மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: வைரமுத்து சொல்ல வேண்டிய பதில்கள்!

சிறப்புக் கட்டுரை: வைரமுத்து சொல்ல வேண்டிய பதில்கள்!

அரவிந்தன்

ஆண்டாள் பற்றி வைரமுத்து மேற்கோள் காட்டிய கருத்தை ஒட்டிப் பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துவருகின்றன. இந்தப் பிரச்னையை இரண்டு வழிகளில் அணுக வேண்டும். ஒன்று, வைரமுத்துவின் எழுத்து. இன்னொன்று, அதற்கான எதிர்வினைகள். முதலில் வைரமுத்துவைப் பார்ப்போம்.

“அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது:

Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்” என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து.

வைரமுத்து குறிப்பிடும் நூல் இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டதல்ல. சிம்லா Institute of Advanced Studies சார்பில் 1978இல் வெளியானது. இந்த நூலின் ஆசிரியர் சுபாஷ் சந்திர மாலிக் அல்ல. அவர் இந்நூலின் எடிட்டர். இதழியல் துறையில் எடிட்டர் என்பதை ஆசிரியர் என மொழிபெயர்க்கலாம். ஆனால், பதிப்புத் துறையில் எடிட்டர் என்பதை ஆசிரியர் என மொழிபெயர்க்கலாகாது. தொகுப்பாசிரியர் என்று சொல்லலாம்.

வைரமுத்து மேற்கோள்காட்டும் வரியின் கருத்துக்கும் இந்தப் பிழைக்கும் தொடர்பில்லை என்பதால் இதை விட்டுவிட்டு, மேற்கோள் காட்டப்படும் வரியை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். தேவதாசி மரபு என்பது தமிழகத்தில் 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே, நாயக்கர்கள் காலத்தில்தான் புழக்கத்துக்கு வருகிறது. குறிப்பாக, 18, 19ஆம் நூற்றாண்டுகளில்தான் இது வலுவான மரபாக நிலைபெறுகிறது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. யூனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பிரஸ் வெளியிட்டுள்ள, தவேஷ் சோனெஜி (Davesh Soneji) என்பவர் எழுதிய University of Chicago Press Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India, நூலில் இந்த அம்சம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவதாசி மரபின் தொடக்கம், வளர்ச்சிப் போக்குகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஆதாரபூர்வமாகவும் விரிவாகவும் பேசும் இந்த நூல், கோயில் சார்ந்த தேவதாசி மரபு 18, 19ஆம் நூற்றாண்டுகளில் நிலைபெறுகிறது என்பதை நிறுவுகிறது.

எனினும், 10ஆம் நூற்றாண்டில் தேவதாசி மரபு இருந்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. ஆனால், ஆண்டாள் வாழ்ந்தது 8ஆம் நூற்றாண்டு. அந்தக் காலகட்டத்தில் தேவதாசி என்னும் மரபோ, சொல்லோ புழங்கியதற்கான சான்று எதுவும் இல்லை. அப்படி இருக்க, ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்திருக்கலாம் என்னும் வரியை வைரமுத்து மேற்கோள் காட்டுவது வரலாற்று ரீதியான பிழை. கட்டுரை பேசும் பொருளின் பின்புலத்தில் இந்தக் கருத்துக்கான தேவையும் பொருத்தமும் என்ன என்பதை நிறுவ வேண்டும்.

இந்த வரியை மேற்கோள் காட்டும் வைரமுத்து, பக்தி உள்ளவர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் சொல்கிறார். அப்படியானால், இந்தச் சொல் எத்தகைய பொருள் கொள்ளப்படும் என்பது அவருக்குத் தெரிந்தே இருக்கிறது என்பது தெளிவாகிறது. அப்படியானால், இந்தச் சொல்லை அவர் பயன்படுத்திய நோக்கம் என்ன என்னும் கேள்வி எழத்தான் செய்யும். சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொடும்போது ஆதாரபூர்வமாகப் பேச வேண்டும், அல்லது அதில் தன்னுடைய நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். வைரமுத்து இரண்டையும் செய்யவில்லை.

பக்தி மரபும் கலை மரபும்

நாயக்கர்கள் காலத்தில் நிலைபெற்ற ஒரு மரபு காலத்தால் முந்தைய ஆண்டாளின் அடையாளமாக ஏன் சொல்லப்படுகிறது என்னும் கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஆண்டாளின் காலத்தில் தேவதாசி மரபு இருந்திருந்தாலும் ஆண்டாளை தேவதாசி எனச் சொல்ல இடம் இருக்கிறதா என்னும் கேள்வியையும் நாம் எழுப்பிக்கொள்ளலாம். அறிவுலகில் விவாதத்துக்கு அப்பாற்பட்ட, கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று எதுவுமே இருக்க முடியாது என்பதால் இந்தக் கேள்வியை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதாக ஆண்டாள் பல இடங்களில் சொல்கிறார். பெண்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல், கோயிலுக்கு நேர்ந்துவிடுதல் ஆகியவை தேவதாசி மரபின் தன்மைகள். இந்த ஒற்றுமை கருதி இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த ஒற்றுமை மேலோட்டமானது. வைணவ மரபில் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல், அர்ப்பணமாகுதல் என்பது ஜீவாத்மாக்கள் அனைவருக்குமான மோட்ச கதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பரமாத்மாவான விஷ்ணுவைப் புருஷன் என்றும் ஜீவாத்மாக்களான மக்களைப் பெண்கள் எனவும் வைணவ பக்தி மரபு உருவகிக்கிறது. பரமாத்மாவை (ஆண்) அடைவதே ஜீவாத்மாவின் (பெண்) லட்சியம் என்பது இதன் குறியீட்டுப் பொருள். தன்னைப் பெண்ணாகவும் விஷ்ணு அல்லது பரந்தாமன் அல்லது கண்ணனை ஆணாகவும் வரித்து எழுதும் கவிதைக்கு நாயக – நாயகி பாவம் என்று பெயர். ஆண்டாளின் பாடல்களில் வெளிப்படுவது இந்த பாவம்தான். மீராவின் பாடல்களிலும் பிற்காலத்தில் பாரதியாரின் பாடல்களிலும் இதே பாவம் வெளிப்படுகிறது.

தேவதாசி மரபு என்பது கடவுளுக்கு அர்ப்பணமாகி இறைமையுடன் இரண்டறக் கலக்கும் பக்தி மார்க்கமல்ல. கோயிலைச் சார்ந்து, கடவுளுக்குக் கலாபூர்வமாகச் சேவைசெய்து வாழ்வதே தேவதாசி மரபின் அடிநாதம். அதாவது, நாயக நாயகி பாவம் மோட்சத்துக்கான சாதனம். தேவதாசிகள் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படுவது கலை சார்ந்த வாழ்முறை. இரண்டும் அடிப்படையிலேயே வேறானவை.

ஆண்டாள், கோயிலுக்கு நேர்ந்துவிடப்படும் வாழ்க்கையை வாழ்ந்ததற்கான சான்று எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அதை முன்வைக்க வேண்டியது வைரமுத்துவின் கடமை. சான்று எதையும் குறிப்பிடாமல் ஒற்றை வரி மேற்கோளைக் காட்டிவிட்டுப் போவது ஏன் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

தேவதாசி மரபுக்கும் ஆண்டாள் முதலான வைணவ மரபுக் கவிகள் முன்னெடுக்கும் பக்தி மார்க்கத்துக்கும் இடையில் உள்ள வேற்றுமையை வைரமுத்து அறிந்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு இயல்பானது. இவை இரண்டையும் மேலோட்டமான முறையில் ஒன்றாகக் காணும் ஒரு வரியை மேற்கோள் காட்டிவிட்டு, இதை பக்தர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நமுட்டுச் சிரிப்புடன் அதைக் கடந்து செல்லும் அணுகுமுறைக்கு அறிவுலகில் மதிப்பும் இல்லை.

தேவதாசி என்றால் இழிவா?

வைரமுத்து சார்பில் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தேவதாசி என்னும் சொல் அதன் மூலப்பொருளில் மிக உயர்ந்த தன்மையையே கொண்டிருக்கிறது. அப்படி இருக்க, இந்தச் சொல் ஆண்டாளை இழிவுபடுத்துகிறது என்று எப்படிச் சொல்ல முடியும் என்பதே அந்த வாதம். மெத்த சரி. தேவதாசி மரபு என்பது தன்னளவில் இழிமரபல்ல. தேவதாசி என்னும் சொல்லும் அதன் ஆதாரமான பொருளில் இழிசொல் அல்ல. ஆண்டாள் தேவதாசி என்று நிரூபிக்கப்பட்டால், அதில் அவருக்கு எந்த இழிவும் இல்லை. ஆனால், பக்தி மார்க்கம் சார்ந்து கடவுளுக்கு அர்ப்பணமாதல் என்னும் உன்னதப் பொருளில் அந்தச் சொல்லை வைரமுத்து பயன்படுத்தவில்லை என்பது அவர் அதற்கான விளக்கம் எதையும் முன்வைக்கவில்லை என்பதிலிருந்தே தெரிகிறது.

தேவதாசி மரபு தோன்றியபோது கலை சார்ந்து எவ்வளவு உன்னதமான நோக்கத்தை அது கொண்டிருந்தாலும் காலப்போக்கில் அது இழிவழக்கமாகச் சிறுமைப்படுத்தப்பட்டது. நிலவுடமைச் சமூகத்தில் வசதி படைத்த ஆண்களின் பாலியல் வேட்கைக்கான வடிகாலாக அந்த மரபு உருமாறியது. தேவதாசிப் பெண்கள் இவ்வாறு பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் தேவதாசி ஒழிப்புச் சட்டம் 1940களின் இறுதியில் கொண்டுவரப்பட்டபோது வீணை தனம்மாள் போன்ற மகத்தான கலைஞர்கள் பலர் அந்த முயற்சியை எதிர்த்தனர். பாலியல் சுரண்டலைக் களைவது அவசியம். அதற்காக, கலைகளைப் பேணி வளர்க்கும் தேவதாசி மரபையே அழிக்க வேண்டாம் என அவர்கள் கோரினர். இதை பால சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்று நூலில் டக்ளஸ் நைட் ஜூனியர் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.

எனினும், தேவதாசிப் பெண்கள் அப்போது அனுபவித்துவந்த பாலியல் ரீதியான கொடுமை, அவர்கள்மீது படிந்திருந்த பாலியல்சார் களங்கம், சமூகத்தில் அவர்களைப் பற்றி இருந்த இழிவான கருத்து ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தேவதாசி மரபும் அந்தச் சொல்லும் தம்மளவில் தூய்மையானவை என்றாலும் நடைமுறையில் அவை இழிந்த பொருளையும் மதிப்பையும் கொண்டிருந்ததால் அந்த மரபு ஒழிக்கப்பட்டது. அந்தச் சொல்லும் வெறுத்து ஒதுக்கப்பட்டது. தேவதாசி மரபில் வந்தவர் என யாரையாவது இப்போது சுட்டினால் அது அவரை இழிவுபடுத்தி அவமானப்படுத்துவதாகவே கருதப்படுகிறது. பொதுப் புத்தியில் தேவதாசி என்பது பாலியல் சுரண்டலுக்கு உள்ளான அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணையே குறிக்கிறது.

கவிதை மரபு, மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அரசியல் சார்ந்த விழிப்புணர்வும் கொண்ட வைரமுத்துவுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்காது. இந்நிலையில் கடவுளுக்கு ஒப்பாகக் கருதப்படும் ஆண்டாள் போன்றதோர் ஆளுமையைப் பற்றிப் பேசுகையில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதில் உள்ள விபரீதமும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறியதுபோல, இத்தகைய ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவர் “10000 முறை யோசித்திருக்க வேண்டும்”. பொது வெளியில் இயங்குபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி அது.

அதிமுக தலைவர்களைப் பற்றிய தனது விமர்சனத்தில் impotent என்னும் சொல்லை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பயன்படுத்தியபோது இதேபோன்ற எதிர்ப்பு எழுந்தது. அந்தச் சொல்லுக்கு திறனற்ற என்றுதான் பொருள் என குருமூர்த்தியும் அவரை ஆதரித்தவர்களும் கூறினார்கள். ஆனால், அந்தச் சொல்லுக்கு ஆண்மையற்றவர் என்னும் சொல் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் நிலையில் அது குறித்த கவனம் இல்லாமல் அந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று பலரும் எதிர்வினை ஆற்றினார்கள். அதே தர்க்கம் வைரமுத்துவுக்கும் பொருந்தும். தவறான பொருள் கொடுக்கக்கூடிய எந்த ஒரு சொல்லையும் பொது வெளியில் மிக கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வைரமுத்து இந்த விஷயத்திலும் சறுக்கியிருக்கிறார்.

பிற்கால மரபைக் குறிக்கும் ஒரு சொல்லை முற்காலத்திய நிகழ்வொன்றின் மீது போதிய ஆதாரமின்றிப் போடுவது வரலாறு, ஆய்வு சார்ந்த பிழை. சமகாலச் சூழலில் அந்தச் சொல்லுக்கு இருக்கும் பொருள் குறித்த கவனம் இன்றிப் பயன்படுத்துவது சமூகப் பொறுப்பு சார்ந்த பிழை.

வருத்தம் தெரிவிக்கும் வைரமுத்து தனது செயலில் உள்ள இந்த இரு பிழைகளையும் உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறாரா என்பதே முக்கியம். தன் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லட்டும்.

விவாதத்துக்கு எதிரான அரசியல்

வைரமுத்துவின் கூற்றைப் பற்றிய விவாதம் ஒருபுறம் இருக்க, அந்தக் கூற்றுக்கான எதிர்வினைகள் விபரீதமான பரிமாணத்தை எடுத்துள்ளன. வைரமுத்துவின் கூற்றுக்கு ஆண்டாளின் பாடல்கள், வரலாற்றுத் தரவுகள் சார்ந்து சிலர் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். ஆண்டாளைத் தெய்வமாகக் கருதுவதாகச் சொல்லிக்கொள்ளும் சிலர் கீழ்த்தரமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். வைரமுத்துவின் வம்சத்தைப் பழிப்பதிலிருந்து அவர் தலையை வெட்ட வேண்டும் என்பதுவரை ஆபாசமும் வன்முறையும் தாண்டவமாடுகின்றன. சொல்லப்பட்டது என்ன, அதன் பின்புலம் என்ன, அதற்கான வரலாற்று, சமூக நியாய அநியாயங்கள் என்ன என்பதையெல்லாம் யோசிக்காமல் பலரும் கொதிப்படைகிறார்கள். தேவதாசி மரபைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடியவர்களின் வழித்தோன்றல்கள் சிலர், இன்று அதே தேவதாசி என்னும் சொல்லைக் கேட்டுக் கொதிப்படையும் போலித்தனத்தையும் பார்த்துவருகிறோம்.

இந்த எதிர்வினைகள் இவர்களுடைய தரத்தையும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலின் விபரீதத்தையும் அம்பலப்படுத்துவதுகின்றன. கடவுள் உள்பட எதையும் கேள்வி கேட்கும், விவாதிக்கும் மரபு இந்தியாவில் உள்ளது. இந்த விவாத மரபின் சாரத்தை உள்வாங்காதவர்களே விவாதத்துக்குப் பதில் கூக்குரல் எழுப்புவார்கள். எதையும் கேள்விக்கும் விவாதத்துக்கும் உட்படுத்துவது அறிவுலக தருமம். கேள்வி கேட்காதே, விவாதிக்காதே என்று கூறுவது பாசிச அதருமம். இந்த அதருமத்தின் பிரதிநிதிகள் தமது முகங்களை மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் கூக்குரல்களுக்கு மத்தியில் அறிவார்த்தமான விவாதங்கள் அமுங்கிவிடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை அறிவுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018