இந்தியப் பொருளாதாரம் 7.1 % வளர்ச்சி!


அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் ஜனவரி 18ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’வலுவான நுகர்வுத் தேவை மற்றும் குறைவான பொருட்களின் விலை ஆகிய காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக உயரும். ஜிஎஸ்டி மற்றும் வங்கி திவால் சட்டம் ஆகியவற்றின் சீர்திருத்தங்களிலிருந்து படிப்படியான வளர்ச்சி ஏற்படும். 2017-18ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும். இடைக்கால நிதியாண்டுக் கொள்கை நிலையில் நிதிப்பற்றாக்குறை 3 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் விரைவில் (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் விவசாயத்துக்கு இதில் முக்கியத்துவம் தரப்படும் என்று கருதப்படுகிறது. 2018-19ஆம் நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 4.6 சதவிகிதமாகவும், மொத்த விலைப் பணவீக்கம் 4.4 சதவிகிதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணிகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2018-19ஆம் நிதியாண்டில் தோராயமாக 66.06 டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.