மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மக்கள்மீது அரசு தொடுக்கும் தாக்குதல்!

சிறப்புக் கட்டுரை: மக்கள்மீது அரசு தொடுக்கும் தாக்குதல்!

பா.நரேஷ்

இந்த அறிவிப்பு கொடுக்கப்போகும் நெருக்கடிகள் என்பது போக்குவரத்துத் தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தம் சாமானியர்களுக்குக் கொடுத்த நெருக்கடிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். ‘தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு’ எனும் மாநில அரசின் அறிவிப்பைத்தான் சொல்கிறேன். போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டமாவது எட்டு நாள்களுடன் முடிந்தது. சாமானிய மக்களுக்கான நெருக்கடிகளும் போராட்டங்களும் அந்த எட்டு நாள்களுக்குத்தான். ஆனால், இந்தக் கட்டண உயர்வின் காரணமாகத் தினம்தினம் நிரந்தரமாக நடுத்தர மக்களைச் சிரமத்துக்கு ஆளாக்கியிருக்கிறது தமிழக அரசு.

அதுவும் கட்டணங்களை ஒரேயடியாக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ரூ.3 ஆக இருந்த மாநகரப் பேருந்து டிக்கெட்டின் விலை ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் சாதாரணப் பேருந்துகளில் 5 ரூபாயாக இருந்த தற்போதைய கட்டணம், 6 ரூபாயாகவும், புறநகர் விரைவு பேருந்துகளில் 30 கிலோமீட்டருக்கு 17 ரூபாயாக இருந்த டிக்கெட்டின் விலை 24 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரங்களில் இருக்கும் சாமானிய மக்களின் நிலைமை இன்னும் மோசம். ஏனெனில், மாநகரங்களில் தற்போதைய குறைந்தபட்சக் கட்டணம் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 12 ரூபாயிலிருந்து 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதைவிட அதிர்ச்சி என்னவென்றால், இந்தக் கட்டண உயர்வுகளுக்கு அரசு சொல்லும் காரணம்... புதிய பேருந்துகள் வாங்குவது, எரிபொருள் செலவீனங்கள் மற்றும் பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்று முடிக்கிறது.

மக்களுக்கு எழும் கேள்விகள்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தின்போது ஆளுங்கட்சியினரிடமிருந்து ஒரு கேள்வி எழுந்தது. ‘இத்தனை நாள்களாகப் போராடாதவர்கள், எதற்காக இந்த திடீர்ப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்? இதில் தொழிற்சங்கங்களின் அரசியல் உள்ளது’ என்றனர். இன்று அதே கேள்வியை ஆளும் அரசிடம் கேட்கத் தோன்றுகிறது. இத்தனை நாள்கள் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் இன்று திடீரென உயர்த்துவது சந்தேகத்தை எழுப்புகிறது. ஊழல் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று தெரிந்தவுடன் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தி சமாளிக்கப் பார்க்கிறதா அரசு?

கேரளா, ஆந்திரா, கர்நாடக அரசுகள் மூன்றாண்டுகளுக்கு முன்பே கட்டண உயர்வை அறிவித்தன. அந்த மாநிலங்களோடு ஒப்பிடும்போது தற்போதைய கட்டண உயர்வு குறைவுதான் என்ற சாக்கும் சேர்த்தே அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியே வைத்துக்கொள்வோம். பேருந்துகளின் கட்டண உயர்வுகளுக்காக அவர்கள் சொல்லும் காரணம் சரி என்றே வைத்துக்கொள்வோம். பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமலேயே அரசாங்க நிதியிலிருந்து அந்தக் காரணங்களை நிறைவேற்றியிருக்கலாமே. ஏனெனில், இன்று இந்தக் கட்டண உயர்வினால் பாதிக்கப்படும் அதே மக்களின் வரிப்பணமும் அரசாங்க நிதியில்தானே அடங்கியிருக்கிறது. அரசாங்க நிதியில் பற்றாக்குறை இருக்கிறது என்ற காரணத்தை முன்வைத்தால், எந்தக் காரணமும் சொல்லாமல், தடாலடியாக எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை இருமடங்கு உயர்த்தி தாராள மனம் காட்டுவதற்கு மட்டும் நிதி எங்கே இருந்து கிடைத்தது என்ற கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

அன்று போக்குவரத்துத் தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தத்தைப் பற்றி விவாதம் செய்த, கேள்வி கேட்ட எத்தனை பேர் இன்று அரசாங்கத்தின் இந்தத் திடீர்க் கட்டண உயர்வைப் பற்றிக் கேள்வி கேட்பார்கள்? கேள்விகள் இருக்கட்டும், பாதிக்கப்படப்போகும் மக்களுக்காகக் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்ட வேண்டாமா? ஏதோ திடீரென்று அவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டதாக அமைச்சர்களும் அரசாங்கமும் நாடகம் செய்தனர். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் பலியாடுகளா?

தாங்கள் செய்யும் வேலைக்கான நியாயமான சம்பளம் வழங்கப்படாதபோதும், கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தைகளையும் மட்டுமே நம்பி சாமானியர்களுக்காக உழைத்துக்கொண்டிருந்தனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள். நியாயமான சம்பளம் என்பதெல்லாம் அப்புறம்தான். அவர்களுக்கு வரவேண்டிய சம்பளமே வழங்கப்படாத நிலையில், இந்தப் பெருவணிகப் பொருளாதாரச் சூழலில் அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வேலை பார்க்க முடியாது. அவர்களுடைய பணம் ஊழல் எனும் பெயரில் திருடப்பட்டுள்ளது. அது திட்டமிட்ட துரத்தியடிப்புதான்.

ஆனால் அதேநேரம், என்ன வேலை செய்கிறார்கள் என்றே மக்களுக்குத் தெரியாத, அழுக்குப்படாத தூய கரங்களை உடைய அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்குமான சம்பளம் மக்களுடைய வரிப்பணத்திலிருந்து எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல் பல மடங்குகளாகப் பெருக்கப்படுகிறது. அதுவும் இங்கே ரத்தமும் சதையுமாக ஒரு கூட்டம் கதறிக்கொண்டிருக்கும்போது, அதை சட்டையே செய்யாமல் அதிகாரம் ஆடிய ஆட்டமிது. அது ஒரு பிரச்னையாகவே அவர்களுக்குத் தெரியாதபோது, பசியும் பட்டினியுமாக உழைத்துப் பிழைக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வெறும் 2.57 மடங்கு ஊதிய உயர்வு அதிகமாகத் தெரிவதும், அதை வழங்காமல் இழுத்தடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இவை தெரிந்தும், உங்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்றால் கட்சியிடம் கேள்விகளை எழுப்புங்கள். இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதற்கு ஊடகமும் பதவியும் தேவையில்லை. சாமானிய மக்களின் நிலை குறித்த அன்பும் அக்கறையும் இருந்தால் போதும்.

கேள்விகளிலிருந்து அரசியல் பழகுவோம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018