மல்லையா நிறுவனப் பங்குகள் விற்பனை!

தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் அவருக்குச் சொந்தமான பங்குகளை விற்று பணம் திரட்ட மத்திய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. விஜய் மல்லையா செலுத்த வேண்டியிருக்கும் கடன் தொகையில் பாதியை, இதன் மூலம் திரட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளில், தனது நிறுவனத்தின் சார்பாகப் பல ஆயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்றார் விஜய் மல்லையா. கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாமல், அவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுவிட்டார். அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
தற்போது விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை விற்று பணம் திரட்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் அவர் வசமிருக்கும் 15.2 சதவீத பங்குகளை விற்க மத்திய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. பணப் பரிவர்த்தனை மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த பங்குகள் அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை விற்பதன் மூலமாக 4,327 கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா செலுத்த வேண்டியிருக்கும் கடன் தொகையில் பாதியை, இதன் மூலம் திரட்ட முடியும் என்று கூறப்படுகிறது. மீதமிருக்கும் 27 லட்சம் பங்குகளும் விரைவில் மத்திய அமலாக்கத்துறைக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. இதனை விற்பதன் மூலமாக, மேலும் சில ஆயிரம் கோடிகள் திரட்டப்படும் என்று கூறப்படுகிறது.