பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்ட அறிவிப்பு!


பஸ் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தி திமுக, பாமக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக நேற்று முன்தினம் (ஜனவரி 19) தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைந்த கட்டணமே வசூல் செய்யப்படுகிறது என்று அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், கட்டண உயர்வை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வருகின்றன.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான பேருந்து கட்டண உயர்வு, ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்கள்மீது நடத்தப்படும் தடியடி, அமைச்சர்களின் ஆணவப் பேச்சு போன்றவற்றைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக சார்பில் வரும் 27ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்ப பெறவும், அவ்வப்போது கட்டணத்தை உயர்த்த அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கக்கூடிய இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து நாளை 22ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தாலுகா தலைநகரங்களில் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் என நடத்தபடும்” என்றும் குறிப்பிட்டுப்பட்டுள்ளது.