மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மதுவிலக்கல்ல... மதுப்பெருக்கு!

மதுவிலக்கல்ல... மதுப்பெருக்கு!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், ‘தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போதைய அதிமுக அரசோ டாஸ்மாக் மது வகைகளை மக்களின் வீட்டுக்கே சென்று சேர்ப்பதற்கான ஒரு செயலியை உருவாக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுபற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையான கோபத்தோடு ஓர் அறிக்கையை இன்று (ஜனவரி 21) வெளியிட்டிருக்கிறார்.

‘உயர்வகை மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக செல்பேசி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் 30 இடங்களில் செயல்பட்டுவரும் எலைட் மதுக்கடைகளில் உள்ள உயர்வகை மதுக்களின் விவரங்கள் செயலியில் இடம்பெற்றிருக்கும் என்றும், தங்களுக்குத் தேவையான மதுவகைகளைத் தேர்வு செய்து பணம் செலுத்தினால் உடனடியாக அவை வாடிக்கையாளரின் முகவரியில் வழங்கப்படும்’ என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ராமதாஸ், “மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் முற்போக்காகச் சிந்திந்து, புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் அரசின் கடமையாகும். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவோ, மக்கள் நலனுக்காகவோ துரும்பைக்கூட கிள்ளிப் போடாத பினாமி அரசு, புதிய மதுக்கடைகளைத் திறத்தல், மதுவகைகளை வீடுகளுக்கு கொண்டுசென்று விநியோகிப்பது போன்ற சமூகக்கேடான விஷயங்களில்தான் கவனம்செலுத்தி வருகிறது. அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, மது விற்பதை மட்டுமே முதன்மைப் பணியாக அரசு கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கடந்த ஏழு ஆண்டுகளாக ஒருமுறைகூட வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட முடியவில்லை. தமிழக அரசின் வரி வருவாய் வளர்ச்சி ரூ.67,000 கோடி குறைந்து விட்டது. விஷன் 2023 எனப்படும் தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி அடுத்த ஆண்டில் ரூ.7 லட்சம் கோடியை எட்டவுள்ளது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு மதுவணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்றால் அது ஆளத்தகுதியற்ற அரசு என்றுதான் பொருள்” என்று புள்ளிவிவரத்தோடு சாடியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இரு கட்டங்களாக 1000 மதுக்கடைகளை மூடியது. தமிழக அரசின் கொள்கை முடிவின்படி பார்த்தாலும் நடப்பாண்டில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். ஆனால், அதுகுறித்து ஆளுநர் உரையிலோ, அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையிலோ எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, மூடப்பட்ட 1,000 மதுக்கடைகளுக்குப் பதிலாக 1,000 புதிய கடைகள் கடந்த சில மாதங்களில் திறக்கப்பட்டன. இப்போதும் கூடுதலாக 500 மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. இதுபடிப்படியான மதுவிலக்கு அல்ல.... மதுப்பெருக்கு” என்று கண்டித்திருக்கிறார் ராமதாஸ்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018