மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

தமிழில் போட்டித் தேர்வுகள் எழுத அனுமதி!

தமிழில் போட்டித் தேர்வுகள் எழுத அனுமதி!

மத்திய அரசுப் பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள குரூப் பி, சி, டி பிரிவு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகள், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. தேசிய அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பாரபட்சமான அணுகுமுறை வடமாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியிருக்கிறார் திமுக செயல்தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். இந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்த அநியாயமான கட்டுப்பாடுகளைத் திணிப்பதன் மூலமாகத் தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கான 2016 போட்டித்தேர்வு முடிவுகளில் (Combined Graduate level Examination) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 111 பேர் தேர்வாகியிருக்க, டெல்லியில் இருந்து 3,922 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; கடந்த 5 ஆண்டுகளாகவே தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வட மாநிலங்களிலிருந்து பணியில் அமர்த்தப்பட்டுள்ள பெரும்பாலான பணியாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர்களும் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குப் பணியிட மாறுதல் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவதால், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் அதிகரித்துவிட்டன.

பாகுபாடுகள் நிறைந்த இந்தத் தேர்வு முறை, ஒருபக்கம் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதோடு, மறுபக்கம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏராளமான காலிப் பணியிடங்களை உருவாக்குகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், மத்திய அரசு அலுவலகங்களின் மூலம் தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டிய பயனுள்ள நிர்வாகமும், இந்த பொருத்தமற்ற தேர்வு நடைமுறையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான தேர்வு எனும் இந்த நடைமுறை, தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் தாங்கொணாத் துயரையும் வேதனையையும் உண்டாக்கியுள்ளது. "அரசின் வேலைவாய்ப்பு அல்லது வேலை நியமனங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்று நமது அரசியலமைப்புச் சாசனத்தின் 16ஆவது பிரிவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அரசியலமைப்பு சாசனச் சட்டத்தின் இந்தக் கொள்கையின் அடிப்படையில், மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, பாகுபாடுகளை உடனே களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வுகளை தாய்மொழியான தமிழில் எழுத, தமிழக இளைஞர்களை அனுமதிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018