மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: வடக்குக்காகத் தெற்கு கொடுக்கும் விலை!

சிறப்புக் கட்டுரை: வடக்குக்காகத் தெற்கு கொடுக்கும் விலை!

ஷோயிப் தனியால்

இந்தியாவில் மக்கள்தொகைப் பிரச்னை அதிகரித்து வருகிறது. 1952இல் உலகிலேயே குடும்பக் கட்டுப்பாட்டைச் சட்டபூர்வமாகத் தழுவிய முதல் நாடு இந்தியாதான். ஆனாலும், இந்தப் பிரச்னை தொடர்ந்துவருகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்துவரும் சீனாவை 2024க்குள் இந்தியா மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் 1950இல் சீனாவின் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகையைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தது.

இவ்வாறு அதிகரித்துவரும் இந்தியாவின் மக்கள்தொகைப் பெருக்கத்தை நெருக்கமாகப் பார்த்தால் இது மேலும் சிக்கலானதாக மாறிவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகைப் பிரச்னை பற்றிப் பேசும்போது பல்வேறு மாநிலங்களிடையே இருக்கும் வேறுபாட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேச வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் கணிசமாகக் காணப்படும் வேறுபாடுகள் இந்திய அரசியலை மிகவும் வெளிப்படையாக பாதிக்கக்கூடும். இவ்விஷயத்தில் தென்னிந்தியாவுக்கும் வடஇந்தியாவுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது. தெற்கு நீல நிறத்தில் உள்ளது. இதன் கருவுறும் விகிதங்கள், பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைவாகவே உள்ளது. அதாவது, இறக்கும் மக்களைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகளே பிறக்கின்றன. இந்தப் போக்கு நாளடைவில் மக்கள்தொகைச் சரிவுக்கு வழிகோலும்.

வடஇந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் இரண்டும் சேர்ந்து இந்திய மக்கள்தொகையில் கால் பங்கு அளவுக்கு உள்ளன. ஒரு பெண் பெறக்கூடிய குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை கருவுறும் விகிதம் என்று குறிப்பிடப்படுகிறது. உ.பியில் 2.74, பீகாரில் 3.41 என்ற அளவில் இந்த விகிதம் உள்ளது. கேரளாவில் இது 1.56.

தமிழகத்தின் மக்கள்தொகை 1951இல், பீகாரைவிடச் சற்றே அதிகமாக இருந்தது. அறுபதாண்டுகளுக்குப் பிறகு, பீகாரின் மக்கள்தொகை தமிழ்நாட்டின் மக்கள்தொகையைவிட கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகரித்துவிட்டது. மத்தியப்பிரதேசத்தில் 1951இல் கேரளாவைவிட 37% அதிகமாக இருந்த மக்கள்தொகை, 2011இல் 217% அதிகமாக உள்ளது.

பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வி

மக்கள்தொகையில் ஏற்படும் இத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நேரடியாக நாடாளுமன்றத்தில் அம்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திலும் பிரதிபலிக்கும். இந்தியாவில் பெரிய, சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பதற்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 1976இல் அவசரச் சட்டம் அமலில் இருந்தபோது, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை முடக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி இருக்குமாறு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடக்ம் 2000ஆவது ஆண்டில் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், சவுகரியமாகவும் நடைமுறைக்கேற்பவும் இருப்பதால் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றம் இதை 2026 வரை நீடித்தது. எனவே, 2026 வரை நாடாளுமன்ற இருக்கைகளின் அமைப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும்.

இந்த முடக்கத்தால், மக்கள்தொகை பெருக்கத்தில் மற்ற பல மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அவற்றின் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில், மக்களவைக்கான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்போது 25 லட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளார். பீகாரில், இது 26 லட்சம். மேற்கு வங்கத்தில் இந்த எண்ணிக்கை 242 லட்சம். தமிழ்நாட்டில் 18 லட்சம். கேரளாவில் வெறும் 17 லட்சம். இதன் விளைவாக, ஒரு மலையாளி மக்களவையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் காட்டிலும் 1.50 மடங்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெறுகிறார்.

மாநிலங்களுக்கிடையே நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பிரதிநிதித்துவ மதிப்புக் குறைப்பை ‘ஒரு நபர் ஓர் ஓட்டு’ கொள்கைக்காக ஏற்றுக்கொண்டது. ஆனால், இப்போது மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், தொகுதிகள் மறுவிநியோகம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு நடைபெற்றால், குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட தென்மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகள் மிகவும் குறைந்துவிடும்.

இந்திய அரசியலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும். ஏற்கெனவே இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தி பேசும் மக்கள் உள்ள மாநிலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தற்போதைய தொகுதி விநியோகத்தில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால், இந்த ஆதிக்கத்தை அவை மேலும் உறுதிசெய்யும். உதாரணமாக, 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 50% இடங்களை உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கே மாநிலங்களில் வென்றது. மக்களவைத் தொகுதிகள் மக்கள்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கப்பட்டால், இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும். அந்நிலையில் இந்திய ஒன்றியத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் போதுமான இடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத மக்களவையாக அது அமையும். அத்தகைய மக்களவையின் அடிப்படையில் அமையும் மத்திய அரசு அதிருப்தியையே உற்பத்தி செய்யும்.

அந்த நிலை உருவானால், ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்துவரும் தென்மாநிலங்களின் நிலை மேலும் மோசமாகும். இந்த மாநிலங்கள் இந்திய ஒன்றியத்தின் நிதிக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைவிட மிக அதிகமான தனி நபர் வருமானப் பங்களிப்பை வழங்கிவருகின்றன. ஆனால், மத்திய நிதியிலிருந்து மிகவும் குறைவான நிதியையே பெறுகின்றன. இவற்றின் நிதி ஆற்றல் அரசியல் ஆற்றலாகவும் மடைமாறுவதில்லை. உதாரணமாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை ஆரம்பக் கட்டத்திலேயே, அது மாநிலத்தின் நலனைப் பாதிக்கும் என்பதற்காக எதிர்த்தார். ஆனால், மாநிலத்துக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்ததால் அதைத் தடுக்க முடியவில்லை.

மாறிவரும் இடப்பெயர்வு பாணி

பொருளாதார வளர்ச்சி மாறுபாடுகளோடு மிக அதிகளவில் கருவுறுதல் விகித மாறுபாடுகளும் சேர்வது, மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வையும் பாதிக்கும்.

இந்தியாவில் இதுவரை மிகப் பெரிய கலாசார மாறுபாடுகள் காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வு பெரிய அளவில் இல்லை. 1991 மற்றும் 2001இல் மாநிலத்துக்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடப்பெயர்வு ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர்தலைவிட ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது.

மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வு ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் கருத்தில் கொள்ளும்போது இன்னமும் பெருமளவு அதிகரிக்கவில்லை. ஆனால், அது வேகமாக வளர்ந்துவருகிறது. 1991-2001 காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, பின்வரும் பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வு ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது. மேலும், இவ்வாறு குடியேறுபவர்கள் தென்மாநிலங்களிலேயே அதிகமாகக் குடியேறுகிறார்கள். 2001 முதல் 2011 வரையில் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் எண்ணிக்கை 39 மடங்கு அதிகரித்தது. இதே காலகட்டத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முறையே வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 2.3 மடங்கு மற்றும் இரண்டு மடங்கு அதிகரித்தன.

இந்த அதீதமான குடிப்பெயர்வுகள் தென்மாநிலங்களில் அரசியல் களத்தில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. 2015இல் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் அம்மாநிலத்தை ஜப்பானோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். மேலும் தெலுங்கு மக்களை அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார். பெங்களூருவில் குடியேறுபவர்களின் பொது மொழி இந்தி. அங்கு வசித்துவருபவர்கள் பெரும்பாலும் கன்னடம், தமிழ், தெலுங்கு, உருது பேசுபவர்களாக இருப்பதால், இந்திப் பெயர்ப்பலகைகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் கிளம்பின.

பல இனங்கள், பல மொழிகளைப் பேசும் 1.3 பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியா போல மிகச் சில நாடுகளே உள்ளன. நெருக்கமாக உள்ள கம்யூனிச நாடான சீனாவில், இடப்பெயர்வுகள் அரசால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. சீனாவிலும்கூட, மாகாணங்களுக்கு இடையேயான (இனங்களுக்கு இடையேயான) இடப்பெயர்வுகள் கணிசமான பதற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.

ஐரோப்பிய யூனியன், இந்தியாவைவிட மிகவும் சிறியது. ஆனால், பிராந்தியங்களுக்கு இடையேயான இடப்பெயர்வு, ஐரோப்பியக் கூட்டமைப்பை உடைக்கும் அளவுக்குக் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரான்சில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி, இடப்பெயர்வை எதிர்த்ததன் மூலமும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதாக வாக்குறுதி அளித்தும் மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றது.

ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்தில் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான வேறுபாடுகள் பல விதங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடியவை என்பதையே இவை காட்டுகின்றன. இந்தியாவில் வடக்கு மாநிலங்களுக்கும் தெற்கு மாநிலங்களுக்கும் இடையே மக்கள்தொகைப் பெருக்கத்தில் உள்ள இடைவெளி விரைவில் பெரிய நெருக்கடிகளை உருவாக்கலாம்.

நன்றி: https://scroll.in/article/865569/indian-population-is-growing-much-faster-in-the-north-and-the-south-is-paying-the-price

தமிழில்:ராஜலட்சுமி சிவலிங்கம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018