மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மன்மோகன் Vs மோடி - சீர்திருத்தமும் சீரழிவும்!

சிறப்புக் கட்டுரை: மன்மோகன் Vs மோடி - சீர்திருத்தமும் சீரழிவும்!

அசோக் குலாத்தி

2017-18ஆம் நிதியாண்டுக்கான பல்வேறு துறைகளின் மொத்த மதிப்பு கூட்டுதல் (ஜிவிஏ) மற்றும் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆகியவற்றின் முன்கூட்டிய மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன. பல்வேறு பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதமாகச் இருக்குமென்றே மதிப்பிட்டுள்ளனர். மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நான்கு ஆண்டுகளில் இந்தியா அடையும் மிகக்குறைவான ஜிடிபி வளர்ச்சி இதுவாகும். குறிப்பிடத்தகுந்த அளவிலான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தப் பொருளாதார நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 1ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2018-19) பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டமாக இந்தக் கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல விவசாய நெருக்கடி குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இன்றுவரை (2014-15 முதல் 2017-18 வரை) விவசாயிகளின் வருவாய் குறித்து கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் 47 சதவிகித வேலைவாய்ப்புகள் வேளாண் துறை சார்ந்தே உள்ளன. ஆனால் விவசாயிகளின் வளர்ச்சி என்ற திட்டங்கள் இதில் சாத்தியமானதாகத் தோன்றவில்லை. உலக மேம்பாட்டு அறிக்கையில் (2018) குறைந்தபட்சமாக வேளாண் துறை வளர்ச்சி 2-3 மடங்கு இருக்குமென்றும், இதன் மூலம் வறுமை குறையுமென்றும், வேளாண் அல்லாத மற்ற துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

வறுமை ஒழிப்புத் திட்டத்தைப் பொறுத்தவரையில் வேளாண் துறையின் வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. இதில் முன்கூட்டிய மதிப்பீடுகள் வேளாண் துறையின் வளர்ச்சி விகிதம் 4.9 சதவிகிதத்திலிருந்து 2.1 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது என்று கூறுகின்றன. தற்போது மோடி அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் (2014-15 முதல் 2017-18) ஆகிவிட்டன. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் (2004-05 முதல் 2014-15) ஆட்சியிலும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 5 ஆண்டுகளும் (1998-99 முதல் 2003-04), பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசு (1991-92 முதல் 1995-96 வரை) 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்துள்ளன.

விவசாய சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த நான்கு பிரதமர்களின் ஆட்சிக் காலத்திலும் நடந்துள்ளன. குறிப்பாக வேளாண்துறை சீர்திருத்தங்கள் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அப்பேதிலிருந்தே வேளாண் துறையின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவது போன்ற திட்டங்கள் இருந்துகொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போதைய மோடி அரசின் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டமும் உள்ளது. வேளாண் துறை வளர்ச்சி விகிதம் ராவ் ஆட்சிக் காலத்தில் சாதாரணமாக ஆண்டுக்கு 2.4 சதவிகிதமாகச் இருந்தது. அப்போது ஒட்டுமொத்த ஜிடிபி 5.2 சதவிகிதமாகச் இருந்தது.

அடுத்ததாக வந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் வேளாண் துறை சற்று வளர்ச்சியைக் கண்டது. வேளாண் துறையின் வளர்ச்சி விகிதம் 2.4 சதவிகிதத்திலிருந்து 2.9 சதவிகிதமாகச் உயர்ந்தது. அப்போது ஒட்டுமொத்த ஜிடிபியின் வளர்ச்சி விகிதம் 5.2 சதவிகிதமாகச் இருந்தது. அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஜிடிபி விகிதமும், வேளாண் துறையின் வளர்ச்சியும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. அதாவது மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின் முடிவில் வேளாண் துறை 3.7 சதவிகித வளர்ச்சியையும், ஜிடிபி 7.9 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்தது. இதைவிடச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டிய நெருக்கடி அடுத்து வந்த மோடி ஆட்சிக்கு ஏற்பட்டது. ஆனால் மோடி அரசால் கடந்த நான்கு ஆண்டுகளாக இது இயலவில்லை என்றுதான் கூற வேண்டும். மன்மோகன் ஆட்சிக் காலத்தில் வேளாண் துறை வளர்ச்சி விகிதம் முதல் நான்கு ஆண்டுகளில் 1.9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதேபோல ஜிடிபி வளர்ச்சியிலும் மோடி அரசு தனது நான்கு ஆண்டுக் கால வளர்ச்சியில் பெற்ற வளர்ச்சியை விட மன்மோகன் அரசு தனது முதல் நான்கு ஆண்டுக் கால ஆட்சியில் பெற்ற வளர்ச்சி கூடுதலாகும்.

சொல்லப்போனால், ஒவ்வொரு ஆட்சியும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் பல்வேறு பொருளாதாரச் சூழல்களை எதிர்கொண்டன. முந்தைய ஆட்சிக் காலங்களில் வெளிநாட்டுப் பொருளாதார சூழல் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது என்று கூற இயலாது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வறட்சி நீடித்தது. ஆனால் வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் மோடி அரசு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. மோடி ஆட்சிக் காலத்தில் சர்வதேசச் சந்தையில் 50 சதவிகிதம் வரை கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டது. உலகளாவிய பொருட்களின் விலையுயர்வு தற்காலிகமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியது. எனவே, வறட்சியின் சாக்குகளைக் கூறி மோடி அரசு வேளாண் வீழ்ச்சிக்கு சரிக்கட்ட இயலாது. இன்னும் முழுதாக மோடி அரசுக்கு ஒரு வருடம் ஆட்சிக்காலம் உள்ளது. 2018-19ஆம் நிதியாண்டில் வேளாண் துறையின் ஜிடிபி 4 சதவிகிதமாகச் அதிகரித்தாலும் கூட, மோடி ஆட்சியின் ஐந்து ஆண்டுக் கால தோராய வளர்ச்சி விகிதம் 2.3 சதவிகிதமாகச் மட்டுமே இருக்கும். இது வேளாண் துறையின் சீர்திருத்தம் தொடங்கிய ராவ் ஆட்சிக்காலத்தை விடக் குறைவு என்பது வேதனைக்குரிய உண்மை. இந்த வளர்ச்சி விகிதம் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது.

மோடி அரசில் நிலவிய மோசமான வேளாண் துறை செயல்திறனால் வேளாண் துறை சார்ந்த ஏற்றுமதி வர்த்தகமும் சுருங்கியது. மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த 2004-05ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு 3.6 பில்லியன் டாலராக இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் நிறைவுற்ற 2013-14ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு 25.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதாவது பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண் சார்ந்த ஏற்றுமதி மதிப்பு 7 மடங்கு உயர்ந்துள்ளது. மோடி ஆட்சியில் மன்மோகன் ஆட்சியில் உயர்த்தப்பட்ட ஏற்றுமதி மதிப்பைக் கூட காக்க இயவில்லை என்பதுதான் யதார்த்தமான ஒன்றாகவுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வர்த்தகத்தின் மதிப்பு 8.2 பில்லியன் டாலராகச் சுருங்கிவிட்டது. மூன்றே ஆண்டுகளில் இதன் மதிப்பு 2 முதல் 3 மடங்கு வரை சுருங்கிவிட்டது. இது எந்த விதத்தில் இந்திய விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? மோடி பொருளாதார வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது குறித்து ஆலோசித்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 2002-03ஆம் நிதியாண்டு முதல் 2012-13ஆம் நிதியாண்டு வரையில் விவசாயிகளின் வருவாய் ஆண்டுக்கு 3.6 சதவிகிதம் என்றளவில் மட்டுமே அதிகரித்துள்ளதாகத் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (என்.எஸ்.எஸ்.ஒ.) அறிக்கைகள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன. வேளாண் துறை வளர்ச்சி கண்டிருந்த அக்காலங்களிலேயே வருவாய் உயர்வு 3.6 சதவிகிதமாகச் மட்டுமே உள்ள நிலையில், மோடி ஆட்சியின் நான்கு ஆண்டுகளில் ஜிடிபி சரிந்து, ஏற்றுமதியும் சரிந்துள்ளது. பிறகு எப்படி ஊதியம் மட்டும் உயரும் என்று கூற இயலும்?

ஆண்டுக்கு 10.04 சதவிகிதம் விவசாயிகளின் வருவாய் உயர்வை எட்டினால் மட்டுமே 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட இயலும் என்று டல்வாய் கமிட்டி அறிக்கை கூறுகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த இலக்கை அடைவதென்பது சாத்தியமானதல்ல. 2012-13ஆம் நிதியாண்டு முதல் 2016-17ஆம் நிதியாண்டு வரையில் விவசாயிகளின் வருவாய் வளர்ச்சி என்பது தோராயமாக ஆண்டுக்கு 2.5 சதவிகிதமாகவே உள்ளது என்றும் டல்வாய் கமிட்டி அறிக்கை கூறுகிறது. 2.5 சதவிகித வளர்ச்சியிலிருந்து 10.4 சதவிகித வளர்ச்சி இலக்கை அடைதல் என்பது உண்மையிலேயே மிகவும் சவாலான ஒன்றாகும். 2022ஆம் ஆண்டுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் மீதமிருக்கின்றன. மோடி அரசால் இதைச் சாத்தியமாக்க இயலுமா?

நன்றி: ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்

தமிழில்: பிரகாசு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018