மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: லாவண்யா (நல்லி சில்க்ஸ்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: லாவண்யா (நல்லி சில்க்ஸ்)

89 ஆண்டுகால பாரம்பர்யமிக்க நல்லி சில்க்ஸின் வளர்ச்சியைப் பெருக்கிய, அக்குழுமத்தின் முதல் பெண் தலைவர் லாவண்யா நல்லி குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

தொடக்கத்தில் லாவண்யா நல்லியின் கொள்ளுத் தாத்தாவுடைய அப்பா நல்லி சின்னசாமி காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட சேலைகளைச் சென்னை (அப்போதைய மதராசில்) கொண்டு சென்று விற்பனை செய்தார். பிறகு 1928ஆம் ஆண்டில் நல்லி சின்னசாமி சென்னை தியாகராயநகரில் முதன்முதலில் துணிக்கடை தொடங்கினார். சிறு வியாபாரமாகத் தொடங்கப்பட்ட நல்லி சில்க்ஸ் இன்று பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தற்போது நல்லி சில்க்ஸ் துணிக்கடைக்குச் சொந்தமாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 32 கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றவர் லாவண்யா. தற்போது இந்நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.650 கோடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து புதிய கடைகளும் வருவாயும் அதிகரித்துள்ளது.

நல்லி சில்க்ஸின் தலைவராக லாவண்யா பொறுப்பேற்றது குறித்து தி வீக் என் லீடர் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தொடக்கத்தில் என்னுடைய அப்பா தொழிலில் இணைந்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டார். நான் நிறுவனத்தில் இணைந்து பணிகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து பொறியியல் முடித்தவுடன் 2005ஆம் ஆண்டில் தனது 21ஆவது வயதில் நல்லி நிறுவனத்தின் தலைவராக லாவண்யா பொறுப்பேற்றார். தொழிலில் பங்கேற்றவுடன் தற்காலப் பெண்களுக்கு ஏற்ற வகையிலும் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நல்லி நெக்ஸ்ட் நிறுவனத்தை 2007ஆம் ஆண்டு தொடங்கினார். இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவரும் வகையில் நல்லி நெக்ஸ்ட் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் இளைய வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

இதனால் நல்லி சில்க்ஸ் திருமணச் சேலைகள் எடுக்கவும், இளைய தலைமுறையினர் ஆடைகள் எடுக்கவும் சிறந்த துணிக்கடை என்ற பெயரைப் பெற்றது. வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொண்டு செயல்படுவதே சிறந்த தொழில் நிறுவனத்துக்கு உதாரணமாகும். “டிசைனர் சேலைகள் குறித்து அறிவிப்பு கடையில் வைக்கப்பட்டிருக்கும். யாருக்கு எந்த வகையான சேலை வேண்டுமோ நேராக அங்குச் சென்று அதை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்கலாம்” என்கிறார் லாவண்யா.

நல்லி நெக்ஸ்ட் திட்டம் வெற்றியடைய, அதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் ஒரு சிறிய கடை தொடங்கப்பட்டது. பின்னர் பெங்களூருவிலும், மும்பையிலும் தொடங்கப்பட்டது. டிசைனர் சேலைகளில் விதவிதமான ரகங்களை அறிமுகப்படுத்தும் வகையில் லாவண்யா கைவினைக் கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்ற இவர் 2009ஆம் ஆண்டில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ சேர்ந்தார்.

படிப்பை முடித்த பிறகு அமெரிக்கா சென்று சிகாகோவில் உள்ள மெக்கன்சி & கம்பெனியில் மூன்று ஆண்டுகாலம் பணிபுரிந்தார். 2011ஆம் ஆண்டில் அபே கோதாரியைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சிகாகோவில் வாழ்ந்துவந்தனர். அபே கோதாரி பூஸ்ட் & கம்பெனி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டில் லாவண்யா இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய அவர் பெங்களூருவில் உள்ள ஃபிளிப்கார்ட்டில் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அதன் பிறகு அவருடைய ஆலோசனையின் பெயரில் மைந்தரா.காம் நிறுவனத்தில் இணைந்தார். மைந்தரா.காம் துணைத் தலைவராக லாவண்யா செயல்பட்டார்.

ஒரே ஆண்டில் மைந்த்ராவிலிருந்து வெளியேறி மீண்டும் நல்லி சில்க்ஸில் இணைந்தார். லாவண்யா நல்லி சில்க்ஸ் இ-காமர்ஸ் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். “நான் பொறியியல் முடித்த பிறகு குடும்பத் தொழிலில் இணைந்ததை என் தந்தை விரும்பவில்லை. ஆனால், இந்த முறை நான் குடும்பத் தொழிலுக்கே வருவதை என் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார்” என்கிறார் லாவண்யா.

இவர் இ-காமர்ஸ் பிரிவையும், தந்தை ராமநாதன் வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வர்த்தகத்தையும், தம்பி நிரந்த் நல்லி நகை விற்பனையையும் கவனித்துக் கொண்டனர். தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் லாவண்யாவுக்கு 10 மாதக் குழந்தை ருத்ரா இருக்கிறார். இவருடைய கணவர் அபே சொந்தமாகத் தொழில் புரிந்து வருகிறார்.

லாவண்யாவைப் பொறுத்தவரையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நல்லி சில்க்ஸின் சந்தையை இரண்டு மடங்காக்குவதுதான் உடனடி இலக்காக உள்ளது. இந்நிறுவனத்தின் முக்கியக் கொள்கையாகக் கடைப்பிடிக்கப்படுவது தள்ளுபடி என்பதே கிடையாது. இதில் லாவண்யாவும் உறுதியாக உள்ளார். 1940ஆம் ஆண்டில் இவருடைய கொள்ளுத் தாத்தா சலுகை அளிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார். அந்த முடிவு இன்றும் தொடர்கிறது.

பிரகாசு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 21 ஜன 2018