மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 30: ஜஸ்டின் ட்ரூடோ

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 30: ஜஸ்டின் ட்ரூடோ

நித்யா ராமதாஸ்

தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பது, பாரம்பர்ய உடையில் பொங்கல் பானை வைத்து மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவது என்று கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் அதிகமாக ஜஸ்டின் ட்ரூடோ பெயர் காணப்படுகிறது. இளம் தலைவராக நாட்டின் அதிபராகப் பொறுப்பில் உள்ள இவருக்கு, அரசியல் ஆர்வலர்கள் பலர் இருந்தாலும், சாதாரணமாகப் பழகும் முறை, எல்லோருடனும் கலந்து பேசும் பழக்கம் போன்ற பல சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறைக்கான சரியான தலைவர் என்ற பெருமையை இவர் சம்பாதித்துள்ளார் என்று இங்கு குறிப்பிட வேண்டும். இந்த வாரம் கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றிக் காண்போம்.

அரசியல் குடும்பம்

ஜஸ்டின் பியர் ஜேம்ஸ் ட்ரூடோ, டிசம்பர் 25ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள ஓடாவா என்ற இடத்தில் பிறந்தார். அப்போதைய அதிபரான பியர் ட்ரூடோ மற்றும் மார்கரெட் சின்க்ளேர் என்ற தம்பதிக்குப் பிறந்த ஜஸ்டின், பிறந்த நொடியிலிருந்து கனடா நாட்டின் பத்திரிகைகளில் செய்திகளாக வலம்வரத் தொடங்கினார். ஆட்சியில் இருந்த அதிபருடைய வாரிசு என்பதால், நாடெங்கும் இவரது பிறந்த செய்தி பெரும் கோலாகலத்துடன் வரவேற்கப்பட்டது. தவிர, பல பரிசுகளும், கையால் தைக்கப்பட்ட ஸ்வெட்டர்களும் அதிபர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது என்று ஜஸ்டின் தாயார் மார்கரெட்டுடைய சகோதரி சில பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயத்தில், தனது தந்தையுடன் பல அரசியல் பயணங்களில் வெளிநாடுகளுக்கு உடன் சென்று வருவது சிறு வயதிலேயே ஜஸ்டினின் வாடிக்கையாக இருந்தது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது தனது தந்தையை மட்டுமல்லாது, சிறுவன் ஜஸ்டினின் புகைப்படங்களும் அடிக்கடி பத்திரிகைகளில் இடம்பெற்றது. புகைப்படங்களுடன் சிறு துணுக்கு செய்திகளும் வந்தமையால், மக்களுக்குச் சிறுவன் ஜஸ்டின்மீது அபார நம்பிக்கை அப்போதே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டினுக்கு ஐந்தாவது வயதில், அவரது தந்தையும் தாயாரும் பிரிந்தனர். இருவருடனும் மாறி மாறி வசித்த ஜஸ்டின் மற்றும் அவரது சகோதரர்களின் வாழ்க்கையில் அந்தப் பிரிவு சிறு காயத்தை ஏற்படுத்தவே செய்தது. இருப்பினும் தந்தை மற்றும் தாயார் இருவருடைய தொடர் கண்காணிப்பில் ஜஸ்டின் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார்.

அதிபர் மாளிகை, அரசியல் கூட்டங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் என்ற அரசியல் வாரிசுடைய வாழ்க்கை வாழ்ந்தாலும் தனிப்பட்ட முறையில், ஜஸ்டின் ஒரு விளையாட்டுப் பிள்ளையாகவே வளர்ந்தார். வீட்டில் இருக்கும்போது, தொலைபேசி எண்கள் கொண்ட டைரக்டரி புத்தகத்திலிருந்து, எண்களைத் தேர்ந்தெடுத்து, விளையாட்டாக அழைப்புகளை விடுத்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெற்றோர்களின் பிரிவால் ஏற்பட்ட தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், தனது விளையாட்டுப் போக்கு ஜஸ்டினுக்கு என்றுமே உடன் இருந்தது என்றே சொல்லலாம். இன்றும், சில சந்தர்ப்பங்களில், ஆடுவது, விளையாட்டாக மக்களிடம் பேசுவது போன்ற குணங்கள் வெளிப்படுவதைக் காணலாம்.

தந்தையுடன் வளர்ந்தாலும், சிறுவன் ஜஸ்டினின் வாழ்க்கையில் சில ஆரம்ப கால மாற்றங்களைக் கொண்டுவந்தது அவரது தாயாரே. உதாரணத்துக்கு, செல்வந்தர் மற்றும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்த அன்றைய காலகட்டத்தில், ஜஸ்டினை சாதாரண பப்ளிக் ஸ்கூல் என்றழைக்கப்படும் அரசு பள்ளியில் சேர்த்தார். அதுமட்டுமல்லாது, அரசு வாகனம் மற்றும் கார் போன்ற படாடோபமின்றி, பேருந்தில் மற்ற குழந்தைகளுடன் இணைந்து பயணிக்கும் பழக்கத்தையும் வித்திட்டது அவரது தாயாரே. இது போன்ற சில சந்தர்ப்பங்கள், ஜஸ்டினை அவரது தாயாருடன் இருந்த பந்தத்தை மேலும் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

கல்லூரிப் படிப்பும் ஆசிரியர் பணியும்

ஜஸ்டின் இலக்கியத்தில் இளநிலை பட்டப்படிப்பும், கல்வியில் இளநிலை பட்டப்படிப்பும் படித்தார். சிறு வயதிலிருந்து அரசியல் வட்டத்தில் இருந்தாலும், கல்லூரி மற்றும் அதற்குப் பின்வந்த காலங்களில்தான் ஜஸ்டினுக்கு அரசியலில் இறங்க வேண்டிய சரியான ஆவல் பிறப்பெடுத்தது. படிக்கும் நாள்களில் தன்னுடைய பிரதான ஆலோசகரான ஜெரால்ட் பட்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கல்லூரியில் இருந்த பேச்சுக் குழுக்களில் சேர்ந்து, பல பல்கலைக்கழகப் போட்டிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து பங்கேற்றனர். ஜஸ்டின் ஜெரால்ட் நட்பு மெல்ல மெல்ல வளர்ந்தது மட்டுமின்றி, அறிவு சார்ந்த, அரசியல் சார்ந்த சில கருத்துகளையும் அப்போதிலிருந்தே பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

முதலில் இலக்கியப் பட்டப்படிப்பை முடித்த ஜஸ்டின் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களுக்குப் பிரயாணம் மேற்கொண்டார். மற்ற கலாசாரங்களைப் பற்றித் தெரிந்துகொண்டது மட்டுமல்லாது, அந்தந்த நாட்டில் நிலவிய பொருளாதார மற்றும் சமூக சூழலை பற்றியும் ஜஸ்டின் தெரிந்துகொண்ட சந்தர்ப்பமாக அந்த பிரயாணம் அமைந்தது. தான் எடுத்துக்கொண்ட சொந்த அனுபவங்கள் பின்னாளில் அரசியல் பாதையில் செல்ல ஒருவிதத்தில் காரணமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு முடிந்த பின், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தனது இரண்டாவது பட்டப்படிப்பை தொடங்கிய சமயத்தில் அங்கிருந்த இரண்டு பள்ளிகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் நாடக ஆசிரியராகப் பணியாற்றினார் ஜஸ்டின். பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் சேரும் வாய்ப்பாக மட்டுமல்லாது, அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சின்ன திட்டமிடலும் இந்த அனுபவம் மூலம் ஜஸ்டினுக்குக் கிடைத்தது.

படிப்பு, ஆசிரியர் வேலை என்று நாள்கள் நகர்ந்தபோது, ஜஸ்டினின் தந்தை பியர் ட்ரூடோ 2000ஆம் ஆண்டில் மறைந்தார். லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் கனடாவின் முன்னாள் அதிபர் என்ற முறையில் அரசாங்க இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது ஜஸ்டின் அளித்த உரை, பல மக்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. தனது தந்தையுடன் இருந்த நெருக்கம், மற்றும் அவரது அரசியல் பயணத்தைப் பற்றி இருந்த அந்த உரையின் வாயிலாக, தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கான முதல் அடியையும் மக்களின் முன் ஜஸ்டின் அன்று வைத்ததாகவே பல அரசியல் வல்லுநர்கள் அந்த உரையைப் பற்றி விமர்சித்தனர். அந்த உரைக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று ஜஸ்டின் குழுவினர் திட்டவட்டமாக மறுத்தாலும், அதற்கடுத்து வந்த நாள்களில் ஜஸ்டின் மக்களுக்கு மத்தியில் தன்னுடைய முத்திரையைப் பதிக்கும் சில செயல்களில் ஈடுபட்டார்.

அரசியல் பயணம்

அப்போது கட்சித் தொடர்பாளராகப் பணிபுரிந்த தனது பழைய நண்பன் ஜெரால்ட் பட்ஸுடன் தொடர்புகொண்டு அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும், அதற்காகத் தயார் செய்துகொள்வது எப்படி என்று ஆலோசனை செய்தார். அப்போது அரசியலில் எப்படி இறங்க வேண்டும் என்பதற்கு, “முதலில் பின் அமர்ந்து நாடாளுமன்றத்தின் வழக்குகளைக் கவனித்தபடி, அந்தக் கட்சி செய்யும் தவறுகளைக் கண்காணித்துவிடலாம். அந்த நேரத்தில் எனக்கான ஒரு முறையை வகுத்துவிட்டால், மக்களுக்கு எளிதாக சேர்க்க முடியும்'” என்று ஜெரால்டிடம் ஜஸ்டின் பகிர்ந்துகொண்டதாகச் சில பேட்டிகளில் ஜெரால்ட் கூறியுள்ளார். தயார் செய்துகொள்ள வேண்டிய ஆரம்ப கட்டத் திட்டமிடுதலின்போதே, அரசியலில் தந்தையின் பெயரைக் கொண்டுவராமல், தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள ஜஸ்டின் தெளிவாகச் செயல்பட்டார். மக்களுடன் இணைந்து கலக்கும் இந்த நோக்கே, அவரை காட்சியிலும், ஆட்சியிலும் அடுத்தடுத்த இடங்களுக்கு எளிதாகக் கொண்டுசென்றது.

தனக்கென்று ஓர் அடையாளம்

முன்னாள் அதிபருடைய மகன் என்ற அடையாளத்தைப் போக்கும் விதமாக, ஜஸ்டின் முதலில் சில தொழில் துறைகளில் ஈடுபட்டார். மறைந்த தனது தம்பி மற்றும் தந்தையின் நினைவாக இளைஞர்களுக்கான பனிச்சறுக்கு மையம் ஒன்றை நிறுவினார். தவிர இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களில் ஈடுபடுவது, கனடாவின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவது, ஒலிம்பிக் போட்டிகளுக்காகச் செய்தி சேகரித்தது போன்ற பல சாதாரண வேலைகளை ஜஸ்டின் இடைப்பட்ட காலத்தில் செய்துவந்தார். கனடா மக்களுக்கு ட்ரூடோ என்ற குடும்பப் பெயரைத் தாண்டி ஜஸ்டினுடன் அவர்களைப் சம்பந்தப்படுத்திக்கொள்ள இந்த வேலைகள் கச்சிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் மறைவுக்குப் பின், லிபரல் கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது மட்டுமின்றி, 2005ஆம் ஆண்டில் அந்தக் கட்சியில் இளைஞர் அணி மற்றும், இளைஞர்களை சேர்க்கும் ஒரு குழுவையும் ஜஸ்டின் அமைத்தார். அதே சமயத்தில், கனடா அரசியல் மற்றும் சமூக சூழலில் நடந்த விஷயங்களுக்கு மக்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ளும் விதமாக பத்திரிகைகளுக்கு ‘ஓப்பன் லெட்டர்’ எனப்படும் கட்டுரைகளை எழுதினார்.

தொடர்ந்து 2008ஆம் ஆண்டில் பாப்பினுவா என்ற தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நின்று ஜஸ்டின் முதன்முறையாக வென்றார். ஆனால், அப்போது லிபரல் கட்சியால் ஆட்சி அமைக்கமுடியாமல் தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், ஜஸ்டின் எதிர்க்கட்சி உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முதல் அடியை எடுத்து வைத்தார். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தாலும், அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டு ‘தேசிய இளைஞர்களுக்கான சேவை’ திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம், கட்சி வட்டத்துக்குள் முன்னேறிச் சென்றது மட்டுமல்லாது, தேசிய இளைஞர்களுக்கான பல நற்திட்டங்களையும் தொடர்ந்து பரிசீலித்துவந்தார். கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கட்டம் வந்தபோது, மற்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஜஸ்டினை தலைவர் பதவிக்குப் போட்டியிட ஆதரித்தனர். கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தலைவர் பதவியும், மக்களின் ஆதரவுடன் பிரதமர் பதவியும் ஜஸ்டினுக்குக் கிடைத்தது.

அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும், ஜஸ்டினின் இந்தக் காலத்து கொள்கைகளே கனடா மக்களிடம் மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள அனைவரின் ஆதரவையும் பெற்றுள்ளது. ஆண் பெண் சம உரிமைக்காகக் குரல் கொடுப்பது, பெண்ணியம் பற்றி தெளிவாகப் பேசுவது, அகதிகளுக்கு இடம் கொடுத்து சிரியாவிலிருந்து வந்த மக்களை நேரடியாகச் சென்று வரவேற்றது, அனைத்து பண்டிகைகளுக்கும் அந்தந்த மொழியில் வாழ்த்து தெரிவிப்பது என்று ஜஸ்டின் செய்யும் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் அவருடைய அந்தஸ்து மேலும் ஒரு படி மேலோங்கியே உள்ளது. இளைஞர்களையும், உலக பிரச்னைகளையும் சரியாகக் கருத்தில்கொண்டு ஆட்சி செய்வதில் ஜஸ்டின் பல நாட்டு தலைவர்களுக்கு மறைமுகமாகப் பாடம் புகட்டிக்கொண்டேதான் வருகிறார்.

(கட்டுரையாளர் நித்யா ராமதாஸ் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.)

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018