சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக் கண்ணாடி!


:
யாரோ என்னைக் கண்காணிக்கிறார்கள்!
டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்
உண்மைக்கும் கற்பனைக்குமான வித்தியாசத்தை உணர்வதில் சிலருக்குச் சிக்கல்கள் இருக்கும். போதாக்குறைக்கு எந்நேரமும் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கும். அசாதாரணமாக நடந்துகொள்ளும் இவர்களால் தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாது. இதனால், இவர்கள் வழக்கத்துக்கு மாறான செயல்களில் இறங்குவார்கள்.
பவித்ராவும் இப்படித்தான் இருந்தார். இவரது குடும்பத்தினரால் அதை நம்பவே முடியவில்லை. காரணம், சிறு வயதில் இவர் அப்படி இருந்ததே இல்லை. ஐந்து சகோதரிகளுடன் பிறந்தவர் பவித்ரா. வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் நன்றாகப் பழகக்கூடியவர்.
30 வயதான பவித்ரா, திருமணமாகி கணவருடன் வசித்துவந்தார். திடீரென்று இவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. யாரிடமும் பேசுவதில்லை; இரவில் தூங்குவதில்லை; சரியாகச் சாப்பிடுவதில்லை; எவரோடும் உறவைப் பேணுவதில்லை; வீட்டுப் பொறுப்புகளையோ, சமூகப் பொறுப்புகளையோ சிறிதும் ஏற்றுக்கொள்வதில்லை என்று பவித்ரா மீது, அவரது கணவர் குடும்பத்தினர் பல்வேறு குறைகள் தெரிவித்தனர்.
இது மட்டுமல்ல... தானாகவே தனிமையை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இனிமை காண்பவராக இருக்கிறார் என்பதும் அந்த லிஸ்ட்டில் இருந்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு திடீரென அழுவது, சிரிப்பது, பேசுவது என்று இருந்திருக்கிறார். தினசரி குளிப்பதையோ, உடை மாற்றுவதையோகூட அவர் செய்யத் தயாராக இல்லை. சமைப்பதையும் சாப்பிடுவதையும் அறவே நிறுத்திவிட்டார். வீட்டிலுள்ள கதவுகள், ஜன்னல்களைச் சாத்திவிட்டு, இருட்டு அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டார்.
இவரது நடத்தைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், வெவ்வேறு கோயில்களுக்கு அழைத்துச் சென்றனர். பவித்ராவைப் பார்த்தவர்கள் தெரிவித்த அத்தனை ஆலோசனைகளையும் செயல்படுத்திப் பார்த்தனர். தன்னையே சுருக்கிக்கொண்ட பவித்ராவிடம், மந்திர தந்திர வித்தைகளின் பாச்சாக்களும்கூட பலிக்கவில்லை. இந்த நிலையில்தான், இவரது கணவரும் பிறந்த வீட்டினரும் மனநல சிகிச்சையை நாடினர்.
மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, யாராவது திட்டினாலோ அல்லது அதட்டினாலோ எரிச்சல் அடைபவராகவே இருந்தார் பவித்ரா. இவரை வலுக்கட்டாயமாகத்தான் மனநல சிகிச்சைக்கு அழைத்துவர வேண்டியிருந்தது. ஏனென்றால், இவர் தனக்கு எந்த நோயும் இல்லை என்றும், தான் மிக நலமாக இருப்பதாகவும் நம்பினார்.
பவித்ரா என்றில்லை, மனச்சிதைவு நோய் பாதித்த யாருக்கும் நோய் அறிதல் என்பது இருக்காது. சிகிச்சைக்கு அழைத்துவந்த பிறகுதான், அவரது கடந்த கால நெருக்கடிகள் வெளியில் தெரியவந்தன.
மனச்சிதைவு நோயைக் குணப்படுத்துவதில், உளவியல் நிபுணரின் சிகிச்சை மிக முக்கியம். அதைவிட மிகவும் அத்தியாவசியமானது, மனநல மருத்துவரின் பங்கு. மனச்சிதைவு நோய் என்பது முழுக்க முழுக்க மூளையில் ஏற்படும் ரசாயனக் கோளாறின் பின்விளைவு தான். அதே நேரத்தில் உளவியல் சிக்கல்களும் சமூக நெருக்கடிகளும்தான், இவர்களை இந்த நோயில் தள்ளுகிறது என்பதையும் மறுக்க முடியாது.
ஏன் குளிக்காமல் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, யாரோ என் வீட்டு பாத்ரூமில் கேமராவைப் பொருத்தியிருக்கிறார்கள் என்று சொன்னார் பவித்ரா. நான் நிர்வாணமாகக் குளிப்பதை யாரோ பார்த்து ரசிக்கிறார்கள் என்று சொன்னபோது, இதுநாள்வரை இவர் அனுபவித்த மனவலியைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நம்மைப் பொறுத்தவரை, பவித்ரா சொல்லுவது கற்பனை. ஆனால், அவரது மனதைப் பொறுத்தவரை அது உண்மைதானே.
அன்றாட வாழ்வின் கேளிக்கைகளாக இந்த சமூகம் நிர்ணயித்திருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும், பவித்ரா ஒரு கருத்து கொண்டிருந்தார். தான் நினைப்பதெல்லாம் டிவியில் வெளியாவதால், டிவி பார்க்கும் பழக்கத்தைக் கைவிட்டதாகக் கூறினார்.
நீங்கள் ஏன் இப்போதல்லாம் யாரோடும் பழகுவதில்லை என்ற கேள்விக்கு, அந்தப் பெண் அளித்த பதில் இதுதான்:
“மற்றவர்களோடு பழகினால், என் மனதிலுள்ள எண்ணங்கள் நான்கு பேருக்குத் தெரிந்துவிடுகின்றன. என்னைப் பற்றிய எல்லா வியங்களையும் தெரிந்துகொண்டு, அவர்கள் என்னைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்” என்றார்.
இப்படிப்பட்ட தேவையில்லாத குழப்பங்களினால், பவித்ரா வீட்டிலேயே அடைந்து கிடந்திருக்கிறார். எதிலும் இவருக்கு நாட்டமில்லாமல் போனதற்கான காரணமும் இதுதான். பவித்ரா சொன்னதை ஆராய்ந்து பார்த்தபோது, அடிப்படையில் அவருக்குள் அதிக அளவில் தாழ்வுமனப்பான்மை இருந்தது தெரியவந்தது. அதீத தாழ்வுமனப்பான்மையின் பின்விளைவாக, இவர் யாரோடும் பழகத் தயாராக இல்லை.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன கணிக்கிறார்கள், அது தரக்குறைவானதாக இருக்கிறதா என்று மனச்சிதைவுக்கு உள்ளானவர்கள் மனதில் பல எண்ணங்கள் அலையாடும். தொடர்ச்சியாக, இவர்கள் தங்களது செயல்களைச் சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், இவர்களால் சிறு வயதிலிருந்தே சமூக உறவுகளை பேணிப் பாதுகாக்க முடியாது.
ஒவ்வொரு செயலையும் நாம் சரியாகச் செய்கிறோமோ, பார்க்கிறோமா, நடந்துகொள்கிறோமா என்று சரிபார்ப்பது மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இயல்பாக மாறும். இதனால், அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும். இந்த நிலையே, ஒருவர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாக வழிவகுக்கும். அப்போது, மூளையில் இருக்கும் ரசாயனம் தாறுமாறாகச் சுரக்கத் தொடங்கும்.
இதைச் சீராக்க, மருந்து மற்றும் மாத்திரைகள் தேவைப்படும். அதே சமயத்தில், மனச்சிதைவுக்கு ஆளானவரின் தாழ்வுமனப்பான்மையை மறைய வைப்பதும் அவசியம். இதற்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு நிறைய ஆலோசனைகள் கொடுக்க வேண்டியிருக்கும். புதிய மனிதர்களோடு பழகும் சூழலை உருவாக்க வேண்டும் அல்லது அந்தப் பழக்கத்தை மேம்படுத்தும் சமூகத் திறமைகளுக்கான பயிற்சியைத் தர வேண்டும். இவ்வாறு செய்யும்போது, மனச்சிதைவு நோய்க்கூறுகளிலிருந்து அவர்கள் படிப்படியாக வெளியே வருவார்கள்.
நான்கு மனிதர்களோடு பழகினால்தான், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்ள முடியும். அப்படியரு வாய்ப்பு, பவித்ராவுக்குக் கிட்டவில்லை. இதனால் இவரது பாதிப்பு இன்னும் அதிகமானது.
தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டார் பவித்ரா. அதன் பிறகுதான், தான் எந்த அளவுக்கு மாறியிருந்தோம் என்பது அவருக்குப் புரிந்தது. “வேதிப்பொருள் சமநிலையின்மை (Chemical Imbalance) மூளையில் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. தலையில் அடிபடுதல், பரம்பரை வழிவருதல், மூளையில் ஏற்படும் நோய்த்தொற்று, மனஅழுத்தம் அதிகமாதல் என்பது உட்பட பல புறக்காரணிகள் இருக்கின்றன.
மனச்சிதைவு நோயைப் பொறுத்தவரை, வேதிப்பொருள்கள் சமநிலையின்மை மட்டுமே அதற்குக் காரணமில்லை. பவித்ராவைப் பொறுத்தவரை, அதிகப்படியான மன அழுத்தமே அவருக்குள் வேதி மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. அதற்கு, அவரது தாழ்வு மனப்பான்மையே காரணமாக இருந்தது. தான் அழகாக இல்லை; திறமையாக இல்லை; தன்னால் எதையும் சரியாகச் செய்ய முடியாது என்ற எண்ணங்களால், பவித்ராவுக்கு மன அழுத்தம் அதிகமானது.
எனவே, மனச்சிதைவு நோய்க்குப் பின்னால் மன அழுத்தம், ஆளுமை, திறனில்லாமை பற்றிய எண்ணங்கள் இருப்பதை உணர்த்தினோம். மருத்துவர் பரிந்துரைக்கும்வரை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்று பவித்ராவிடம் சொன்னோம்.
மாத்திரை கொடுத்து, ஒருவரது தாழ்வுமனப்பான்மையைப் போக்க முடியாது. மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் மட்டுமல்ல, எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை இது.
எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்