ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!


நடிகர் சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் செய்ததற்காக போராட்டத்தில் ஈடுபடுட்டுள்ள அவரது ரசிகர்களிடம் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினிகளாக இருக்கும் நிவேதிதா மற்றும் சங்கீதா ஆகியோர் சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் செய்யும் விதமாக “அனுஷ்காவுக்கு ஹீல்ஸ்னா அமிதாபுக்கு ஸ்டூல் போட்டு நடிக்கலாம்” எனப் பேசினர். இந்தப் பேச்சு சூர்யா ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடம் பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. இதற்கு திரைத்துறையினரும் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
தொகுப்பாளினிகளின் பேச்சு சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்ததால் அவரின் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த சன் டிவி நிறுவனத்தைக் கண்டித்து சென்னை எம்ஆர்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நீடித்தால் பிரச்சினை வலுக்கும் என்பதை உணர்ந்த சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.