மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: கட்டண உயர்வை எதிர்த்த அமைச்சர்! மறுத்த முதல்வர்!

டிஜிட்டல் திண்ணை: கட்டண உயர்வை எதிர்த்த அமைச்சர்! மறுத்த முதல்வர்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை முடிவுக்கு வந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. உடனடியாகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடந்திருக்கிறது.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர், ‘போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையில் என்னோட தலைதான் உருண்டது. நான் சரியாகச் செயல்படவில்லை என எல்லோரும் பேசினாங்க. போக்குவரத்துத் தொழிலாளர்கள் என் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்கள். இதுவரையிலுமே அப்படித்தான் இருக்காங்க. இப்போ நீங்க உடனே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தலாம் என சொல்லும்போது, மக்களோட கோபம் அரசாங்கத்தின் மீது என்பதைவிட என் மீதுதான் திரும்பும். இப்போ உடனே கட்டணத்தை ஏற்றித்தான் ஆகணுமா?’ எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு எடப்பாடியோ, ‘இப்போ இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க கட்டணத்தை ஏற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை நீங்க சமாளிச்சுதான் ஆகணும். துறைக்கு நீங்கதானே அமைச்சராக இருக்கீங்க. எல்லாம் ரெண்டு நாள் அப்படித்தான் இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாகிடும். இது சம்பந்தமாக மீடியாவுக்கு நீங்கதான் பேசியாகணும். அதற்கு தயாராக இருங்க...’ எனச் சொல்லிவிட்டாராம்.

முதல்வர் உத்தரவுப்படியே நேற்று இரவு பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்துவிட்டு, தனது சொந்த மாவட்டமான கரூருக்குக் கிளம்பிவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். கரூரில் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘இப்போ உடனடியாக கட்டணத்தை ஏற்றுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. நான் எவ்வளவோ சொல்லியும் சி.எம். கேட்கல. லாஸ்ல போகுதுன்னா அதை வேற எதாவது வழியில்தானே சமாளிக்கணும். இப்போ பாருங்க... மக்கள் எல்லோரும் என்னை வில்லன் மாதிரி பார்க்கிறாங்க’ என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். விஜயபாஸ்கர் கரூரில் இருந்த சமயத்தில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன் வந்திருக்கிறது. ‘சரிங்க... சரிங்க.. செஞ்சுடுறேன்...’ என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தவர், ‘உடனே பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க..’ எனத் தனது உதவியாளரிடம் சொல்லியிருக்கிறார்.

உதவியாளரும் என்ன ஏதுவென விசாரிக்காமல் உடனே கரூரில் உள்ள மீடியாக்காரர்களை அழைத்திருக்கிறார். பிரஸ் மீட்டில், ‘எதிர்க்கட்சிகள் பேருந்துக் கட்டண உயர்வை வாபஸ் வாங்கச் சொல்லித் தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். என்ன போராட்டம் நடத்தினாலும் கட்டண உயர்வைத் திரும்பப் பெற முடியாது. ஏற்றியது ஏற்றியதுதான்!’ எனச் சொல்லியிருக்கிறார். பிரஸ் மீட் முடிந்த பிறகு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒன்றியச் செயலாளர் ஒருவரிடம், ‘போராட்டம் நடத்தினாலும் கட்டண உயர்வை திரும்பப் பெற மாட்டோம்னு சொல்லச் சொல்றாங்க. அவங்க எல்லோரும் சென்னையில்தானே இருக்காங்க. அவங்களே சொல்லி இருக்கலாம். என்னை வெச்சே எல்லா டெஸ்டும் பண்றாங்க. நான்தான் இதை மீடியாவுக்கு சொல்லணும்னு என்னை மாட்டிவிட்டுட்டாங்க...’ என்று சொல்லியிருக்கிறார்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018