மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக!

கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக!

மாநகர மற்றும் புறநகர் பேருந்துகளில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டண உயர்வுக்கு, தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தமிழக மக்களுக்கு மேலும் சுமையளிக்கும் என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பயணக்கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (ஜனவரி 19) தமிழக அரசு அறிவித்தது. திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்த கட்டண உயர்வுக்கு எதிராக, தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நகரப் பேருந்துகள் மற்றும் மாநகரப் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் 66 விழுக்காடும், அதிகபட்சக் கட்டணம் 58 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளன. புறநகர் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் விரைவுப் பேருந்துகளில் 41% அளவுக்கும், அதிசொகுசுப் பேருந்துகளில் 50% அளவுக்கும், அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் 57% அளவுக்கும், குளிர்சாதனப் பேருந்துகளில் 55% அளவுக்கும், வோல்வோ பேருந்துகளில் 54% அளவுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த பேருந்து கட்டண உயர்வு குறித்து, தமிழகத்திலுள்ள கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சி:

இந்த கட்டண உயர்வால் தமிழக மக்கள் மீது தாங்கமுடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளது அதிமுக அரசு. மக்கள் மீது அக்கறை இருக்குமானால், இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் 3000 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருந்தால், இதனை தவிர்த்திருக்கலாம்.

ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி:

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறி பேருந்துக் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்தக் காரணிகளால் ஏற்பட்ட இழப்பை விட, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும்.

இனிவரும் காலங்களில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணங்களை உயர்த்துவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக ஆட்சியாளர்கள் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தருவதில்லை. எனவே, தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:

பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துவிதமான விலைகளும் உயரும். அது வறுமையைக் கூட்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான்.

பணமதிப்பு அழிப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு என மத்திய அரசு தொடுத்த அடுக்கடுக்கான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் தமிழக மக்களைப் பேருந்து கட்டண உயர்வு என்ற சம்மட்டியால் தாக்கியிருக்கிறது அதிமுக அரசு. கட்டண உயர்வோடு விபத்து / சுங்க வரியும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

ஆர்.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

நிர்வாகச் சீர்கேடும், ஊழலும்தான் நட்டத்திற்கு முக்கியமான காரணமாகும்.நேர்மையான முறையில் வெளிப்படையான நிர்வாகம் போக்குவரத்து கழகங்களில் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ,முதியோர்களுக்கு இலவச பாஸ் கொடுப்பதனால் ஏற்படும் ஈட்டுத் தொகையை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டும். போக்குவரத்து என்பது ஒரு சேவைத்துறை என்பதை அரசு புரிந்து கொண்டு பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

செந்தில் பாலாஜி, முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்

பொதுமக்கள் மீது சுமையைச் சுமத்துகிற, பல்வேறு நிலைகளில் அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது எடபபடி அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டு, இந்த துரோக அரசு பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டண உயர்வு தமிழக அரசின் இயலாமையைக் காட்டுகிறது. மற்ற மாநிலங்களிலுள்ள பேருந்து கட்டணத்தை ஒப்பிடுபவர்கள், மற்ற மாநிலங்களில் இருக்கிற தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான தொழில் வாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் அரசு செயல்பட்டு வருகின்றதா என்பதையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018