கார்களைத் திரும்பப் பெறும் ஹோண்டா!


காற்றுப் பைகளில் ஏற்பட்டுள்ள கோளாறுகளைச் சரிசெய்து தருவதற்காக இந்தியாவில் சுமார் 22,834 கார்களைத் திரும்பப் பெறுவதாக ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ், இந்தியாவிலும் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கிக் கார்களைத் தயாரித்துப் பெருமளவில் விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா நிறுவனக் கார்களுக்கான காற்றுப் பைகளை (ஏர் பேக்) ஜப்பானைச் சேர்ந்த டகாடா நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகிறது. சர்வதேச அளவில் காற்றுப் பைகளில் கோளாறு ஏற்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் சுமார் 22,834 கார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப்பெற்று சரிசெய்து தருவதாக அறிவித்துள்ளது. இக்கார்கள் 2013ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அக்கார்டு, ஜாஸ் மற்றும் சிட்டி ஆகிய மாடல் கார்களாகும்.