விக்ரம் படத்தைத் தயாரிக்கும் கமல்


கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை கமல் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
கமலிடம் உதவியாளராகத் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் கமலைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்கிய தூங்காவனம் திரைப்படம் கவனம் பெற்றது. பிரெஞ்ச் திரில்லர் திரைப்படம் ஒன்றின் பாதிப்பில் உருவாகிய அந்தத் திரைப்படம் போலவே மற்றொரு கதையை எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், கமல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனவரி 1 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக டிசம்பர் 31ஆம் தேதி விக்ரமின் தந்தை காலமானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டது.
தற்போது கமல் இந்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘‘திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M.செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்!’’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.