிளாரினட்ல வாசிப்பாங்க. அது ஒன்பதடி சுரம் இருக்கும். ஆனால், இப்ப இருக்கிற முகவீணைபோல நாதம் வராது. சுவை இருக்காது. முகவீணைக்கு முன்பு புல்லாங்குழலும் வாசித்திருக்கிறார்கள். இப்ப இருக்கிற முகவீணை வந்ததற்குப் பிறகுதான் இசை அம்சமே வந்தது.

வேடதாரி முகாரி ராகத்தில பாட்டுப் பாடினால் அதைத்தொடர்ந்து வாசிக்கிர முகவீணைக்காரர் சுருதியோடு ஆலாபனைக்குக் கொண்டு சேர்க்கணும். முகவீணை வாசிப்பதில் வேலம் என்னும் ஊரில் வாழ்ந்த தேவன், வெள்ளாத்தூர் நமச்சிவாயம், காரணாம்பட்டு கணேசன், பழையபாளையம் வேதாசலம், பண்ணூர் கண்ணன் இவங்க எல்லாம் சிறப்பான வேலைக்காரங்க, நல்ல இசைப்பார்கள்.

ஒருமுறை அத்திமாஞ்சேரியில் தெருக்கூத்து நடந்தது. அந்தக் கூத்தில் பண்ணூர் கண்ணனுக்கும் பழையபாளையம் வேதாசலத்துக்கும் முகவீணை வாசிக்கிறதுல போட்டி வைத்தேன். கண்ணன்கிட்ட இலை (முகவீனையின் அடிப்பாகத்தில் வாயில்வைத்து ஊதுவதற்கு பயன்படுவது) தப்பாக இருக்கிறது. ஆனால், பாடம் பிரமாதமாக இருக்கிறது. வேதாசலத்திடம் இலை சரியாக இருக்கிறது, பாடம் சரியாக இல்ல. கடைசியில் கண்ணன்தான் ஜெயிச்சிட்டான். இவ்வாறு தெருக்கூத்துக்கு உரிய இசைக்கருவிகள் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கின்றன.

இசைக்கருவிகளில் மட்டுமா மாறியிருக்கிறது? அலங்காரப் பொருள்களில்கூடப் பல மாற்றங்கள் வந்துள்ளன. முன்பெல்லாம் கிரீடம், சிகிரி, புஜம், மார்பு பதக்கம் முதலான பொருட்கள் கல்யாண முருங்கை மரத்திலதான் செய்திருக்கும். அதனாலதான்,

“கல்யாண முருங்கை கட்டைக்கட்டி

கண்ணாடி பளபளன்னு கம்பீர ராஜன் வந்தேன்’’

என்று பாட்டுகூட பாடுவாங்க. ஆனால், இப்பதான் பிளாஸ்டிக்கில வந்துவிட்டது. அதேபோல் கட்டையிலான பொருட்களைக்கொண்டு அலங்காரம் செய்யும்பொழுது மண்டைக்கட்டு, சிரசுக்கட்டு, கைக்கட்டு, கால்கட்டு, மார்புகட்டு, புஜக்கட்டு, கணுக்கட்டு என்று 32 கட்டு கட்டிக்கிட்டு, அத சுமந்துகொண்டு ஆடுவாங்க. அவங்களுக்கு ரொம்ப மரியாதையை அது கொடுக்கும். இப்ப எல்லாமே ரெடிமேடாக வந்ததால 15 கட்டுகூட இருக்காது.

ஆளப்பாத்து வேடம் கொடுப்பாங்க. பாடமும் இருக்கணும், ஆள் கம்பிரமும் இருக்கணும், குரல் வளமும் இருக்கணும். அப்பெல்லாம் ஒவ்வொரு கூத்துக்காரனும் மூனு உருண்டை களி தின்பார்கள். அப்படித் தின்னுட்டு கம்பிரக் குரலில் பாடினா ஏழு மையில் தூரத்துக்கு களத்துமேட்டுல இருக்கிறவங்களும், நீர்மடையில இருக்கிறவங்களும், ஆட்டுகிடையில இருக்கிறவங்களும் தூங்காம கேட்டுக்கிட்டுக் கூடவே பாடிக்கிட்டு இருப்பாங்க.

இப்பதான் சில இடத்துல மைக் வைக்கிறங்களாம். அதெல்லாம் நம்ம பக்கம் கிடையாது. அதேபோல ஒவ்வொரு கூத்துக்காருங்க முகத்துல இருக்கிற பவுடரு கலரும் அவன் என்ன வேடத்துல வந்திருக்கானு சொல்லாமலே தெரியும். அருச்சுனன் என்றால் பச்சைக் கலந்தது. கண்ணனுக்கு நீல நிறம். பீமனுக்கு கருப்பு நிறம். கர்ணன், தருமர், துரியோதனனுக்கு மஞ்சளும் சிவப்பும் கலந்து புள்ளிகளும் கோடுகளுமாக வித்தியாசத்தைக் காட்டும். இதெல்லாம் தெருக்கூத்தினுடைய சிறப்பு.

எங்க ஊரில் மட்டுமில்லாமல் நான் பார்த்த தெருக்கூத்து வாத்தியார்களில் பலபேர் இந்தக் கலைக்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில், பில்லாஞ்சி குப்பன், மேல்கீசகுப்பம் வேலுரெட்டி வாத்தியார், மூதூர் குப்பாச்சாரி வாத்தியார், மூதூர் சுப்பிரமணி ஆச்சாரி வாத்தியார், மஞ்சியூர் முருகாரெட்டி வாத்தியார், எரும்பி முனுசாமி வாத்தியார், தண்டலம் லச்சி வாத்தியார், பண்ணூர் ஆறுமுகம் வாத்தியார், காஞ்சிபுரம் கைலாசம் வாத்தியார், வைலாம்பாடி பொன்னுசாமி கவுண்டர் வாத்தியார், செதிலூர் மோட்டூர் வஜ்ரம் (வண்ணார்) வாத்தியார், பனவட்டமாடி கந்தன் ரெட்டி வாத்தியார், கீழ்கீசகுப்பம் முருகேசன் வாத்தியார், அய்யனேரி வீராசாமி வாத்தியார், அய்யனேரி ராஜேந்திரன் வாத்தியார், கொளத்தேரி திருவேங்கடம் வாத்தியார், கன்னிகாபுரம் கங்கவாத்தியார், வள்ளிமலை கங்காரதரன் வாத்தியார் (தலைமையாசிரியர்), இராமகிருஷ்ணராஜிபேட்டை சுப்பராயலு வாத்தியார் (வண்ணார்), வேடல் பழனி வாத்தியார், நாராயணன் வாத்தியார், கே.ஜி.கண்டிகை அக்ராரம் சபரிவாத்தியார், அக்ராரம் செல்லமுத்து வாத்தியார், பழையபாளையம் வீராசாமி வாத்தியார், சின்னபுலிவலம் சீனு வாத்தியார், புலிவலம் ஆறுமுக வாத்தியார், செங்கலம் ஞானம் வாத்தியார், அம்மனேரி சஞ்சீவி வாத்தியார், ஜிகுலூர் நடேசன் வாத்தியார், தாமரைக்குளம் பாலன் வாத்தியார் என்று பல தெருக்கூத்து வாத்தியார்களின் கூத்துகளைப் பார்த்து இருக்கிறேன்.

இன்னும் பல வாத்தியார்களின் பெயர் நினைவில் இல்லை. இதில் சில வாத்தியார்கள் உயிரோடு இல்லை. இவர்கள் எல்லாம் தெருக்கூத்துக் கலையில் தங்களின் பாடங்களாலும் குரலாலும் நடிப்புத் திறனாலும் பெயர் பெற்றவர்கள் என்று தான் 70 ஆண்டுகாலத்தில் கண்ட தெருக்கூத்து வாத்தியார்களின் பெயர்களைக் கூறி மெய்சிலிக்கவைத்தார். இந்தத் தெருக்கூத்து வாத்தியார்கள் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருக்கூத்துக் கலையின் பயிற்சிபெற்ற பார்வையாளர்: நா.கிருஷ்ணமூர்த்தி - பகுதி 1

(கட்டுரையின் இறுதிப் பகுதி மாலை 7 மணி பதிப்பில்)

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ஜெயராமன் வாத்தியார்

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 21 ஜன 2018