மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ஆண்டாள் சர்ச்சை: துர்காவின் சமாதானத் திட்டம்!

ஆண்டாள் சர்ச்சை: துர்காவின் சமாதானத் திட்டம்!

ஆண்டாள் சர்ச்சையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சமாதானம்தான் இப்போது திமுக வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது.

ஆண்டாள் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட வைரமுத்துவை மன்னிப்பு கேட்குமாறு திருக்கோட்டியூர் மாதவன் உள்ளிட்ட வைணவர்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை அணுகியதையும், இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனருமான ஜெகத்ரட்சகன் பாலமாக இருப்பதையும் மின்னம்பலத்தில், ஸ்டாலின் வரை சென்ற ஆண்டாள் சர்ச்சை என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

ஆண்டாள் சர்ச்சைகளின் அடுத்த கட்டமாக திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனருமான ஜெகத்ரட்சகன் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவுரை சொல்வதுபோல நீண்டதொரு அறிக்கையை நேற்று (ஜனவரி 19ஆம் தேதி) வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவில்லிபுத்தூர் ஜீயர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஜெகத்ரட்சகன். மேலும், தனது அறிக்கையில், ‘ஆண்டாள் பற்றிய இதுபோன்ற விபரீத ஆய்வுகள் இனியும் வேண்டாம்’ என்றும் உரிமையோடு அறிவுறுத்தியிருக்கிறார்..

ஆண்டாளின் பெருமைகளை தமக்கே உரிய தமிழில் பட்டியலிட்டுள்ள ஜெகத்ரட்சகன், ‘ஓர் அமெரிக்க ஆய்வு சொல்லிவிட்டது என்பதற்காக நமது மண்ணின் மரபு சார்ந்த மனநிலையும் அழகியல் நுகர்வும், கவித்துவத்தின் ஆழ்நிலை தரிசனமும், அகப்பொருள் தத்துவத்தின் ஆழமும் மேலைநாட்டவர்களுக்குப் புரியும் என்று எடுத்துக்கொள்வது பிழையால் நெய்த பிரேமை அல்லவா என்றும் கேட்கத் தோன்றுகிறது இயல்புதானே.

ஒரு பேச்சோ, கட்டுரையோ வேள்வி நெருப்பாக இருக்கலாம், அலங்காரச் சொற்கள் அதில் நாதத் தெறிப்பாக ஒலிக்கலாம். ஆனால், ஆளப்படும் கருத்துகள் பொறுப்பாக இருக்க வேண்டும். வேண்டாம் இதுபோன்ற விபரீத ஆய்வுகள்’ என்று வைரமுத்துவுக்கு அறிவுறுத்தியுள்ளார் ஜெகத்ரட்சகன்.

மேலும், ‘எம் வழிபாட்டுக்குரிய திருவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் திமுகவின் செயல் தலைவர் நம் தளபதியாரின் மனைவியார் துர்கா ஸ்டாலின் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்க தம் உண்ணா நோன்பை கைவிட்டுள்ளார்கள்’என்பதையும் தெரிவித்துள்ளார்.

‘தீக்குச்சிகளைக் கிழித்துப் போடுவது எளிது. அது பற்றிக் கொள்ளும்போது தொற்றிக்கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்வது அத்துணை எளிதன்று. காலகாலமாய் காலம் கற்பிக்கும் பாடம் இது’ என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெகத்ரட்சகன்.

இந்த அறிக்கை ஜெகத்ரட்சகன் பெயரில் வந்துள்ளதேதவிர, இதன் பின்னால் இருப்பது திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், அவர் மனைவி துர்கா ஸ்டாலினும்தான் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். அவர்களிடம் பேசினோம்.

“வைரமுத்துவின் இந்த கருத்து பற்றி சர்ச்சை உண்டானபோது இதுபற்றி மிகவும் வருத்தப்பட்டவர் துர்கா ஸ்டாலின். துர்கா காலையில் எழுந்து காபி குடிக்கும் முன்பே ஒரு திருப்பாவை சொல்லிவிட்டுத்தான் காபி குடிப்பார். அப்பேர்ப்பட்ட ஆண்டாள் பக்தை அவர். இதுபற்றி அவர் செயல் தலைவர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு வைரமுத்துவிடமும் பேசியிருக்கிறார்.

வைணவச் செயல்பாட்டாளர் திருக்கோட்டியூர் மாதவனுக்கும் துர்காவிடம் நல்ல அறிமுகம் உண்டு. அந்தவகையில் அவரே திருக்கோட்டியூர் மாதவன் மூலமாக திருவில்லிபுத்தூர் ஜீயரிடமும் பேசியிருக்கிறார். ‘நான் வைரமுத்துவை மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறேன். நீங்க உடல்நலனை வருத்திக்காதீங்க’ என்று துர்கா சொல்லியிருக்கிறார். வைரமுத்துவை திருவில்லிபுத்தூர் அழைத்துவந்தால் அவர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவீர்களா என்பது வரை விசாரித்திருக்கிறார் துர்கா. இதன் பின்னர்தான் ஜீயர் போராட்ட வாபஸ் முடிவை எடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் துர்காவின் முயற்சியின் மூலமாக வைரமுத்து போன் மூலம் முதலில் திருவில்லிபுத்தூர் ஜீயரிடம் மன்னிப்பு கேட்க தயாரானார். ஆனால், அதற்குள் வைரமுத்துவைச் சிலர் சந்தித்து, நீங்கள் மன்னிப்பு கேட்டால் அது உங்களை ஆதரித்தவர்களை மிகவும் அவமானப்படுத்திவிடும் என்று அதைத் தடுத்துவிட்டார்கள். அதோடு உடனே இதுபற்றி நீதிமன்றத்துக்கும் சென்றார் வைரமுத்து.

இந்தத் தகவல் அறிந்துதான் துர்கா, திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் பேசி அதையடுத்து ஜெகத்ரட்சகன் மூலமாக இந்த அறிக்கை வெளிவந்திருக்கிறது.

கருணாநிதி அளவுக்கு ஸ்டாலினுடன் வைரமுத்துவுக்குப் பெரிய வேவ் லெங்த் இல்லை. அதேநேரம் இந்த அறிக்கையில் வைரமுத்துவையும் விட்டுக்கொடுக்காமல், அவர் ஆண்டாளை விமர்சித்தது பெரிய தவறு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இந்தச் சூழலில்தான் ஜெகத்ரட்சகன் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

எனவே, ஸ்டாலின் குரலாகவே ஜெகத்ரட்சகன் ஒலித்திருக்கிறார். அந்தக் குரலிலும் துர்காவின் குரல் உள்ளே இருக்கிறது. எப்படியாவது வரும் தேர்தலில் ஸ்டாலின் முதல்வராகிவிட வேண்டும் என்பதே துர்காவின் விருப்பம். அதற்கு இடையூறாக இதுபோன்ற மத ரீதியான பிரச்னைகளில் திமுக மாட்டிக்கொண்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலினைவிட துர்கா கவனமாக இருக்கிறார்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018