மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

கூத்து வாத்தியார்கள் 10

கூத்து வாத்தியார்கள் 10

தெருக்கூத்துக் கலையின் பயிற்சிபெற்ற பார்வையாளர்: நா.கிருஷ்ணமூர்த்தி - பகுதி 1

இரா.சீனிவாசன், மு. ஏழுமலை

கிருஷ்ணமூர்த்தி முதலியார் அவர்களுடனான அறிமுகமும் உரையாடலும் ஒரு பெரும் சோகத்தின்மூலம் உருவானதுதான். பில்லாஞ்சி குப்பன் என்னும் தெருக்கூத்து வாத்தியார் நான் குழந்தைப் பருவத்திலிருந்து கண்டு வியந்த தெருக்கூத்து வாத்தியார்களில் முதன்மையானவர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், கரிக்கல் கிராமம் நான் பிறந்து வளர்ந்த ஊராகும். அவ்வூரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பொன்னியம்மன் யாத்திரை விழா நிகழும். அப்போது எவ்வித மாற்றுக் கலைநிகழ்ச்சியும் இன்றி, தெருக்கூத்து மட்டுமே நிகழும் வழக்கம் இன்றும் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு குழுக்கள் எங்கள் ஊரில் நடத்தும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒருவர்தான் பில்லாஞ்சி குப்பன் என்னும் தெருக்கூத்து வாத்தியார். இவர் ஒல்லியான தேகம், நெடிய உருவம் கொண்டவர். நான் இவரை கர்ணன், தருமர், துரியோதனன் ஆகிய வேடங்களில் கூத்தாடிப் பார்த்திருக்கிறேன்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் பெரும்பாலும் தாங்கள் கூத்து நிகழ்த்தும் இடம் தங்களின் இருப்பிடத்துக்கு அருகிலோ அல்லது தங்களுக்குத் தெரிந்த இடமாகவோ இருந்தால் மாலை 7.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் ஒவ்வொருவராக வந்து சேருவர். கூத்து நிகழ்த்தும் இடம் தங்கள் இருப்பிடத்திலிருந்து தொலைவிலோ அல்லது புதிய இடமாக இருந்தால் அனைவருக்கும் அறிமுகமான இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடத்துக்கு அனைவரையும் வரச்செய்து அங்கிருந்து கூத்து நிகழ்த்தும் இடத்துக்குப் பயணம் செய்வர்.

இந்த நிலையில், எங்கள் கிராமம், குப்பன் வாத்தியார் குழுவினர் அனைவருக்கும் மிக அருகில் உள்ள கிராமம். எனவே, கலைஞர்கள் ஒவ்வொருவராக வந்து சேருவர். ஒருமுறை எங்கள் ஊரின் விழா நாளில் கூத்து நிகழ்த்துவதற்கு வந்தபோதுதான் ஒல்லியான தேகத்துடன் தளர்ந்த நடையுடன் குப்பன் வாத்தியார் வந்ததைப் பார்த்தேன். எங்கள் கிராமத்தில் இருக்கும் பெருந்தனக்காரர்கள் (கிராமம் மற்றும் விழாப் பொறுப்பாளிகள்) பெரும்பாலும் எங்கள் சுற்றுவட்டாரத் தெருக்கூத்துக் குழுவுக்குத்தான் தாம்பூலம் வைப்பார்கள். ஏனெனில், எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கூத்து வாத்தியாருக்கும் தனிப்பட்ட முறையில் சில ரசிகர்கள் இருப்பார்கள். இவர்கள் மத்தியில் உள்ளூர் கதாநாயகர்களாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

பில்லாஞ்சி குப்பன் என்னும் தெருக்கூத்து வாத்தியார் எங்கள் ஊரில் உள்ளோர் பலருக்கும் கதாநாயகனாக விளங்கியவர். அவருக்கென்று 20 வயது முதல் 90 வயது வரையிலான பல ரசிகர்கள் உள்ளனர். பில்லாஞ்சி குப்பன் வாத்தியார் பலமுறை எங்கள் ஊருக்கு வந்து பாரதக் கூத்துகள் நடத்தியுள்ளார். குப்பன் வாத்தியார் எங்கள் கிராமத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, என் தாய்வீடு கரிக்கல் கிராமம் என்றுதான் குறிப்பிடுவார். அந்த அளவிற்கு நெருக்கம் கொண்டது எங்கள் கிராமம். அவ்வகையில்தான் அவர் எனக்குக் கதாநாயகனாகவும் நான் அவருடைய ரசிகனாகவும் உருவாகும் சூழல் உருவானது.

நான் சிறுவனாக இருக்கும்பொழுதிலிருந்தே தெருக்கூத்தைப் பார்க்கும் ஆர்வமுடையவனாக வளர்ந்தேன். பில்லாஞ்சி குப்பன் வாத்தியார் நான் பார்க்கும்பொழுதே வயது முதிர்ந்தவர். சுமார் 75 வயதைக் கடந்தவர். தன்னுடைய முகத்தில் அரிதாரம் பூசுகிறவரைதான் அவருக்கு வயோதிகம். மக்கள்முன் துரியோதனனாக நின்றால் ஐம்பத்தாறு தேசத்துக்கு அதிபதிக்குரிய துடுக்கு, நடை, பாவனை எல்லாம் வந்துவிடும். தருமனாக வேடமிட்டால் சாந்தம் என்ற குணத்துக்கான சொல்லின் நடைமுறைப் பொருளாக மக்கள்முன் தோன்றுவார். கர்ணனாக வேடமிட்டால் தன்னுடைய மனைவி பொன்னுருவியுடனான தருக்கத்தின்போது தன்னுடைய சோக நடிப்பின்மூலம் அனைவருடைய கண்களையும் குளமாக்கிவிடுவார். வேடம் கலைத்த பிறகு பார்த்தால் இவர்தான் நாம் இரவில் பார்த்த துரியோதனனா என்ற வியப்பு எழும். அந்த அளவிற்குத் தன்னுடைய 93 வயதுவரை சளைக்காமல் கூத்தாடியவர்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைத் தன் கலைப்பணியின்மூலம் பெற்ற பில்லாஞ்சி குப்பன் வாத்தியார் வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுக்கா, பில்லாஞ்சி என்னும் கிராமத்தில் வாழ்ந்து, பிறகு கொண்டாபுரம் என்னும் கிராமத்துக்கு இடம்பெயர்ந்தநிலையில், அவருடைய கலைப்பணியையும் கலைப்பணியின் மூலமாகப் பெற்றிருந்த அனுபவத்தையும் பதிவுசெய்ய வேண்டும் என்ற தீராத விருப்பம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. இந்த விருப்பத்தை என்னுடைய பேராசிரியர் இரா.சீனிவாசன் அவர்களிடமும் கூறி வந்தேன். அவரும் குப்பன் வாத்தியாரின் தெருக்கூத்து நிகழ்வைக் கண்ட அனுபவம் பெற்றிருந்ததால் என்னையும் ஊக்கப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் 07. 12. 2014 அன்று எதிர்பாராதவிதமாக ஒரு சூழல் உருவானது. அச்சூழலில், குப்பன் வாத்தியாரின் கலை அனுபவத்தைப் பதிவு செய்வதென்று முடிவுசெய்து, என்னுடைய பேராசிரியரிடமும் இச்செய்தியைக் கூறிவிட்டு ஒளி, ஒலிப்பதிவு கருவிகளோடு சென்னை அய்யப்பந்தாங்களில் இருந்து புறப்பட்டு ஆவடி, அரக்கோணம், திருத்தணி, பில்லாஞ்சி என நீண்டதூரப் பயணத்துக்குப் பறகு பில்லாஞ்சி என்னும் கிராமத்தை அடைந்தேன்.

பில்லாஞ்சி என்னும் கிராமத்தில் பேருந்திலிருந்து இறங்கியதும், அந்த பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வயதான பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். பில்லாஞ்சி குப்பன் வாத்தியாரைப் பற்றிக் கேட்பதற்காக அவரிடம் சென்றேன். ஐயா பில்லாஞ்சி குப்பன் வாத்தியார் வீட்டிற்கு எப்படிப் போக வேண்டும் என்று கேட்டேன். அவர் இந்த ஊரிலிருந்து எப்பொழுதோ கொண்டாபுரத்துக்குப் போய்விட்டாரே என்று பதில் கூறினார். அந்த ஊருக்கு எப்படிப் போவது என்று கேட்டேன். அந்த ஊருக்கு ஒரு மினி பஸ் இருக்குது. அதுலதான் போகணும் என்றதோடு, எதுக்கு அங்கே போகிறீங்க என்ற வினாவையும் கேட்டார்.

அதற்கு நான், ஐயா குப்பன் வாத்தியார்கிட்ட அவருடைய தெருக்கூத்து அனுபவத்தைப் பற்றிப் பேசணும் என்றேன். அப்படியா என்று கூறிவிட்டு சிறிது இடைவெளிக்குப் பிறகு அவரை நீங்க பார்க்க முடியாது. அவர் செத்து இருபத்தஞ்சி நாளாச்சே என்று கூறினார். இதைக்கேட்டவுடன் அவருடைய அனுபவத்தைப் பதிவுசெய்ய முடியாமல் போய்விட்டதே என்ற ஆய்வாளனுக்குரிய கவலையோடு, தன்னுடைய இளம் பருவத்தில் கண்டு வியந்த ஒரு கலைஞனை இழந்த சோகம் கூடியது. என்முன் உள்ளவர்களையும் பொருட்படுத்தாது கண்ணீர்த்துளிகளை அந்தக் கலைஞனுக்காக அஞ்சலி செலுத்தின. நீண்டநேரம் என்முன் அமர்ந்திருந்த பெரியவரிடமும் பேச முடியவில்லை. அந்தக் கலைஞனின் இறப்பினால் ஏற்பட்ட சோகம் அப்பிக்கொண்டது. என்னுடன் அமர்ந்திருந்த பெரியவர் எனக்கு ஆறுதல் கூறும் அளவிற்கு சூழல் உருவாகியது. இதுதான் ஒரு நிகழ்த்து கலைஞனுக்கும் பார்வையாளனுக்கும் உள்ள யதார்த்தமான உறவு.

07.12.2014 அன்று களஆய்வுக்கான முன் தயாரிப்புகளைச் செய்துகொண்டுஅதிகாலை 4.00 மணிக்கு உறக்கத்தில் இருந்து எழுந்து, தயாராகி 5.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு நான்கு பேருந்திலும் ஒரு தொடர்வண்டியிலும் பயணம்செய்து பில்லாஞ்சி சென்றடைந்தேன்.

பயணம் செய்யும்போது, தொலைவிலிருந்து பார்வையாளனாகப் பார்த்து ரசித்த நான், ஒரு ஆய்வாளனாக அவரிடம் நெருங்கி எனது அன்பையும் ரசித்தவற்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டு, அவருடைய கலை அனுபவத்தைப் பதிவுசெய்யலாம் என்று கற்பனைகளுடன் சென்றேன். இதையெல்லாம் ‘அவர் செத்துட்டாரே’ என்ற ஒற்றை வார்த்தை தடம் தெரியாமல் அழித்துவிட்டது.

இத்தகைய நிகழ்வுகள் ஒரு களஆய்வாளனுக்கு ஏற்படுவது சாதாரண செயல் என்றாலும், இந்நிகழ்வு நீண்டநாள் பதியம்போட்டு நீர்விட்டுப் பாதுகாத்து வந்த பயிர் அறுவடைப் பருவத்தில் அழிந்துபோனபோது ஏற்படும் விவசாயியின் கண்ணீருக்கு ஒப்பானது. 93 வயதுவரை தெருக்கூத்துக் கலைக்காகவே வாழ்ந்து எந்த ஓர் அங்கீகாரமும் பதிவும் இல்லாதுபோன இந்தக் கலைஞனின் இழப்பினால் ஏற்பட்டதே என் ஏமாற்றமும் கண்ணீரும்.

பில்லாஞ்சி குப்பன் வாத்தியாரின் இறப்புச்செய்தியைக் கேட்டு ஏமாற்றமடைந்த நிலையில், அவருடன் பழகிய அந்த ஊர்ப் பொதுமக்களிடம் கேட்டுச் சில செய்திகளையாவது பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில், திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரிடமே அவரைப்பற்றிக் கேட்கத் தொடங்கினேன்.

பில்லாஞ்சி குப்பன் எங்கள் ஊர் வேலையைச் செய்துகொண்டிருந்த வண்ணார்தான். அவருக்கும் பட்டம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது. அதன்பிறகு அம்மையார் குப்பம் என்னும் ஊரில் சாயப்பட்டறையில் வேலைக்குப் போனார். போன இடத்தில் பெரியசாமி வாத்தியார் என்பவரிடம் கூத்துக் கற்றுக்கொண்டார். தோழி வேடத்தில் இருந்து கூத்தில் இருக்கிற எல்லா வேடத்தையும் ஆடினார். அப்பேர்ப்பட்ட நல்ல கூத்து வாத்தியாரா இருந்தார். குப்பன் வாத்தியாரைப் பொறுத்தவரையில் தனியாக குழு கட்டி வாத்தியாராக இல்லையே தவிர, பல குழுக்களின் வாத்தியாராக இருந்த பெருமைக்கு உரியவர்.

எங்க ஊர் (பில்லாஞ்சி) கோயிலிலும் பலமுறை ஆட வைத்தேன். அவர் பவுடரு போட்ட இடத்தில் எல்லாம் குப்பன் வாத்தியார் என்ற பெருமையைப் பெற்றவர். அவ்வளவு நடிப்புத்திறமை உடையவர். கடைசியாக (2014) சோளிங்கர் நகரில்நடைபெற்ற பாரதக் கூத்தில் ஆடினார். அதன்பிறகு கூத்துக்குப் போவதை நிறுத்திக்கொண்டார். அவருக்குக் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்தச் சூழ்நிலையிலும் கூத்தாடியவர். அத்தகைய திறமைசாலி உயிரோடு இருக்கும்போது வந்து பேசாமல் போய்விட்டீர்களே என்று வருந்தினார்.

அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது பல கூத்து வாத்தியார்கள் பற்றியும் கூத்துக் குழுக்கள் பற்றியும் மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டத்தொடங்கினார். பிறகுதான் தெரிந்தது இவர் பில்லாஞ்சி கிராமத்தில் இருக்கும் திரௌபதியம்மன் கோயில் நிர்வாகிகளில் ஒருவர் என்று. ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் விழாவின் முதன்மை நிகழ்வாக விளங்கும் மகாபாரதப் பிரசங்கத்திற்கான பிரசங்கிகள் மற்றும் தெருக்கூத்துக் குழுக்களைத் தேர்வு செய்பவர்களில் முதன்மையானவர். இவ்வாறு தெருக்கூத்துக் குழுக்களைத் தேர்வு செய்வதற்கு ஒரு நல்ல பயிற்சி பெற்ற தெருக்கூத்துப் பார்வையாளனாக இருந்தால்தான் முடியும். அவ்வகையில் அவருடனான உரையாடலின்மூலம் இவர் ஒரு நல்ல பயிற்சி பெற்ற தெருக்கூத்துக் கலைப் பார்வையாளர் என்பதை அடையாளம் காணமுடிந்தது.

தெருக்கூத்துக் கலைக்குரிய பயிற்சி பெற்ற பார்வையாளர் என்னும் சொல் மிகவும் விரிந்த பொருளுடையது. ஏனெனில், மற்ற கலைகளுக்குரிய பார்வையாளருக்கும் தெருக்கூத்துக் கலைக்குரிய பார்வையாளருக்கும் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. நிகழ்த்துக் கலைகளைப் பொறுத்தவரையில் சில கலைகள் பாடலாக மட்டுமே இருக்கும். சில கலைகள் ஆடலாக மட்டுமே இருக்கும். சில கலைகள் உரையாடலாக மட்டுமே இருக்கும். இத்தகைய கலைநிகழ் சூழலில் பார்வையாளர் இசையை அறிந்தவராகவோ அல்லது மெய்ப்பாடுகளை உணர்ந்துகொள்ளக் கூடியவராகவோ அல்லது கதையை அறிந்தவராகவோ இருந்தால் மட்டும் போதும். ஆனால், தெருக்கூத்துக் கலை என்பது பாடல், ஆடல், வசனம் என்னும் இயல், இசை, நாடகம் என்னும் பரந்த தளத்தில் இயங்கக்கூடியது.

இந்நிலையில் ஒரு சராசரி பார்வையாளன் மிருதங்கம், டோலக், ஆர்மோனியம், முகவீணை, தாளம், சலங்கை முதலான இசைக் கருவிகளிலிருந்து எழும் ஆரவாரமான இசையுடன் வெளிப்படும் பாடலை, வசனத்தைப் புரிந்துகொள்ளும் திறன்கொண்ட பார்வையாளனாக உருவாவதற்கே பல குழுக்களின் கூத்துகளைப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்த அனுபவத்தில் இருந்துதான் அத்தகுதியைப் பெற முடியும். இவை முதல் தகுதி. இவை மட்டுமின்றி, மகாபாரதக் கதையை அறிய வேண்டும். மகாபாரதத்தின் ஒரு குறிப்பிட்ட கதையை அப்படியே நிகழ்த்தாமல் ஒரு இரவு முழுமைக்குமான நிகழ்த்துதலாக உருமாற்றும்போது என்னென்ன மாற்றங்கள் பெறுகிறது? அம்மாற்றங்களுக்கேற்ப உருவாகும் புதிய கதாபாத்திரங்கள் என்னென்ன? அவற்றின் செயல்பாடுகள் யாவை? அந்தக் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளின் மூலம் பார்வையாளர்களை இரவு முழுவதும் எவ்வாறு கண்விழித்துப் பார்க்கச் செய்கின்றனர். இதற்குக் கையாளப்படும் உத்திகள் யாவை என்பதோடு, தெருக்கூத்து நிகழ்வில் வெளிப்படும் அடவுகள், மெய்ப்பாடுகள் முதலானவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சிபெற்ற பார்வையாளன் என்பவன் தெருக்கூத்துக் கலைக்குரிய சராசரிப் பார்வையாளன் பெறும் பயிற்சியோடு, ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் நிகழ்த்துதலில் உள்ள வேறுபாட்டை அறியும் திறன், பாட வேறுபாடு முதலியவற்றை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். தெருக்கூத்துக்கலை நிகழ்வின் முதல் செயல்பாடான கணபதி வழிபாட்டுடன் களரி கட்டுதல், ஒவ்வொரு வேடமும் கொலு தீர்த்தல், நடுஜாமம், அதிகாலை, காலை முதலான நேரங்களில் இடம்பெற வேண்டிய ராகங்கள் என கூத்து முடிவடையும் வரையிலான வரையறையை அறிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு திறனுடைய பார்வையாளனே தெருக்கூத்துக்குரிய பயிற்சிபெற்ற பார்வையாளன் ஆவான். இவ்வாறு பயிற்சிபெற்ற தெருக்கூத்துப் பார்வையாளனாக இல்லாத நிலையில், தெருக்கூத்துக் கலைக்குரிய தொடக்க நிகழ்வான களரி கட்டுதல் நிகழ்வால் நேரம் விணாகிறது என்றால் அதை நிறுத்த வேண்டும். கதாபாத்திரங்கள் பாடல் பாடும்போது பாடல் புரியவில்லை என்றால் இசையை நிறுத்த வேண்டும். பின்பாட்டு பாடக் கூடாது. கட்டியக்காரன் பெரிய கதாபாத்திரங்கள் பாடி முடித்தபிறகு அவர்களின் மூச்சை ஆற்றிக் கொள்வதற்கான இடைவெளியாக பாடப்படும் பாடல்கள் நேரத்தை வீணடிக்கிறது என்றால் கட்டியக்காரன் இடையில் பாடக் கூடாது. இரவு முழுவதும் ஆடும் கூத்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரக் கூத்தாக மாற்ற வேண்டும் என்று கூத்துக் கலை பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாமல் பல்வேறு கருத்துகளை முன்வைக்கக் கூடியவராகத்தான் இருக்க முடியும்.

பில்லாஞ்சி கிருஷ்ணமூர்த்தி முதலியார் தெருக்கூத்துக் கலைக்குரிய முதல்தரமான பயிற்சிபெற்ற பார்வையாளர் என்பதை அவருடைய உரையாடல் அடையாளப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக உங்களுடைய தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள் பற்றி என்னோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? என்ற வினாவோடு அவர் தெருக்கூத்துப் பார்வையாளனாக இருந்து தான் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழலை உருவாக்கினேன்.

கிருஷ்ணசாமி முதலியார் பில்லாஞ்சி குப்பன் வாத்தியார் பற்றிய தன்னுடைய அனுபவத்தைத் தொடர்ந்து தன்னுடைய பிறப்பு, வளர்ப்புப்பற்றி உரையாடத் தொடங்கினார்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்தப் பில்லாஞ்சி கிராமம்தான். நாராயணசாமி முதலியார் எங்க அப்பா. அவருக்கு ஏழு பேர் பிறந்தோம். அதுல என் அண்ணன்களான ஜெயவேலு, குருவராஜி, தர்மலிங்கம், கணேசன் என்ற நான்கு பேர் பற்றி மட்டும்தான் தெரியும். இரண்டு பேர் நான் பிறப்பதற்கு முன்பாகவே சிறுவயதிலேயே இறந்துவிட்டதாக எங்கம்மா சொல்வாங்க. கடைசியாக நான் கிருஷ்ணசாமி.

எங்கப்பா சோளிங்கர் பாட்டிக்குளம் என்னும் இடத்தில் இருந்த பள்ளிக்கூடத்துல சேர்த்தாரு. நானும் மூணு மாதங்கள் போனேன். ஒருநாள் ஐந்தாவது படிக்கிற பையனை வாத்தியாரு அடிப்பதைப் பார்த்துட்டேன். அதற்குப் பயந்து, எடுத்துட்டுப்போன கூழைக் குடித்துவிட்டு என் பக்கத்திலே இருந்த எங்க ஊரு பையன்கிட்ட நான் அந்தப் பாத்திரத்தை எங்கவீட்டுல கொடுத்திடச் சொல்லிட்டு ஓடிவந்தவன். அப்புறம் பள்ளிகூடத்துப் பக்கம்கூட போகவில்லை. இரண்டுநாள் எங்க அப்பாவுக்குப் பயந்துட்டு எங்க ஊர்ல இருக்கிற மாமா வீட்ல இருந்தேன். அப்புறம் எங்கம்மா வந்து கூட்டிகிட்டு போனாங்க. வீட்டுல இருந்த மாடு மேய்த்துக்கொண்டு, பயிருக்கு நீர்பாய்ச்சிக்கொண்டு, வண்டிமாடு ஒட்டிக்கொண்டு காலம் போனது.

அப்புறம் கல்யாணம் செய்து வைத்தாங்க. அதுலேயும் சந்தோஷம் இல்லாமல் போச்சு. கல்யாணமாகி நல்லதா இருந்தேன். முதலில் ஆண் குழந்தைப் பிறந்தது. பிறகு என் மனைவி கர்ப்பம் அடைந்தாள் பிரசவ வலியில் அவளும் குழந்தையும் இறந்துவிட்டார்கள். முதல்ல பிறந்த ஆண் குழந்தையும் கே.பி.எஸ் பஸ்ஸில் அகப்பட்டு இறந்துட்டான். இப்ப எனக்கு 80 வயது ஆகிறது. என் அண்ணன் மகனுடன் வாழ்ந்து வருகிறேன் என்று தன் துன்ப வாழ்க்கையை உறவினரோடு பகிர்ந்துகொள்வதைப் போன்று எவ்வித வேறுபாடும் கருதாது இயல்பாகப் பகிர்ந்துகொண்டார்.

(கட்டுரையின் அடுத்த பகுதி மதியம் 1 மணி பதிப்பில்)

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ஜெயராமன் வாத்தியார்

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 21 ஜன 2018