ஏமாற்றம் அளித்த ஷரபோவா


ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராகத் திகழ்ந்துவரும் மரியா ஷரபோவா இன்று (ஜனவரி 20) மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஆஞ்சலிக்கியூ கெர்பேர் உடன் மோதினார்.
தரவரிசையில் 92ஆவது இடத்தில் உள்ள கெர்பேர் தொடக்கம் முதலே அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆதிக்கம் செலுத்தினார். எனவே இந்தப் போட்டியின் முதல் செட்டினை 6-1 எனக் கைப்பற்றி, ஷரபோவா மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டினையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.