மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

காலாவதி பேருந்துகள்: தமிழகம் இரண்டாவது இடம்!

காலாவதி பேருந்துகள்: தமிழகம் இரண்டாவது இடம்!

காலாவதி பேருந்துகளை உபயோகப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு 20ஆம் தேதி முதல் மிகக் கடுமையான முறையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. அறுபது சதம் முதல் எழுபது சதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக வரும் ஜனவரி 27ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜனவரி 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக அரசு பேருந்து பயணக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவுக்கு உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. டீசல் விலை உயர்வை இதற்குக் காரணமாகச் சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், அதன் பயன் பொது மக்களுக்குச் சென்றடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது இல்லை. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 133.47 விழுக்காடும், டீசல் மீதான உற்பத்தி வரி 400.86 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2011 ஆண்டில் 52 விழுக்காடு குறைந்து விட்டது. ஆனால், தமிழக அரசு 2011ஆம் ஆண்டு பேருந்து பயணக் கட்டணத்தை 60 விழுக்காடு உயர்த்தியது.

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தபோது, பெட்ரோல், டீசல் அந்த வரி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. எனவே, அவை மீதான விற்பனை வரி, வாட் வரி ஆகியவை தொடர்கின்றன.

தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்து பயணக் கட்டண உயர்வு தனியார் ஆம்னி பேருந்து கட்டணத்தைவிட அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் தற்போது ரூ.650 ஆகும். தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது சென்னை - நெல்லை பேருந்து கட்டணம் ரூ.440 ஆக இருப்பது ரூ.664 ஆக உயருகிறது. அதைப் போல குறைந்தபட்ச பேருந்து கட்டணம் சாதாரணப் பேருந்துகளில் ரூ.7 ஆகவும், நகரப் பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது, சாதாரண ஏழை எளிய மக்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றவர் முக்கியமான ஓர் ஆய்வு விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

பொது போக்குவரத்துச் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து, மத்திய போக்குவரத்துத் துறை கடந்த நவம்பர் மாதம் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் செயல்படும் 47 போக்குவரத்துக் கழகங்களின் செலவு, வருவாய், பேருந்து இயக்கச் செயல்பாடுகள், விபத்துகள், காலாவதியான பேருந்துகள் எண்ணிக்கை உட்பட பல்வேறு விவரங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தை தமிழ்நாடுதான் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கிவரும் 78.3 விழுக்காடு பேருந்துகள் காலாவதியானவை என்று மத்திய போக்குவரத்துத் துறையின் அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018