பள்ளி முதல்வரைக் கொன்ற மாணவன்!


ஹரியானா மாநிலத்திலுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி முதல்வரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரித்து சர்பா. இவர் அப்பகுதியில் உள்ள விவேகானந்தா தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிவந்தார். இவர் நேற்று (ஜனவரி 19) மாலை இதே பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவனை வருகைப்பதிவு குறைவு காரணமாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வரும்பொழுது தந்தையின் கைத்துப்பாக்கியையும் எடுத்துவந்துள்ளான். இன்று மதிய வேளையில் முதல்வரைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்று, துப்பாக்கியைக் கொண்டு முதல்வரை நோக்கிச் சுட்டுவிட்டுத் தப்பி ஓட முயன்றான். அப்போது பள்ளி நிர்வாகிகள் அவனைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ரித்து, சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து யமுனாநகர் போலீஸ் அதிகாரிகள் மாணவனையும், அவனது தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.